திங்கள், 3 ஆகஸ்ட், 2009

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு தீர்மானங்கள்



மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் சென்னை - எழும்பூரில் 01.08.2009 அன்று பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.


தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீது, துணைப் பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, அமைப்புச் செயலாளர்கள் மண்டலம் எம்.ஜெய்னுலாபுதீன், நாசர் உமரி, மதுரை கௌஸ், தலைமை நிலையச் செயலாளர் முஹம்மது இஸ்மாயீல் உட்பட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.


இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:


1) எதிர்வரும் 18.08.2009 அன்று தமிழகத்தில் நடைபெறவிருக்கும் ஐந்து சட்டமன்ற இடைத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி யாரையும் ஆதரிக்காது என தீர்மானிக்கப்படுகின்றது.


எந்த அரசியல் திருப்புமுனையும் ஏற்படுத்தாத இந்த இடைத்தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களில் தொகுதி மக்களின் நலன் பேணுவதில் அக்கரையுள்ள வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதே நேரத்தில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி ஆதரித்து பிரச்சாரம் செய்யாது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.


2) சிறுபான்மை மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ள நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அமல்படுத்துமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


3) இலங்கையின் அகதி முகாம்களில் முள்வேலிகளுக்கு மத்தியில் அகதிகளாக வாழும் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களின் நலன்கள் குறித்து இச்செயற்குழு ஆழ்ந்த கவலை தெரிவித்துக்கொள்கிறது.


அங்கு வாழும் தமிழர்களின் நிலையறிய இந்தியாவிலிருந்து உண்மை அறியும் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று இச்செயற்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


4) விலைவாசி உயர்வில் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கும் யூகபேர (Online) வணிகத்தை மத்திய அரசு தடைசெய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


5) இந்தியர்களின் கலாச்சாரத்திற்கும் மனித குலத்திற்கும் எதிரான ஓரினச்சேர்க்கை சீர்கேட்டுக்கு எக்காரணம் கொண்டும் சட்ட அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


6) பாலாற்றின் குறுக்கே அணைக்கட்டும் முயற்சியை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்றும், நதி நீர் விவகாரங்களில் அண்டை மாநிலங்களுக்கிடையே சுமூகமான உறவுகள் ஏற்பட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.


7) வாக்குப் பதிவு இயந்திரத்திற்கு எதிராக பெரும்பாலான அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை மாநில அளவிலும் தேசிய அளவிலும் கூட்டி இறுதி முடிவெடுக்க வேண்டும் என்றும், இச்செயற்குழு மத்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறது.


8) மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் பிரக்கியா சிங் தாகூர் ஆகிய இருவர் மீதும் பயங்கரவாத தடுப்பு படை போட்டிருந்த மோகா சட்டம் செல்லாது என்று மும்பை சிறப்பு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கவலை அளிக்கின்றது. மராட்டிய அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு இந்த இருவர் மீதும் மீண்டும் மோகா சட்டம் விதிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.


9) செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளை யட்டி பொதுமன்னிப்புடன் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்துவரும் நிலையில் இவ்வருடம் பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை பெற்ற முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு பரீசிலிக்க வேண்டும் என இச்செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை: