புதன், 12 ஆகஸ்ட், 2009

ரூ. 25 லட்சம், 65 பவுன் மோசடி-பில்லி, சூனிய சாமியார் கைது

நெல்லை: பில்லி, சூன்யம் நீக்குவதாக கூறி ரூ. 25 லட்சம் பணம், 65 பவுன் நகைகளை மோசடி செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

பாபநாசம் பொதிகையடியில் அய்யாவழி என்று கூறிகொண்டு சுவிசேஷமுத்து என்பவர் குறி சொல்லி வந்தார். அவருடன் அவரது மனைவி ராமலெட்சுமி உதவி செய்து வந்துள்ளார்.

சுவிசேஷமுத்து அங்கு வருபவர்களுக்கு பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் மாந்தரீகம் மூலம் சரி செய்வதாக கூறுவார். மேலும் தனக்கு சாமி அருள் வந்ததாக சொல்லி ஆடுவாராம். குறி சொல்லும் போது தன்னிடம் வந்தவர்களிடம் பணம் வாஙகி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

சில வாரங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி அன்னலெட்சுமி என்பவர் சுவிசேஷமுத்து மீது போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஓன்றை கொடுத்தார். அந்த புகாரில் சுவிசேஷமுத்து தனது பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறி தன்னிடம் 65 பவுன் நகையையும், ரூ. 25 லட்சமும் வாங்கி மோசடி செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சுவிசேஷமுத்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 3ம்தேதி சுவிசேஷமுத்து முன்ஜாமீன் பெற்று, தினமும் காவல் நிலையத்தில் வந்து கையெழுத்து போட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று அம்பை வேலாயுதப்புரத்தை சேர்ந்த விவசாயி மணி மற்றும் வழுதூரை சேர்ந்த பிரம்மநாயகம் ஆகியோர் தங்களிடம் சுவிசேஷமுத்து ரூ.35 ஆயிரம் வாங்கி மோசடி செய்ததாக அவர் மீது விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்தார். இந்நிலையில் டாணா பஸ் நிலையத்தில் சுவிசேஷமுத்துவை போலீசார் கைது செய்து அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கருத்துகள் இல்லை: