புதன், 12 ஆகஸ்ட், 2009

ஈ ஆடும் தனியார் பி.இ. கல்லூரிகள்

தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளை இம்முறை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். கவுன்சிலிங் முடிந்த நிலையில் பலவற்றில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 440 பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கைக்கான கவுன்சிலிங் முடிவடைந்தது. 1 லட்சத்து 9 ஆயிரத்து 829 இடங்களுக்கு நடத்தப்பட்ட கவுன்சிலிங் முடிவில் 78 ஆயிரத்து 664 இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள சுமார் 31 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கின்றன.

இது கடந்த ஆண்டு சேர்க்கையை (75 ஆயிரத்து 92) விட சுமார் 3 ஆயிரத்தும் கூடுதலாக இருந்தாலும், இந்த ஆண்டு புதிததாக 92 கல்லூரிகள் திறக்கப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறுகையில், தமிழகத்தில் இருக்கும் 440 பொறியியல் கல்லூரிகளில் 26ல் தான் அனைத்து சீட்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இவற்றில் 24 அண்ணா பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்.

இந்த கல்லூரிகளில் இருந்த 10 ஆயிரம் சீட்கள் முடிந்துவிட்டன. மாநிலத்தில் உள்ள 32 தனியார் கல்லூரிகளில் 20 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர். அந்த கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்றார் மன்னர் ஜவஹர்.

இதை தவிர்த்து, 135 சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், அரசு பொறியியல் நிறுவனங்களுக்கு நல்ல மதிப்பு உருவாகியுள்ளது. 38 அரசு கல்லூரிகளல் 99 சதவீதத்துக்கு மேலான இடங்கள் நிரம்பிவிட்டன.

தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி ஆணையர் வி.கே.ஜெயகொடி கூறுகையில்,

தற்போது காலியாக இருக்கும் சீட்கள் கல்லூரி நிர்வாகத்தினரால் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் மாதம் 4ம் தேதி கடைசி நாள் என்றார் அவர்.

இந் நிலையில் பிளஸ் 2 தேர்வில் உடனடி மறு தேர்வின் மூலம் தேறிய சுமார் 880 மாணவர்கள் இன்று கவுன்சிலிங்கில் கலந்து கொள்கின்றனர்.

நாளை அருந்ததியர் உள் ஒதுக்கிட்டில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தாழ்த்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதன் பின்னரும் சுமார் 30 ஆயிரம் சீட்கள் காலியாக இருக்கும் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: