உலகிலே சாலைவிபத்துக்கு அதிக உயிர்களை பலி கொடுக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு சுமார் 13 பேர் பலியாகி வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் தனது முதல் சாலை பாதுகாப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, தற்போது ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் சுமார் 12 லட்சம் பேர் பலியாகி வருகிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால் 2030ம் ஆண்டு சாலை விபத்துக்கள் பெரும் பிரச்சனையாக மாறிவிடும். உலக அளவில் அதிக உயிர்களை பலி கொள்ளும் வரிசையில் ஐந்தாவது இடத்தை பிடிக்கும்.
தற்போது சாலை விபத்துக்களிலும் உயிரிழப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்தவர்கள். ஆனால், இங்கு உலக வாகனங்களில் 48 சதவீதம் தான் இயக்கப்படுகிறது. மீதம் 52 சதவீத வாகனங்கள் இயக்கப்படும் வளர்ந்த நாடுகளில் விபத்துக்களில் உயிரிழப்பு பெருமளவுக்கு தடுக்கப்பட்டுவிட்டது.
அதேநேரம் சாலைவிபத்தில் இந்தியர்கள் தான் அதிகம் பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட வேண்டியுள்ளது. இந்தியாவை விட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் கூட சாலைவிபத்தில் பலியாவோர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கிறது.
இந்தியாவில் கடந்த 2007ல் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பலியாகி இருக்கிறார்கள். ஆனால், சீனாவில் வெறும் 89 ஆயிரத்து 455 பேரும், அமெரிக்காவில் 42 ஆயிரத்து 642 பேரும் பலியாகியுள்ளனர். இது இங்கிலாந்தில் வெறும் 3 ஆயிரத்து 298 ஆக இருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 13 பேர் பலியாகி வருகின்றனர். அதாவது 5 நிமிடத்துக்கு ஒருவர் பலியாகுகிறார்கள்.
இந்தியாவில் அதிக சாலைவிபத்துகள் ஆந்திராவில் தான் நடக்கிறது. மொத்த விபத்துக்களில் 12 சதவீதம் இங்கு நிகழ்கிறது. இதை தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா 11 சதவீத விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்தியாவில் விபத்துக்கள் அதிகரிப்பதற்கு வாகன ஓட்டிகள் வேகமாக செல்வதே காரணம். சராசரி வேகத்தை விட 5 சதவீதம் அதிவேகத்தில் செல்பவர்களுக்கு விபத்தினால் காயம் ஏற்படும் வாய்ப்பு 10 சதவீதமும், மரணம் சம்பவிக்கும் அபாயம் 20 சதவீதமும் அதிகரிக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஐநாவின் ஆசிய சாலை பாதுகாப்பு கமிஷன் தலைவர் ரோகித் பலுஜா கூறுகையில்,
இந்தியாவில் விஞ்ஞானபூர்வமான சாலை பாதுகாப்பு முறைகள் இன்னும் கொண்டு வரப்படவில்லை. இந்த முறைகள் 1930களில் இருந்தே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்து வருகிறது என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக