வியாழன், 6 ஆகஸ்ட், 2009

வரதட்சணை வாங்காகூடாது-பொட்டல்புதூர் ஜமாத் முடிவு!

ஆழ்வார்குறிச்சி: திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் நகையோ, பணமோ வரதட்சணையாக வாங்குவது இல்லை என்று பொட்டல்புதூர் ஷாஃபி ஜமாத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து மதத்திலும் திருமணத்தின் போது பெண் வீட்டார்கள் மாப்பிள்ளை வீட்டாருக்கு பெரும் தொகையையும், தங்கநகைகளையும் வரதட்சணையாக கொடுத்து திருமணம் முடித்து கொடுக்கிறார்கள். சமீப காலமாக அதிக வரதட்சணை பெறுவதை மாப்பிள்ளை வீட்டார்கள் கவுரவம் என்று நினைக்கும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.

இதனால் ஏழை கன்னிப் பெண்கள் தங்களுக்கு நினைத்தபடி திருமணம் நடக்குமா? என்று ஒரு தவிப்புடன் காத்திருக்கும் காலம் இது. இதற்கிடையே தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டதால் தங்களது மகள்களின் திருமண விழாவை நடத்துவதில் பெற்றோர்கள் அதிக சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் ஷாஃபி பள்ளி ஜமாத்தினர் திருமணத்துக்கு வரதட்சணை வாங்குவது இல்லை என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

பொட்டல்புதூர் ஷாபி பள்ளி ஜமாத் சார்பாக `வரதட்சணை ஒழிப்பு` சம்பந்தமான 2 நாள் கருத்தரங்கு பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் திரளான இளைஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் வரதட்சணையால் பெண் வீட்டார்படும் துயரங்கள் குறித்து விளக்கி பேசினர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருமணத்தின் போது மணமகன், மணமகளுக்கு கொடுக்கும் நன்கொடைகளை (மகர்) கொடுத்தே திருமணம் செய்ய வேண்டும். திருமணத்திற்கு உள்ளூர் அல்லது வெளியூரை சேர்ந்த மாப்பிள்ளை மற்றும் அவரது வீட்டார்கள் வரதட்சணையாக பெண் வீட்டாரை நிர்ப்பந்தப்படுத்தி பணமோ, நகையோ, பொருட்களையோ பெற்றுக் கொள்ள மாட்டோம். இதற்கான உறுதி மொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும்.

வெளியூர் ஜமாத் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தாலும் மேற்படி உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பம் வாங்கிய பின்னரே மணமகனுக்கு திருமணத்திற்கான தடை இல்லா சான்று வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விளக்க கூட்டம் மறுநாள் நடந்தது. கூட்டத்துக்கு ஜமாத் தலைவர் ஹாஜி முகம்மது அலி தலைமை தாங்கினார். ஷாஃபி பள்ளி வாசல் பேஷ் இமாம் முகம்மது முஸ்தபா தீர்மானங்களை பாராட்டி பேசினார். மேலப்பாளையம் மவுலவி ஹாஜா உசேன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் அனைத்து மதம், சமுதாயத்தை சேர்ந்தவர்களும் வரதட்சணை வாங்காமல் திருமணம் நடத்த வேண்டும் என்று எடுத்துரைக்க முடிவு முடிவெடுக்கப்பட்டது.

மற்ற ஊரார்களும் இதை பின்பற்றலாமே!

Source: தினத்தந்தி

கருத்துகள் இல்லை: