கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜூலை, 2010

8ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது- தமிழக அரசு உத்தரவு

ஜுலை.24:எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,

தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது.

எந்த மாணவரையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது".

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

புதன், 7 ஜூலை, 2010

சர்வதேச அளவில் சாதித்த சல்மா ஃபாரூக்


நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்தவர் முஹம்மது பாரூக். இவர் செசல்ஸ் தீவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் நிறுவன உரிமையாளராக உள்ளார். இவரின் மகள் சகோதரி சல்மா செசல்ஸ் தீவில் உள்ள சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். சர்வதேச அளவில் 100 நாடுகளை சேர்ந்த 2,000 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற “இண்டர்நேசனல் ஜெனரல் சர்டிபிகேட் ஆப் செகண்டரி எஜிகேசன்ஸ்” என்ற தேர்வு கடந்த ஆண்டு (2009) அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதனுடைய சர்வதேச முடிவுகள் சில தினங்களுக்கு முன் வெளியானது. இதில் கலந்துக்கொண்ட சகோதரி சல்மா சர்வதேச அளவில் மூன்று பாடங்களில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளார்.


ஆங்கில இலக்கிய பாடப்பிரிவில் சல்மா ஃபாரூக் சர்வதேச அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார். மேலும் உயிரியல் பாடத்தில் மூன்றாம் இடத்தையும், புவியியல் பாடத்தில் ஒன்பதாம் இடத்தையும் பெற்றுள்ளார். இன்பர்மேசன் கம்யூனிகேசன் மற்றும் புவியியல் பாடங்களில் செசல்ஸ் தீவில் சிறப்பிடத்தையும், இயற்பியல் பாடத்தில் அதீத சாதனைக்கான விருதையும் பெற்றுள்ளார். பத்து பாடங்களிலும் 95 சதவீதத்திற்கு மேல் பெற்றுள்ளதால் இவருக்கு “ஏ ஸ்டார் (A-Star)” என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.


,


வியாழன், 12 நவம்பர், 2009

முஸ்லிம் மாணவர்களை அலைக்கழிக்கும் மருத்துவ தேர்வுக்குழு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தாசில்தார் முஹம்மது சதக்கத்துல்லாஹ். இவரின் மகன் ஷேக் அப்துல்லா (18). இவர் +2வில் 1200க்கு 1135 மதிப்பெண் பெற்றார். இவருக்கு மருத்துவக் கல்லூரியில் கவுன்சிலிங் மூலம் சேர வாய்ப்பு வந்ததையடுத்து மருத்துவக் கவுன்சிலிங்கிற்காக 29.9.2009 அன்று சென்னை கீழ்ப்பாக்கத்திற்குச் சென்றார்.
அன்று கவுசிலிங்கில் தேர்ந்தெடுக்கப் பட்ட இவருக்கு கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் என்ற ஊரில் உள்ள மூகாம்பிகை மருத்துவக் கல்லூரியில் சேர இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சேர்க்கைக்கான உத்தரவை அன்று வழங் காமல், மறுநாள் வழங்குகிறோம் என்று மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். ஆனால் மறுதினம் அவர் குறிப்பிட்ட கல்லூரியில் சேரவேண்டும் என்பதால் 'இன்றே உத்தரவை கொடுங் கள் என்று மாணவர் தரப் பில் கெஞ்சிக் கேட்டும் தேர்வுக் குழுவி னர் மறுத்து விட்டு 'நாளை வாருங்கள். நாங்களே இன்று பேக்ஸ் அனுப்பி விடுகிறோம்'' என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து 30.9.09 அன்று மதியம் 1.45 மணியளவில் மாணவருக்கான அனுமதி ஆணையை கொடுத்துள்ளனர். உடனடியாக அந்த ஆணையை பேக்ஸில் மாணவரே கல்லூரிக்கு அனுப்பிவிட்டு, விமானத்தில் போக முடியாததால் காரில் புறப்பட்டு கன்னியாகுமரி சென்றனர். நள்ளிரவு நேரமாகி விட்டதால் அடுத்த நாள் (31.9.09) காலையில் சென்று நடந்தவற்றை கூறியுள்ளனர். ஆயினும், 30.9.09 அன்று மாலையே மாணவர் சேர்க்கை முடிந்துவிட்டதால் மாணவரை தங்கள் கல்லூரியில் சேர்க்க இயலாது என்று கல்லூரி நிர்வாகம் திட்டவட்டமாக கூறிவிட்டது. 29.9.09 அன்று மாலையே பேக்ஸ் அனுப்பி விடுவதாக சொன்ன தேர்வுக் குழுவினர், சொன்னபடி கல் லூரிக்கு பேக்ஸ் அனுப்பவில்லை. மறுநாள் மாணவர் அனுப்பி பேக்ஸும் கல்லூரி நிர்வாகத்தால் ஏற்கப்படவில்லை.

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மாணவர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மாணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு உடனடியாக மாற்று ஏற் பாடுகளை செய்ய உத்தரவிட்டது. எனினும் இதுவரை மாணவருக்கான சீட் ஒதுக்கப்படவில்லை. மருத்துவ தேர்வுக் குழுவினர் முஸ்லிம் மாணவரின் மருத்து வக் கல்வியை நாசமாக்க, திட்டமிட்டே செயல்பட்டுள்ளனர். 29.9.09 அன்றே மாணவருக்கு அதுவும் கன்னியாகுமரி கல்லூரியில் அடுத்த நாளே சேரவேண்டிய மாணவருக்கு கடைசி தினத்தன்று ஆணை வழங்கியது உள்நோக்கம் கொண்டது. ஏற்கனவே தேர்வுக் குழு வினால் சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் அலைக்கழிக்கப்பட்டு கடைசி யாக செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இடம்பெற்றார்.

தமிழக அரசின் சிறுபான்மையினர் ஒதுக்கீட்டில் இடம்பெறுவதற்கே மாணவர்கள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியுள்ளது. முஸ்லிம் மாணவர்களின் கல்வியை திட்டமிட்டே சீர்குலைக்க நினைக்கும் மருத்துவத் தேர்வுக்குழுவின் மீது நடவடிக்கை எடுத்து அம்மாணவருக்கு கன்னியாகுமரியில் இல்லாவிட்டாலும் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க அரசு நடவடிக்கை எடுத்து முஸ்லிம் மாணவரின் கனவை நனவாக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட தடை!

சென்னை: ஜன்னல் வைத்த ஜாக்கெட்களைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண் ஆசிரியர்களும் உடைக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு ஏற்கனவே உடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஆசிரியை என்றால் புடவை, ஜாக்கெட்டில்தான் வர வேண்டும் என்று உள்ளது. அதேபோல ஆசிரியர்கள் வேட்டி-சட்டை அல்லது பேன்ட், சட்டையில் வரலாம். மாறாக டி சர்ட், ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றில் வரக் கூடாது என்று தடை உள்ளது.

ஆனால் இந்த உடைக் கட்டுப்பாட்டை பல ஆசிரியர், ஆசிரியைகள் மீறி வருவதாக புகார் எழுந்தது.

குறிப்பாக மாணவ, மாணவியர் இணைந்து படிக்கும் கோ எட் பள்ளிகளில், ஆசிரியைகள் சிலர் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் வருவதாகவும், ஸ்லீவ்லெஸ் போன்ற ஜாக்கெட்டுகளில் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதேபோல சில ஆசிரியகள், ஜீன்ஸ் பேன்ட், டேஞ்சர், டச் மீ, வான்னா மீ உள்ளிட்ட குண்டக்க மண்டக்க வார்த்தைகள் அடங்கிய டி-சர்ட்களில் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தற்போது கட்டுப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உடைக் கட்டுப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை கண்டிப்பாக ஆசிரியர், ஆசிரியைகள் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஆண்களாக இருந்தால் வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணியலாம். ஜீன்ஸ் பேண்ட், பனியன் ஆடை குறிப்பாக டி.சர்ட் அணியக்கூடாது. வாசகங்கள் போடப்பட்ட ஆடைகளை அணியவே கூடாது.

ஆசிரியையாக இருந்தால் சேலை உள்ளிட்ட கவுரவமான ஆடைகளை அணியலாம். சேலைதான் எல்லோரும் அணிகிறார்கள். அதுவும் ஆபாசம் இன்றி கட்ட வேண்டும்.

ஜன்னல் வைத்த ஜாக்கெட் மற்றும் உடல் தெரியும் வகையிலான லேசான ஆடைகளைப் போட்டுக் கொண்டு உடல் தெரியும்படி வரக் கூடாது.

ஆடை கட்டுப்பாட்டை மீறி நடக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடப்படும். அடிக்கடி கண்காணிக்கும்படியும் அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு, 25 ஜனவரி, 2009

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு

டெல்லி: மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு சமமாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசாக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், சிபிஎஸ்இ மாணவ, மாணவியருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளன.

உதாரணத்திற்கு மதரசாவில் ஒரு மாணவன் ஐந்தாவது வகுப்பு படிப்பதாக இருந்தால், அதே வயதுடைய சிபிஎஸ்இ மாணவன், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான்.

இதனால் மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மத்திய அரசு கூறப்பட்டு வந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை, சிபிஎஸ்இ சான்றிதழ்களுக்கு நிகராக மதிப்பிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதரசாக்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிகரான அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அகமது சிராஜ் என்ற 13 வயது மாணவன் டெல்லி சாந்தினி சவுக் மதராசாவில் 5ம் வகுப்பு படிக்கிறார். ஆனால் மற்ற பள்ளிகளில் பயிலும் இவன் வயதுடைய மாணவர்கள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிராஜ் இன்னும் மூன்று ஆண்டுகளில் கல்லுரியில் சேர வேண்டும். ஆனால் இவர் இதுவரை மத புத்தகங்களை மட்டுமே படித்துள்ளார். கல்லுரியில் தான் முதன்முறையாக ஆங்கிலம் மற்றும் கணிதத்தை படிக்க இருக்கிறார்.

இவரது சீனியர்கள் பலரும் உருது மற்றும் யுனானி கற்று வருகின்றனர். ஆனால் தான் வித்தியாசமாக சமஸ்கிருதம் படிக்க போவதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரபி மொழியை பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது போல தான் சமஸ்கிருதமும். அடுத்து சமஸ்கிருதம் படிப்பேன். சிபிஎஸ்இயின் அறிவிப்பு எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார் சிராஜ்.

ஜெய்சுமுதீன் என்பவர் கூறுகையில், அரசின் முடிவால் தற்போது எங்களால் டாக்டர் மற்றும் என்ஜீனியர்களாக முடியும். பிபிஓக்களிலும் வேலை பார்க்க முடியும் என்றார்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், தேவைப்பட்டால் மதரசா மாணவர்களுக்கு பாடங்களை அடிப்படையிலிருந்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.