தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக அரசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜூன், 2012

மருத்துவர்கள் நியமனத்தில் பச்சை துரோகமா?

தமிழக அரசு மருத்துவர் நியமனத்தில் முஸ்லிம்களுக்கு பச்சை துரோகம் செய்ததா? - பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
தமிழ்நாடு அரசு சமீபத்தில் அரசு சார்ந்த மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக தற்காலிகமாக நியமனம் செய்த மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம இல்லை என்று முதலில் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீனும் அதன் பின்னர் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களும் அறிக்கை வெளியி்ட்டனர். இவர்களை அடிபிசகாமல் பின்பற்றி சமுதாயத்தில் பொய்யை மூலதனமாக கொண்டு இயங்கும் ஒரு தறுதலை அமைப்பு போராட்டம் கூட நடத்தியது. தமிழக அரசு சமீபத்தில் நியமனம் செய்த தற்காலிக மருத்துவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை என்பது உண்மை தானா என்பதை ஆய்வுச் செய்தோம்.

புதுக்கோட்டை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் உச்சபட்ச நிலையில் இருந்த நிலையில் கத்தாரில் இருந்த நானும் அ. அஸ்லம் பாஷாவும் இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் விஜயிடம் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு கேட்ட போது அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட துறையிடம் விசாரித்து வந்ததும் தகவல் தருவதாக கூறினார். இதன் பிறகு அமைச்சரே தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு தமிழக அரசின் மருத்துவத் துறைக்கு 10A 1 விதிமுறையின் படி ஜனவரி 20 முதல் மார்ச் 27 வரை 688 மருத்துவர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டதாகவும் இதில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 24 மருத்துவர்களும் திறந்த போட்டியில் (Open Competition) 28 மருத்துவர்களும் நியமனம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். இது குறித்து எழுத்துபூர்வமாக தகவல் அளிக்கும் படி கேட்டுக் கொண்டோம். புதுக்கோட்டையிலிருந்து சென்னை திரும்பியவுடன் தகவல் அளிப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சென்னை திரும்பிய பிறகு அவரை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது மற்றும் கல்வி வழிகாட்டித் துறையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எம்.எப். கான் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமைச்சர் 688 மருத்துவர்களில் 52 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்ட பட்டியலை வழங்கினார். அமைச்சர் அளித்த பட்டியலை நாம் ஆய்வுச் செய்ததுடன் மருத்துவர் நியமன வாரியத்தின் அதிகாரிகளுடன் பேராசிரியர் எம்.எப். கானும், மனிதநேய மக்கள் கட்சியின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் திருவள்ளுர் இஸ்மாயிலும் விளக்கம் கேட்டனர். பேராசிரியர் காதர் மைதீனும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் இவர்கள் வெளியிட்ட அறிக்கையை நம்பி ஆய்வுச் செய்யாமல் முற்றுகை போராட்டம் அறிவித்த ஜைனுல் ஆபிதீனும் விவரம் என்னவென்று அறியாமல் விசாரணை எதுவும் செய்யாமல் செயல்பட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிந்தது.
மக்கள் நல்வாழ்வு துறையின் இணையத் தளத்தில் தற்காலிக மருத்துவர் நியமனத்திற்காக மார்ச் 26 மற்றும் 27ல் கலந்தாலோசனைக்கு (counselling) தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 1384 மருத்துவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதில் ஒருவர் கூட முஸ்லிம் இல்லை. ஆனால் இது நியமனம் பெற்றவர்களின் ப்ட்டியல் இல்லை. கலந்தாய்விற்கான பட்டியல் தான். இந்த பட்டியல் பல்வேறு கட்டங்களாக ஜனவரி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வந்த கலந்தாய்வில் கடைசி 2 கட்டங்களுக்கான கலந்தாய்விற்காக அழைக்கப்பட்டவர்களின் பட்டியல். அப்போது ஏன் முஸ்லிம்கள் ஒருவர் கூட இந்த பட்டியலில் இல்லை என்றால் இந்த கடைசி 2 கட்ட கலந்தாய்வுக்கு முன்பாகவே முஸ்லிம் மருத்துவர்கள் 52 பேர் நாம் முன்பே குறிப்பிட்டது போல் நியமனம் செய்யப்பட்டு விட்டார்கள. இப்படி நாம் சொல்லும் போது இந்த 1384ல் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லையா என்ற கேள்வி எழும். இந்த 1384 பேரையும் சேர்த்து கலந்தாய்வுக்காக 5856 மருத்துவர்கள் அழைக்கப்பட்டார்கள். இவர்களில் 1963 மருத்துவர்கள் மட்டுமே 2012 ஜனவரி 20, 21, 22. 23 மற்றும் மார்ச் 22, 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற கலந்தாய்வில் பங்குக் கொண்டார்கள். இவர்களில் கலந்தாய்வுக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட 835 இடங்களுக்கு 688 பேர் நியமனம் செய்யப்பட்டார்கள் என்பதை மருத்துவத் துறை நமக்கு விரிவாக பட்டியலை அளித்துள்ளது. அந்த பட்டியலின் சுருக்கும் இதோ



688 மருத்துவர்களில் திறந்த போட்டியில் 28 பேர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 பேர் ஆக மொத்தம் 52 முஸ்லிம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் விபரம் வருமாறு
1. சமீமா 2. சைய்யது அப்துல் காதர் 3. அஹ்மது ஷேக் 4.ஜின்னா 5. எஸ்.எம். இம்தியாஸ் 6.எஸ. நர்கீஸ் 7. எஸ். சையது பாகர் 8.ஆர். மன்சூரா சாஹிபா 9. ஏ. உஸ்மான் 10.முஹம்மது மீரான் 11. ஏ. கதீஜா சமீஹா 12. பி. சமீமா 13. ஏ. அர்ஷியா தபசும் 14.ஏ. ஆரிப் உதுமான் முகைதீன் 15. எம் ஆசிக் அல் முஹம்மது 16.நிலோபர் நிஷா 17.எஸ். அலிமா பானு 18.ஏ. அஸ்கர் அலி 19.பி. சாகுல் ஹமீத 20.எம். சபீனா 21.ஏ. மரிஜியா 22.ஷேக் முஹம்மது ராஜா 23. ஏ. சலீம் 24. ஆர். முஹம்மது ஹில்மி 25. சைய்யது அப்துல்லா முஹம்மது அமீன் 26. சைய்யது நிஷான் பாத்திமா 27. பி.ஐ. சாஜித் அலி 28.எம். பைரோஸ் 29.எம. முஹம்மது இப்ராஹீம் 30.எம.ஜி. ஷாஹித் அப்துல்லா 31. சாஜிதா நஸ்ரின் 32.அஜ்மல் கான் 33. ரியாஸ் சுல்தானா 34. எப். முஹம்மது ரபி 35.எஸ். பகிருத்தீன் ஆரிப் கான் 36. எ. அபுல் ஹசன் 37. முனவர் அலி மித்ஹத் ஹப்சா 38.எம். மஜிதா பேகம் 39. டி.ஏ. ரிஸ்வான் அஹ்மது 40.ஹெச். சாஜிதா பர்வீன் 41. எ. நசுரீன் 42.எஸ். தய்யுபா பாத்திமா 43. ஜே.ஏ.எம்.சையத் இப்ராஹீம் ஷா 44.எஸ்.ஐ. சாஹித் அக்பர் 45.ஆர். பர்கத் 46. கே. ரியாஸ் பாத்திமா 47.ஏ. சுல்தான ராஜா 48. ஏ. ஆசிபா பேகம் 49. ஏ. பர்கத் நிஷா 50. எ. அப்துல் ரஹீம் 51. எல். சப்னம் 52. அஹ்மது பாசில்

ஜனவரி 2 2012ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எம்.எஸ். 2ன் படி 835 மருத்துவர்கள் நியமனம் செய்யயப்பட வேண்டும். இதில் மேற்கண்டவாறு 688 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். 147 பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேறற்றக் கழகம் தொடர்ந்து கண்காணித்து வரும். இதில் துரோகம் இழைக்க அனுமதிக்க மாட்டோம். ஆனால் ஆய்வுச் செய்யாமல் மலிவான விளம்பரத்தில் ஈடுபட மாட்டோம் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும்.

சனி, 24 ஜூலை, 2010

8ம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது- தமிழக அரசு உத்தரவு

ஜுலை.24:எட்டாம் வகுப்பு வரை எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம்.குற்றாலிங்கம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.

இந்த சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசனை குழு என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் பெயில் ஆக்கக் கூடாது, படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது,

தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது.

எந்த மாணவரையும் உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிடப்படுகிறது".

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 30 மே, 2010

வருவாய்க்காக மக்களைக் கொல்லும் தமிழக அரசு

- தமிழ்மாணிக்கம்
நன்றி: தினமணி

தமிழகத்தில் உள்ள கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடை அவசியமா என்பது குறித்து பொது விவாதம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசுக்கு அதிக வருவாய் தரும் பட்டியலில், டாஸ்மாக் மதுபான நிறுவனமே முன்னிலையில் உள்ளது.

நிதிநிலை அறிக்கையில், மொத்த வருவாய் ரூ. 63 ஆயிரம் கோடி, மொத்தச் செலவு ரூ. 66 ஆயிரம் கோடி, அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ரூ. 3 ஆயிரம் கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல, மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ. 16 ஆயிரம் கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதை எப்படிச் சமாளிக்க முடியும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அரசுக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் அதிக வருமானம் வருகிறது. அதை வைத்து பற்றாக்குறையைச் சமாளிப்போம் என்றார் அப்போதைய நிதித் துறைச் செயலர். அந்த அளவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வளர்ந்துள்ளது.

மேலும், அரசு செய்தி ஊடகங்களின் வழியாக பண்டிகைக் காலங்களில் மதுபான விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி வருமானம் என்றும், இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடப் பல மடங்கு விற்பனை அதிகரித்துள்ளது என்றெல்லாம் செய்தி வெளியிட்டு மது குடிப்பவர்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

பல்வேறு கவர்ச்சித் திட்டங்களையும், இலவச அறிவிப்புகளையும் அறிவித்து வரும் மாநில அரசுக்கு கைகொடுப்பது மதுபான விற்பனைதான்.

தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 6 ஆயிரத்து 500 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன.

சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட பெருநகரங்களில் ஒவ்வொரு வார்டிலும் இரண்டு அல்லது மூன்று மதுபானக் கடைகள் இருக்கின்றன.

நகராட்சி அளவிலான ஊர்களில் 7 அல்லது 8 என்ற ஒற்றை இலக்கத்திலும், கிராம ஊராட்சிகளை இணைக்கும் முக்கியச் சாலைகளில் ஒரு மதுபானக் கடை வீதம் தெருவெங்கும் கடைகள் உள்ளன.

அதிலும், நகரப் பகுதிகளின் மையத்தில் இந்தக் கடைகள் உள்ளன. கிராமங்களில் மிக முக்கியமான இடங்களிலேயே மதுபானக் கடை உள்ளது.

மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஊரின் கடைக்கோடியில் மதுக்கடை இருந்தாலும் தேடிச் சென்று குடிப்பார்கள். அதனால், பள்ளிகள், கோயில்கள் இருக்கும் இடங்களில் இந்தக் கடைகள் இருக்கக் கூடாது.

போக்குவரத்து இடையூறு மற்றும் இருசக்கர வாகன விபத்துகளுக்கும் பெரும்பாலும் பல இடங்களில் டாஸ்மாக் கடைகளே காரணமாகின்றன.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் அறிவித்து சோதனை செய்தால், இந்தக் கடையில் இப்போதுதான் குடித்துவிட்டு வருகிறேன். கடை நகரத்திற்குள் இருந்தால் எப்படி வாகனத்தில் செல்லாமல் இருக்க முடியும் என்றும் குடிப்பவர்கள் விவாதிக்கின்றனர்.

கடை மற்றும் பார் நடத்த அனுமதிப்பதால் வாடகை சற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் கட்டட உரிமையாளர்களும் இதற்குச் சம்மதம் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், பன்னாங்கொம்பில் இருந்த டாஸ்மாக் மதுபானக் கடையை கட்டட உரிமையாளர் காலி செய்யச் சொன்னதால், அருகில் உள்ள காவல்காரன்பட்டிக்கு மதுபானக் கடையை மாற்றினர்.

கடையைத் திறக்க முற்பட்ட போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அங்கு வந்த வட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பெண்களின் நியாயமான கோரிக்கைக்கு செவிமடுக்காமல், மறு நாளே மீண்டும் மதுபானக் கடையை அதே ஊரில் திறந்தனர். அப்போதும் பெண்கள் திரண்டு சாலை மறியல் செய்து கைதானார்கள்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியரிடமும் மனு கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். ஆனாலும், அந்த ஊரிலிருந்து மதுக் கடை இன்னும் மாற்றப்படவில்லை. மது விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.

நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் மதுபானக் கடையைக் கட்டுப்படுத்த இயலாமல் போனாலும், கிராமப்புறங்களில் மதுபானக் கடை தேவையா என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். இதுதவிர, கிராமங்களில் கடை திறப்பதற்கு முன்பு கிராம சபைக் கூட்டத்தைக் கூட்டி மக்களின் ஒருமித்த கருத்து அடிப்படையில் கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம்.

அதைவிடுத்து, மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள கிராமங்களிலும்கூட விடாப் பிடியாக அரசு மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது. 1994-95-ம் ஆண்டு ரூ. 995.69 கோடியாக இருந்த மது விற்பனை 2009-2010-ம் ஆண்டில் ரூ. 13,720 கோடியாக அதிகரித்துள்ளதாக அரசு விளம்பரப்படுத்தி மகிழ்ச்சியடைவதைத் தவிர்த்து, கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுப்பது நல்லது.

உடனடியாக மதுபானங்களுக்குத் தடைவிதிக்க முடியாமல் போனாலும், படிப்படியாக கிராமப்புறங்களில் உள்ள மதுபானக் கடைகளுக்குத் தடை விதிக்கலாம்.

தொழில் துறை வளர்ச்சி, கிராமப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பிற காரணிகளின் மூலம் வருவாயைப் பெருக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

அரசுக்கு வருவாய் தரும் நிறுவனம் என்பதால் மட்டுமே டாஸ்மாக் நிறுவனத்தை வளர்த்து விட முடியாது. அது கொஞ்சம், கொஞ்சமாக நமது மக்களை கொன்றுவிடும் என்பதையும் அரசு கவனத்தில் கொள்வது நல்லது.