தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்நாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூலை, 2011

தலைபோகிற விஷயம்! முதலில் இதைப் படியுங்கள்

தலைபோகிற விஷயம்!
முதலில் இதைப் படியுங்கள்
- மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி
பெயர் மாற்றம் செய்வோர் தம்முடைய பழைய பெயரையும் புதிய பெயரையும் அரசு கெஜட்டில் வெளியிட்டால்தான் சட்டப்படி பெயர் மாற்றம் செல்லும். இதற்காக அரசு பத்து நாட்களுக்கு ஒரு முறை அரசிதழ் (Gazette) ஒன்றை வெளியிட்டுவருகிறது. இதன் விலை ரூ. 30.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஜூலை (13) - 2011 கெஜட்டை (Part VI - Section4) அண்மையில் பார்க்க நேர்ந்தது. இதில் பெயர் மாற்றங்கள் மட்டுமன்றி, மதமாற்றங்கள் பற்றிய அறிவிப்பும் காணப்படுகிறது.

ஜூலை (13) - 2011 இதழில் பெயர் மாற்றம் செய்துகொண்டோர் சுமார் 1330 பேர். இவர்களில் மதம் மாறியோர் 106 பேர். அதன் சுருக்க விவரம் வருமாறு:
  • இந்து மதத்திலிருந்து கிறித்தவ மதத்திற்கு மாறியோர் 38 பேர். இது மதம் மாறியோர் எண்ணிக்கையில் 35.84 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 31 பேர். இது மொத்தத்தில் 29.24 விழுக்காடு ஆகும்.
  • இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியோர் 5 பேர். இது 4.71 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியோர் 18 பேர். இது 16.98 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் 3 பேர். இது 2.83 விழுக்காடு.
  • கிறித்தவத்திலிருந்து புத்த மதம் சென்றோர் 2 பேர். இது 1.88 விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியவர்கள் 8 பேர். இது மொத்தத்தில் 7.54 விழுக்காடு.
  • இஸ்லாத்திலிருந்து கிறித்தவம் சென்றவர் ஒருவர். இது 0.94 விழுக்காடு.

மதம் மாறிய முஸ்லிம்கள்:
வ. எண்
பழைய பெயர்
பழைய பெயர்
தந்தை / கணவன் பெயர்
வயது
ஊர்
மாறிச் சென்ற மதம்
1
அஃப்ரோஸ்
நிவேதிதா
த /பெ. நேரு
4
கோவை
இந்து
2
ஷரஃபுந் நிசா
பிரியா
க/பெ. நேரு
33
கோவை
இந்து
3
தானிஸ்தா பேகம்
கீர்த்தினா
த/பெ. ஹைதர் ஷரீப்
28
சென்னை
இந்து
4
ஜமால் மைதீன்
பிரதீஷ்
த/பெ. சலாஹுத்தீன்
23
சென்னை
இந்து
5
முஸஃப்பர்
ரகு
த/பெ. யாசீன்
37
சென்னை
இந்து
6
மக்பூல் ஜான் (பெண்)
ஐஸ்வர்யா
க/பெ. சுந்தர்
34
சென்னை
இந்து
7
அப்துல் மஜீத்
மகேஷ்
த/பெ. நயினார்
40
சென்னை
இந்து
8
ஷேக் உஸ்மான்
பாலகிருஷ்ணன்
த/பெ. சிவன்
32
சென்னை
இந்து
9
மும்தாஜ் பேகம்
மும்தாஜ் பேகம்
த/பெ. ஷானு
24
சென்னை
கிறித்தவம்

இவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்கள்; இருவர் வேறு மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறி, பின்னர் மதம் மாறியவர்கள் என்று தெரிகிறது.

இன்னொரு விவரம்: மதம் மாறிய இந்த 106 பேரில் இந்து மதத்திலிருந்து விலகியோர் 74 பேர்; அதே நேரத்தில், இந்து மதத்திற்கு திரும்பியோர் அல்லது புதிதாகச் சேர்ந்தோர் 26 பேர். மீதி 48 பேர் இந்து மதத்தைத் துறந்துள்ளனர்.

கிறித்தவத்திலிருந்து வேறு மதம் சென்றவர்கள் மொத்தம் 23 பேர். வேறு மதங்களிலிருந்து கிறித்தவத்திற்கு வந்தோர் 39 பேர். ஆக, 16 பேர் அதிகமாகியுள்ளனர்.

இஸ்லாத்திலிருந்து வேறு மதம் மாறியோர் 9 பேர். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தோர் 34 பேர். ஆக, 25 பேர் அதிகமாகியுள்ளனர்.

ஏன் மாறினர்?
இஸ்லாத்திலிருந்து இந்து மதத்திற்கும் கிறித்தவ மதத்திற்கும் சென்ற அந்த 9 பேர் ஏன் சென்றனர்? அவர்களில் 7 பேர் முஸ்லிம் பெற்றோருக்குப் பிறந்தவர்களாயிற்றே! காரணம் என்ன? பெற்றோர்களும் சமுதாயமும் தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய விஷயமல்லவா இது? அதிகாரபூர்வமாக அரசிதழின் ஒரு வெளியீட்டில் தெரிந்த எண்ணிக்கைதான் இது. வெளியுலகுக்குத் தெரியாமல் நடக்கின்ற மாற்றங்கள் எத்தனையோ!

பெரும்பாலும் இந்த மாற்றங்களுக்குக் காரணம் காதல் வலையில் சமுதாய இளவல்கள் சிக்கித் தவிப்பதுதான். கல்லூரிகள், விடுதிகள், அலுவலகங்கள் ஆகிய ஆண் - பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, காதல் என்ற பெயரில் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது ஒரு வரட்டுத் துணிச்சல் என்பது திருமணத்திற்குப் பின்போ, கற்பை இழந்ததற்குப் பின்போதான் அந்த இளசுகளுக்குத் தெரிகிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போயிருக்கும்.

பெற்றவர்கள், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், சமுதாயம், ஏன் விலைமதிக்க முடியாத ஈமானையே தூக்கியெறியத் துணியும் இன்றைய இளவல்கள் யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தயாராயில்லை. காதல் மயக்கம், அதில் கிடைக்கும் தாற்காலிக சுகம், சிறகடித்துப் பறக்கும் பக்குவமில்லாத பருவம், நண்பர்கள் தரும் ஊக்கம், சினிமாத்தனமான ஹீரோயிஸம்... எல்லாம் சேர்ந்து எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுகின்றன.

பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுது புலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல் கூனிக் குறுகி, அணுஅணுவாகச் செத்துக்கொண்டிருப்பதோ, உற்றார் உறவினர் பரிதவிப்பதோ, சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவோ எதுவும் காதல் போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. குறைந்தபட்சம், தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் இதே பாணியைக் கையாண்டால், தங்கள் நிலைமை என்னவாகும் என்பதைக்கூட இந்த விடலைகள் எண்ணிப்பார்ப்பதில்லை.

இதையெல்லாம் காதலுக்குச் செய்யும் தியாகம்‘ என இவர்கள் சினிமா வசனம் பேசுகிறார்கள். சினிமா, நடைமுறைக்கு ஒத்துவராது என்பதும் இவர்களுக்கு உறைப்பதில்லை. மூன்று மணிநேர பொழுதுபோக்குக்காக, எதார்த்தங்களுக்கு எதிரான கற்பனைகளைக் கலந்து இளசுகளை நாசமாக்கிக்கொண்டிருக்கும் திரையுலகத்தினருக்குச் சிறிதளவேனும் மனசாட்சியும் சமூக அக்கறையும் இருக்க வேண்டும். பணம் மட்டுமே கோலோச்சும் அந்த உலகில் குணத்தை எதிர்பார்ப்பது நமது முட்டாள்தனம்.

அடிப்படை கோளாறு
பெற்றோர்கள், தம் பிள்ளைகளைக் கஷ்டமே தெரியாமல் செல்லமாக வளர்க்கிறார்கள்; கடன் பட்டாவது படிக்கவைக்கிறார்கள்; மக்களின் மனம் நோகாது, கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்; கொஞ்சம் வளர்ந்தவுடன் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கிறார்கள்.

ஆனால், பாலுக்கும் பாய்ஷனுக்கும் வித்தியாசம் சொல்லி வளர்த்தவர்கள், பாவத்திற்கும் புண்ணியத்திற்கும் வித்தியாசம் சொல்லி வளர்க்கவில்லையே! மார்க்கத்தின் அறநெறிகளைச் சொல்லி வளர்க்க வேண்டிய அவர்கள், மேலை நாட்டு நாகரிக்கத்தையல்லவா புகட்டுகிறார்கள்!

இதனால், நம் இளைய தலைமுறையினரிடம் வெட்கம், மானம், ஒழுக்கம் ஆகிய மாண்புகள் எல்லாம் கேலிப்பொருட்களாகத் தெரிகின்ற பரிதாப நிலைதான் காணப்படுகிறது. தொழுகை, திக்ர், நோன்பு, நல்லுரைகள் கேட்பது, நல்ல பழக்கவழக்கங்கள், நபிவழி, நல்ல நண்பர்களுடனான பழக்கம் - இவற்றையெல்லாம் சொல்லி வளர்க்காத வரை உங்கள் மக்கள் செல்வம் உங்களுக்குச் சொந்தமில்லை.

மதமாற்றத்திற்கு வறுமையும் ஒரு காரணம்தான். வறுமையால் ஈமானையே இழக்கத் துணிகின்ற ஒருவரிடம், அந்த ஈமான் ஆழமாகப் பதியவில்லை என்பதுதான் பொருள். இதற்கும் பெற்றோரே காரணம்! சிறுவயதிலேயே இஸ்லாத்தைக் கற்பிக்க வேண்டும்! ஈமானின் அவசியத்தை உணர்த்த வேண்டும்! மறுமையைப் பற்றிய சிந்தனையை ஊட்ட வேண்டும்!

அத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழே மூச்சுவிட முடியாமல் திணறும் குடும்பங்களைக் கண்டறிந்து, அவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற மஹல்லா ஜமாஅத்கள், இஸ்லாமிய அமைப்புகள், இளைஞர் மன்றங்கள் பாடுபட வேண்டும். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் நம் பிள்ளை தானே வளரும்! இறைவன் வளர்ப்பான்!

ஆக, மதமாற்றம் என்பது சமுதாயத்தின் அழிவுக்கு அடிகோலும்; கலாசாரச் சிதைவுக்கு வழிகோலும்; நம் இருப்பையே கேள்விக் குறியாக்கிவிடும்! சம்பந்தப்பட்ட அனைவரும் இதன் தீவிரத்தை உணர்ந்து, உடனடியாகச் செயல்பட முன்வர வேண்டும்!
நன்றி : http://khanbaqavi.blogspot.com/2011/07/blog-post_22.html

திங்கள், 21 பிப்ரவரி, 2011

3484 கிராம நிர்வாகப் பதவிகளுக்கு 10 இலட்சம் பேர் போட்டி: இன்று தேர்வு


சென்னை: வருவாய்த் துறையில் காலியாக உள்ள 3484 கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு 9.59 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

தமிழக அரசின் வருவாய்துறையில் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவியில் 3484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் தேர்வு நடத் தப்படுகிறது.

10-ம் வகுப்பை அடிப்படை கல்வித் தகுதியாக கொண்டு நடைபெறும் இந்த தேர்வு எழுத கடும் போட்டி நிலவியது. 10 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

9 லட்சத்து 59 ஆயிரம் பேர் இன்று தேர்வு எழுதினார்கள். தமிழ்நாடு முழுவதும் 104 நகரங்களில் 3,465 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுதுவதற்காக காலை 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு ஏராளமானோர் வந்தனர். தேர்வு மைய வாசலிலேயே தேர்வு எழுத வருபவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பரிசோதித்து வழி காட்ட 2 அரசு ஊழியர்கள் நின்றனர்.

இளைஞர்கள் மட்டுமின்றி திருமணமானவர்களும் ஏராளமானோர் தேர்வு எழுதினார்கள். காலை 10 மணி முதல் 1 மணி வரை தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். இதற்காக 298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களை தீவிரமாக கண்காணித்தனர். இதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தெந்த மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.

வி.ஏ.ஓ. பதவிக்கு நேர்முக தேர்வு கிடையாது. எழுத்து தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து தான் பணி நியமனம் செய்யப்படும். எனவே வேலையில்லா பட்டதாரிகள் 6 மாதத்துக்கும் மேலாக இந்த தேர்வுக்காக பயிற்சி பெற்றனர்.

வியாழன், 30 டிசம்பர், 2010

மதமாற்றத் தடைச் சட்டத்தை ரத்துச்செய்தது யார்? - சிறுபான்மையினர் வாக்குகளுக்காக மோதும் கலைஞரும், ஜெயலலிதாவும்

சென்னை,டிச.30:அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறுபான்மை இன மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைப் பற்றி மக்கள் மத்தியில், குறிப்பாக சிறுபான்மை இன மக்களிடையே தவறான பிரசாரத்தை செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் 18.5.2004 அன்று எனது தலைமையிலான அரசு பிறப்பித்த அவசரச் சட்டத்தின் வாயிலாக அறவே ரத்து செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.

நடைமுறையில் உள்ள ஒரு சட்டம், ஓர் அவசரச் சட்டத்தின் வாயிலாக ரத்து செய்யப்பட்ட பிறகு, அந்த அவசரச் சட்டத்திற்கு சட்டப்பேரவையின் அனுமதி பெறப்படாவிட்டாலும் கூட, அவசரச் சட்டத்தின் மூலம் ரத்தான சட்டம் தொடர்ந்து ரத்தானதாகவே இருக்கும், மீண்டும் உயிர் பெறாது. இதுதான் சட்ட நிலைப்பாடு.

சட்டப்பேரவைக்கு கொண்டு வந்தால் தான் ரத்தாகும் என்றில்லை. இது 1985ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, 21.5.2005 அன்று தெளிவுபட எனது அறிக்கையின் வாயிலாகவும், 2006 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், அதற்குப் பின்பும் பல சூழ்நிலைகளில் தெரிவித்திருக்கிறேன்.

2006ல் கருணாநிதி ஆட்சி அமைத்த பிறகு இந்த அவசரச் சட்டத்தை மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டு வந்து அதனை அவரது அரசு தான் ரத்து செய்தது என்று கூறுவது, ஏற்கனவே ஒருவரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட ஒரு பிரேதத்தை தோண்டி வெளியே எடுத்து, மீண்டும் அதில் வேலை பாய்ச்சி "நான் தான் கொன்றேன்" என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை 2006-லேயே தெளிவுபடுத்தி இருந்தேன். அதையே மீண்டும் கூறுகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

தானே ரத்து செய்த இந்தச் சட்டத்தை, முதலில் என்ன காரணத்துக்காக கொண்டு வந்தார் என்பதையும், பின்னர் எதற்காக தானே கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தார் என்பதையும் ஜெயலலிதா விளக்கினால் நல்லது.

சனி, 26 ஜூன், 2010

நெல்லை புரோட்டாக் கடை விவகாரம்:கல்வீச்சு தாக்குதல்

நெல்லையில் புரோட்டா கடை மோதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நெல்லை ஜங்ஷன் த.மு. ரோட்டில் உள்ள புரோட்டா கடைக்கு இரு தரப்பினர் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதுத்தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் ஏற்கனவே அங்கு புரோட்டா கடை நடத்தி வந்த அப்துல் ஹமீது என்பவருக்கு கோர்ட்டில் சாதகமாக தீர்ப்பு வந்தது. இருப்பினும் அவருக்கு எதிர்தரப்பினரான நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் ஒருவரின் சகோதரர் போஸ் பாண்டியன் கடையை திறக்கவிடாமல் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வந்தார்.
இதனால் அப்துல் ஹமீது தனது ஆதரவாளர்கள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினருடன் சென்று கடையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.


இதையறிந்த எதிர்தரப்பினரான போஸ் பாண்டியன் கோஷ்டியினர் அங்கு திரண்டு கடையை சீரமைக்க கூடாது என்று கூறி தடுத்தனர். இச்சூழ்நிலையில் போஸ் பாண்டியன் கும்பலை சேர்ந்த ரவுடிகள் கடையின் பின்புறமாக வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. கடையின் வெளிப்புறம் நின்றுக் கொண்டிருந்த போஸ் பாண்டியன் கும்பலை சேர்ந்த குண்டர்கள் கடையின் மீதும் அப்பாவி மக்கள் மீதும் கற்களை வீசித் தாக்கினர்.


இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அபய்குமார்சிங், துணை கமிஷனர் அவினாஷ்குமார், உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ஜெபராஜ், சற்குணம், வீரபாண்டியன் ஆகியோர் தலைமையில் போலீசார் வந்து ரவுடிக் கும்பல்களை விடுத்து அப்பாவிகள் மீது தடியடி நடத்தினர்.


மேலும் போலீஸார் ரவுடிக்கும்பலுக்கு சாதகமாகவே செயல்பட்டதாகவும், அருகில் உள்ள தினத்தந்தி அலுவலகத்தில் ஒழிந்துக் கொண்ட அக்கும்பலை கைது செய்ய முயற்சிக்கவுமில்லை என்றும் கூறப்படுகிறது.


இது தொடர்பாக ஜங்ஷன் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 40 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுத்தவிர 145 வது பிரிவின் கீழ் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் புரோட்டா கடைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செவ்வாய், 25 மே, 2010

விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.


சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

• 2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

• முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும்.

• பலதுறைகளில் & பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியில் 7,31,145 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. அதாவது கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே செய்த தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

34 மானிய திட்டங்களை அமல் படுத்துவதாகக் கூறி எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியில் கூட, வேலை நடக்கவில்லை. அதற்குரிய தொகையான 1,75,856 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்தப் பணம் என்ன ஆனது? யார், யாருக்கு பிரிக்கப்பட்டது? அல்லது மீண்டும் ஒப்படைக்கப்படுமா? என் பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

• அரசு நடத்தும் சர்க்கரை ஆலைகளின் மூலம் மொத்தம் 1475 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாம்! இயந்திர பழுது, இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியம், கரும்பு களை வேறு ஆலைகளுக்கு மாற்று தல், நவீன முறைகளைப் பின்பற் றாதது ஆகியவைதான் இதற்கு காரணம். 1475 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, உயர்வு, சர்க்கரை உற்பத்தி, நல்ல விற்பனை ஆகியவை சீராக்கப்பட்டிருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கும் அவசியம் ஏற் பட்டிருக்காது.

• நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தில் 9.94 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இதில் சாஃப்ட்வேர் வசதிகள் செய்யப்படாததால், 8.21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்ப்யூட் டர்கள் பயன்படுத்தப்படவேயில்லையாம்.

2004-07-க்குள் மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாக வாக்களிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் கூட இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

• சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான தவ றான நில மதிப்பீடு மூலம் 158.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியினரின் ‘ரியல் எஸ் டேட்’ தொழிலுக்கு ‘உரம்‘ சேர்க்கும் நடவடிக்கைகளே முக்கியக்காரணம் என கூறப்படுகிறது.

• 11 மாவட்டங்களில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தில் 1585 ஏக்கர் அரசு நிலம் பயிரிடப்படாத மலைப்பாங்கான பகுதியில் வழங் கப்பட்டதால், அது பயனில் லாமல் போயிருக்கிறது.

• 7 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவர்களின் சேவையைப் பெறவும், சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், இழந்த சேமிப்பு வசதி, விபத்து சிகிச்சைக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் போன்ற வசதிகளை வட்டார ஆரம்ப சுகா தார நிலையங்களில் அமைத் திட வழங்கப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. 2005&2009&ஆம் ஆண்டு களில் பார்வை குறை பாடுகளை சீராக்க 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 695 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.

சுருக்கமாக சொல்வதெனில் மக்களின் சுகாதார நலன் சுத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை தமிழக அரசு மறுக்கவில்லை. மாறாக, சப்பைக்கட்டுக் கட்டுகிறது. எதற் கெடுத்தாலும் தமிழ கத்தை நம்பர் 1 மாநிலம் என தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு முதல் அமைச்சர் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

இதனைக் கண்காணிக்க வேண் டிய அமைச்சர்கள் முதல்வரின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் அமர்வதற்கு காட்டும் ஆர்வத் தையும், ‘கமிஷன்’ குறித்து பேசுவ தற்கு ஒதுக்கும் நேரத்தையும் இதில் ஏனோ காட்டுவதில்லை என்றும் இதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மேலிடத்தை குளிர் விக்கும் வித்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்களும் அலட்சி யமாக இருக்கிறார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசங்களில் மயங்கும் தமி ழக மக்கள்... கவர்ச்சி அரசிய லில் மதிமயங்கி, மக்களின் பணம் வீணடிக்கப்படும் அரசு நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

நாட்டுக்குத் தேவை உறுதியான நிர்வாகத் திறன் கொண்டவர்கள் தானே தவிர கவர்ச்சி அரசியலை செய்யக்கூடியவர்கள் அல்ல.

-கதிரவன்

புதன், 5 ஆகஸ்ட், 2009

ஆசிரியைகள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் போட தடை!

சென்னை: ஜன்னல் வைத்த ஜாக்கெட்களைப் போட்டுக் கொண்டு பள்ளிக்கு வர ஆசிரியைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண் ஆசிரியர்களும் உடைக் கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கூட ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு ஏற்கனவே உடைக் கட்டுப்பாடு அமலில் உள்ளது. ஆசிரியை என்றால் புடவை, ஜாக்கெட்டில்தான் வர வேண்டும் என்று உள்ளது. அதேபோல ஆசிரியர்கள் வேட்டி-சட்டை அல்லது பேன்ட், சட்டையில் வரலாம். மாறாக டி சர்ட், ஜீன்ஸ் பேன்ட் போன்றவற்றில் வரக் கூடாது என்று தடை உள்ளது.

ஆனால் இந்த உடைக் கட்டுப்பாட்டை பல ஆசிரியர், ஆசிரியைகள் மீறி வருவதாக புகார் எழுந்தது.

குறிப்பாக மாணவ, மாணவியர் இணைந்து படிக்கும் கோ எட் பள்ளிகளில், ஆசிரியைகள் சிலர் ஜன்னல் வைத்த ஜாக்கெட்டுடன் வருவதாகவும், ஸ்லீவ்லெஸ் போன்ற ஜாக்கெட்டுகளில் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

அதேபோல சில ஆசிரியகள், ஜீன்ஸ் பேன்ட், டேஞ்சர், டச் மீ, வான்னா மீ உள்ளிட்ட குண்டக்க மண்டக்க வார்த்தைகள் அடங்கிய டி-சர்ட்களில் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதை தற்போது கட்டுப்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி உடைக் கட்டுப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள கல்வித்துறை அதிகாரிகள் அவற்றை கண்டிப்பாக ஆசிரியர், ஆசிரியைகள் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஆண்களாக இருந்தால் வேட்டி-சட்டை அல்லது பேண்ட்-சட்டை அணியலாம். ஜீன்ஸ் பேண்ட், பனியன் ஆடை குறிப்பாக டி.சர்ட் அணியக்கூடாது. வாசகங்கள் போடப்பட்ட ஆடைகளை அணியவே கூடாது.

ஆசிரியையாக இருந்தால் சேலை உள்ளிட்ட கவுரவமான ஆடைகளை அணியலாம். சேலைதான் எல்லோரும் அணிகிறார்கள். அதுவும் ஆபாசம் இன்றி கட்ட வேண்டும்.

ஜன்னல் வைத்த ஜாக்கெட் மற்றும் உடல் தெரியும் வகையிலான லேசான ஆடைகளைப் போட்டுக் கொண்டு உடல் தெரியும்படி வரக் கூடாது.

ஆடை கட்டுப்பாட்டை மீறி நடக்கும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விடப்படும். அடிக்கடி கண்காணிக்கும்படியும் அவர்களுக்கு உத்தரவிடப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.