சென்னை: இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்பி விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக தமிழக ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 10 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு இதுவரை 16 ஆயிரத்து 785 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக இந்திய ஹஜ் கமிட்டி செயல் அதிகாரி முகம்மது ஓவைஸ் கூறியுள்ளார்.
ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் போலீஸ் விசாரணை நடைமுறையை ரத்து செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் ஓவைஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், விண்ணப்பிக்கும் யாத்ரீகர்ள் 2 மாதங்களுக்குள் பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக போலீஸ் விசாரணை நடைமுறையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஹஜ் பாஸ்போர்ட் எட்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பின்னர் அது புதுப்பிக்கப்பட மாட்டாது. ஒரு வேளை இந்த பாஸ்போர்ட்டை நிரந்தரமாக்க விரும்புவோர், ஹஜ்யாத்திரையை முடித்துக் கொண்டு திரும்பிய பின்னர் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்திக் கொண்டால் பாஸ்போர்ட் நிரந்தரமாக்கப்படும்.
நாடு முழுவதும் இந்த ஆண்டு ஹஜ் யாத்திரை செல்ல விரும்பி இதுவரை 3.57 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஹஜ் கமிட்டி மூலம் 1.04 லட்சம் பேர் செல்லலாம். இதில், தனியார் மூலம் 45,000 பேர் செல்ல முடியும். மற்றவை அரசு கோட்டா ஆகும்.
ஹஜ் யாத்திரையில் தமிழகத்திற்கான ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரிக்கை வந்துள்ளது. அதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஹஜ் யாத்திரையின்போது யாத்ரீகர்கள் கடைப்பிடிக்கவேண்டியவை, கடைப்பிடிக்கக் கூடாதவை ஆகியவை குறித்து உருது மற்றும் இந்தியில் மாத இதழ் ஒன்றை வெளியிட்டு வருகிறோம். இதன் ஆங்கிலப் பதிப்பு விரைவில் வெளியாகும் என்றார் ஓவைஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக