சனி, 4 ஜூலை, 2009

லிபரான் கமிஷன் அறிக்கையும்-அரசியல் கட்சிகளும்!

வராது வந்த மாமணியாக 17 ஆண்டுகள் கழித்து பாபர் மஸ்ஜித் சம்மந்தமான விசாரணை கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை நாம் அறிவோம். அறிக்கை பிரதமரிடம் தாக்கல் செய்யப்பட்டபின் அதிலுள்ள விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. ஏற்கனவே மும்பை கலவரம் தொடர்பாக நீதியரசர் ஸ்ரீகிருஷ்னா அவர்கள் அளித்த அறிக்கையும், முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பான மிஸ்ரா கமிஷன் அறிக்கையும் இன்றுவரை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை. லிபரான் அறிக்கைக்கும் அந்த நிலை வந்துவிடுமோ என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகிறது.

இதற்கிடையில், லிபரான் அறிக்கை தொடர்பாக பெரும்பாலான அரசியல் தலைவர்கள் வாய்திறக்கவில்லை. வட இந்திய தலைவர்களில் லாலு மற்றும் முலாயம் ஆகிய இருவர் மட்டுமே இது பற்றி பாராளூமன்றத்தில் பேசியுள்ளனர். வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத் எழுந்து லிபரான் கமிஷன் அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு பாஜகவைச் சேர்ந்த ஆனந்த்குமார் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவருடன் கோபிநாத் முண்டேயும் ஆக்ரமாகக் கத்தினார்.
ஆனால் லாலு பிரசாத்துக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மற்றும் அவரது கட்சியினர் குரலெழுப்பினர்.

தமிழக அரசியல் தலைவர்களில் தி.க.தலைவர் வீரமணி, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான நீதிபதி லிபரான் கமிஷன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் இந்தத் தொடரிலேயே வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எவ்வளவு பெரிய பதவிகளில் இருந்திருந்தாலும், இப்பொழுது இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தவர்களும், ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள்’ என்று சுய தம்பட்டம் அடிப்பவர்களும் லிபரான் அறிக்கை பற்றி வாயே திறக்கவில்லை. அவர்களை சொல்லி குற்ற்மில்லை. என்னதான் அவர்கள் முதுகில் குத்தினாலும்,முகாரி பாட ஒரு கூட்டம் சமுதாய அமைப்பு/கழகம்/இயககம்/ஜமாஅத் என்ற பெயரில் தயாராக இருக்கிறதே!

கருத்துகள் இல்லை: