சனி, 11 ஜூலை, 2009

போராட்டமே வாழ்க்கையாகிப்போன காஷ்மீர் முஸ்லிம்களின் பரிதாபநிலை!



இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீரமாக இருந்த காலம் மீண்டும் வராதா என ஏங்கும் வண்ணம் அழகான காஷ்மீரத்தை குரங்கு கையில் கிடைத்த பூமாலை போன்று ஆளுக்கொரு பங்காக இந்தியாவும்- பாகிஸ்தானும் பிய்த்துக்கொள்ள, இந்தியாவிற்குட்பட்ட காஷ்மீரத்து மக்களின் சுதந்திர தாகத்தை தீவிரவாதமாக கருதிய இந்திய அரசு, தனது இராணுவம் மூலமும்- உள்ளூர் காவல்துறை மூலமும் தீவிரவாதிகளை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவி மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் மானத்திற்கும் இழப்புகளை ஏற்படுத்துவதை அவர்களின் நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுவதாக உள்ளது. காஷ்மீர சுதந்திரத்திற்கு போராடும் குழுக்கள் ஏதேனும் ஒரு அசம்பாவிதத்தை செய்துவிட்டால் அலறும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் காஷ்மீரத்து முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை பெரிய அளவில் கண்டு கொள்வதில்லை.

சில மாதங்களாக முஸ்லிம்களை கோபத்திற்கு உள்ளாக்கும் செயல்களை ராணுவமும்- உள்ளூர் காவல்துறையும் செய்து வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு பதிலாக அவர்களில் சிலரின் உயிர்கள்தான் பறிபோகிறது. கடந்த மாதம் சி.ஆர்.பி.எஃப் படையினரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலோபர்-ஆசியா ஆகியோருக்காக நீதி கேட்டு மக்கள் போராட்டம் நடத்தினர் . இதற்கு அடுத்த சில நாட்களில் காவல்நிலையத்திற்கு சென்ற முஸ்லிம் பெண் ஒருவர் காவலர்கள் சிலரால் மானபங்கப்படுத்தப்பட்டதையடுத்து நடந்த போராட்டத்தில் ராணுவத்திற்கும்- மக்களுக்கும் நடந்த மோதலில் அப்பாவிகள் நால்வர் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞன் கழுத்து அறுபட்ட நிலையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மீண்டும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.இதையடுத்து ராணுவத்திற்கும் -மக்களுக்கும் மீண்டும் முறுகல் நிலை நீடிக்கிறது.

காஷ்மீரத்து பிரச்சினையை இந்த அரசியல்வாதிகள் ஏன் தீர்ப்பதில் இழுத்துகடத்துகிறார்கள்? ஏற்கனவே உள்ள ஒப்பந்த அடிப்படையில் அந்த மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதை வழங்கிவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அதை விடுத்து இந்தியாவும்-பாகிஸ்தானும் ஆட்சி மாற்றம் நிகழும்போதெல்லாம், காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்போம் என்பதும் இரு நாடுகளும் பெயருக்கு சந்திப்பதும் பின்பு பழைய நிலையே தொடர்வதும், அப்பாவிகள் பலியாவதும் தொடர்கதையாக உள்ளது.
என்றுதான் அந்த காஷ்மீரில் தென்றல் வீசுமோ..?

கருத்துகள் இல்லை: