புதன், 22 ஜூலை, 2009

நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடர்- ஒரு சின்ன அலசல்!


தமிழக சட்டமன்றத்தின் 11 வது கூட்டத்தொடர் ஜூன் 17 தொடங்கி ஜூலை 21 தேதியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் இறுதிநாள் வரை பிரதான எதிர்க்கட்சிகள் அதிலும் குறிப்பாக அண்ணா திமுக -மதிமுக ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்யாத நாளே இல்லை என சொல்லலாம். இவர்கள் வெளிநடப்பு செய்ததில் பெரும்பாலான விஷயங்கள் உப்பு சப்பில்லாதவையே! இதுபோக தள்ளாத வயதிலும் தளராமல் அவைக்கு வந்து கடமையாற்றும் முதல்வரின் பணியை பாராட்டும் அதே வேளையில், அவைக்கு வந்து ஆளும்கட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளையும், உரிய ஆதாரத்துடன் அடுக்கவேண்டிய அம்மையார் ஜெயலலிதா[ சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்] ஆழ்ந்த ஓய்வில் இருப்பதால் அவைப்பக்கமே தலைவைத்து படுக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளான இவர்கள் நிலை இவ்வாறிருக்க, இவர்களுக்கு அதாவது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வளித்து குஷிப்படுத்தியுள்ளது திமுக அரசு.

கருணாநிதி ஆட்சியில் அன்றாடங்காட்சிக்கு திண்டாட்டம்; அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம் என்ற கருத்து எப்போதும் உண்டு. அடித்தட்டு மக்களை அன்றாடம் பயன்படுத்தும் அரிசி தொடங்கி துவரம் பருப்புவரை பயம்காட்டிக்கொண்டிருக்க, விண்முட்டும் விலைவாசி உயர்வு பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க அவர்களுக்கு கலர் டிவிகளை வழங்கி கனவு காண விட்டுவிட்டு, கனவில் கூட மக்கள் நலனையும், தொகுதி நலனையும் கண்டுகொள்ளாத எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்தி வறுமைக்கோட்டுக்கு[?] கீழ் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த அவர்களின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

2005 ஏப்ரலில் அதிமுக ஆட்சியில் எம்எல்ஏக்களின் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.12,000லிருந்து ரூ.16,000 ஆக உயர்த்தினார் ஜெயலலிதா.2006ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் செப்டம்பரில் சம்பளம், படிகள் ஆகியவற்றை ரூ.20,000 ஆக உயர்த்தினார் முதல்வர் கருணாநிதி. இது 2007ல் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டது.2008 மே மாதத்தில் எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் மீண்டும் உயர்த்தப்பட்டு ரூ.30,000 ஆனது.2009ம் ஆண்டு பிப்ரவரியில் இது ரூ.45,000 ஆக உயர்த்தப்பட்டது.இந் நிலையில் நேற்று மீண்டும் ரூ.5,000 உயர்த்தப்பட்டு இப்போது எம்எல்ஏக்களின் மொத்த ஊதியம் ரூ.50,000 ஆகிவிட்டது.இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.தமிழகத்தில் எம்எல்ஏக்களின் சம்பளம் கடந்த 3 ஆண்டுகளில் [திமுக ஆட்சிக்கு வந்தபின்னர்]ரூ.34,000 உயர்த்தப்பட்டுள்ளது.

இதைத்தான் 'மக வாழ்ற வாழ்க்கைக்கு மாசம் மூணு கெட்டு வெளக்கமாறு' என்று கிராமப்புறங்களில் சொல்வார்கள். சரி! சம்பளத்தை அள்ளிக்கொடுத்தீர்கள். சபைக்கு வராமலே இருக்கிறார்களே அவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தில் வாரி வழங்குவது நியாயமா? சபைக்கு வந்து தலைகாட்டிவிட்டு 'வெளிநடப்பு' என்று தலை தெறிக்க ஒடுபவர்களுக்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி வழங்குவது நியாயமா? குறைந்த பட்சம் அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களின் அன்றைய ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படவேண்டாமா? சரி! இவர்களாவது 'சிட்டிங்' எம்.எல்.ஏக்கள். அதனால் அள்ளிக்கொடுத்துவிட்டீர்கள். முன்னால் எம்.எல்.ஏக்களுக்கும் ஊதியத்தை எட்டு ஆயிரத்திலிருந்து பத்து ஆயிரமாக உயர்த்தியுள்ளீர்களே! அவர்கள் என்ன அரசு ஊழியர்களா? ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கு? எனக்கு தெரிந்த ஒரு முன்னால் ராணுவவீரர் சொல்வார்; மாப்ளே! நான் பணியில் இருந்தபோது எனக்கு சம்பளம் மூனாயிரம்தான். ஆனா இப்ப எனக்கு ஓய்வூதியம் பதிமூனாயிரம் என்பார்.
அதுபோல் இந்த எக்ஸ் எம்.எல்.ஏக்களுக்கு பணியில் பெற்ற ஊதியத்தைவிட கூடுதலாக ஓய்வூதியம் வழங்குகிறது திமுக அரசு. என்ன செய்வது! மக்கள் இலவசங்களில் இதயத்தை பறிகொடுத்தால் பறிகொடுத்தால் இதுதான் நிலை.

அடுத்து, இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது திருமணங்களை அனைத்து மதத்தினரும் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்ற சட்டம். இந்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை கைவைக்கும் முயற்சியாகவும், பொது சிவில் சட்டத்தின் வெள்ளோட்டமாகவும் எமக்கு படுகிறது. ஏனெனில், இந்த சட்டம் குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் துரைமுருகன், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படிதான் இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது.இந்து திருமண பதிவு சட்டம் ஏற்கனவே இருக்கிறது. மற்ற மதத்தினரும் எந்த முறையில் திருமணம் நடத்தினாலும் அதை பதிவு செய்யவேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. பெண்களுக்கு இது பாதுகாப்புத்தான். மேலும் ஏமாற்றிவிட்டு ஓடமுடியாது. இதன் மூலம் பால்ய விவாகத்தையும், பலதார மனத்தையும் தடுக்கலாம் என்று கூறியுள்ளார்.


இதில் அமைச்சர் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு என்று கூறவில்லை. ஆக இந்த சட்டப்படி முஸ்லிம்கள் தங்களின் திருமணத்தை பதிவு செய்தால், விவாகரத்து தேவையெனில் இப்போது இந்துக்கள் செல்வது போல் கோர்ட்டில் போய்தான் பெறவேண்டுமா? ஜீவனாம்சம் வழங்கும் நிலை வருமா? பலதார மனம் செய்து கொள்ளமுடியாதா? என்பதை அரசும் முஸ்லீம் சட்ட வல்லுனர்களும் விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். தமிழக அரசின் இச்சட்டம் முஸ்லீம் ஷரியத்தை கைவைக்குமானால் அதை முஸ்லிம்கள் ஒருங்கிணைத்து தமது எதிர்ப்பை பதிவு செய்து முறியடிக்கவேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் நாமறிந்தவரை முஸ்லிம்லீக் நீங்கலாக மற்ற அமைப்புகள் தங்களின் கருத்தை தெரிவிக்காதது ஏன் என விளங்கவில்லை.

கருத்துகள் இல்லை: