செவ்வாய், 28 ஜூலை, 2009

முஸ்லிம்களை சீண்டும் சினிமாத்துறை!



முஸ்லிம்கள் மீது சினிமாத்துறையினருக்கு அப்படி என்னதான் கடுப்போ தெரியவில்லை. சினிமாவில் தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக என்பதில் தொடங்கி அத்துணை அயோக்கிய செயல்கள் செய்பவர்களாக முஸ்லிம்களை காட்டுவதில் இந்த கனவுலக சிற்பிகளுக்கு அத்துணை ஆனந்தம். இது மட்டுமன்றி முஸ்லீம் பெண்ணை இந்து மற்றும் கிறிஸ்தவ ஆண்களோடு காதல் வயப்படுவதாக தொடர்ந்து காட்டுவது; இவ்வாறு சினிமாவிற்கு சம்மந்தமில்லாத முஸ்லிம்களை சினிமாவில் இழிவு படுத்துவதே தலையாய பணியாக ஒரு கூட்டம் செய்து வருகிறது. இவ்வாறு இவர்கள் துணிந்து செய்வதற்கு காரணம் முஸ்லீம் சமுதாயம் இவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான்.
பாரதிகண்ணம்மா என்றொரு திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஹீரோ உயர் சாதி என அறியப்பட்ட பிரிவை சேர்ந்த ஹீரோயினை காதலித்து இறுதியாக உயிர்நீத்த ஹீரோயினுடன் உடன்கட்டை ஏறுவது போன்ற காட்சி அமைப்பு இருக்கும். இதற்கு எதிராக உயர்சாதி அமைப்பினர் கொந்தளித்தது தமிழகம் அறிந்த ஒன்றே! ஆனால், ரோஜாவிலும்-அயோத்தியாவிலும்-ராமன் அப்துல்லாவிலும்-இன்னும் இதுபோன்ற பல்வேறு படங்களில் முஸ்லீம் சமுதாய பெண் மாற்றுமத ஹீரோவை காதலிப்பதாக- மணப்பதாக காட்டினார்கள். பொக்கிஷத்தில் காட்டவிருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம்களிடத்தில் பெரிய அளவில் எதிர்ப்புணர்வு இல்லை. கேட்டால், நாம் இதையெல்லாம் எதிர்த்தால் அந்த படம் பாப்புலாரிட்டியாகி வெற்றி படமாகிவிடுகிறது என்று சாக்கு போக்கு சொல்லும் தலைவர்களும் சமுதாயத்தில் உண்டு. படம் வெற்றி பெற்றால் என்ன? தோற்றால் என்ன? நமது எதிர்ப்பை பதிவு செய்தோமா என்பதுதான் முக்கியம் என்பதை இந்த சமுதாய தலைவர்கள் உணர மறுப்பது ஏன்?
அதே நேரத்தில், எதிர்ப்பை பதிவு செய்ததால் ஒரு விளம்பரம் சம்மந்தமாக முஸ்லிம்களிடத்தில் இயக்குனர் ஷக்திசிதம்பரம் வருத்தம் தெரிவித்ததை நாம் அறிவோம். இப்போது 'ஈசா' என்ற பெயரில் 'அவனே கடவுள்' என்ற அடைமொழியோடு ஒரு படம் வெளிவர இருக்கிறது. ஈஸா[ அலை] அவர்களை முஸ்லிம்கள் இறைவனின் தூதர் என்று நம்புகிறோம். அந்த ஈஸா[அலை] அவர்களை சம்மந்தப்படுத்தி தலைப்பிட்டு படம் எடுப்பதை குறித்து உரியவர்களிடம் சமுதாய அமைப்பினர் எடுத்துக்கூறி தலைப்பை மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கவேண்டும். அதோடு கதையின் தன்மை ஈஸா[ அலை] அவர்களை பற்றி விமர்சிக்கும்வகையில் இருந்தால் அதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும். இல்லையேல் நாளை 'முஹம்மத்' என்று படமெடுக்கவும் தயங்கமாட்டார்கள் என்பதை சமுதாயம் உணரவேண்டும்.

கருத்துகள் இல்லை: