மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார்;
''நடைபெற்று வரும் மருத்துவ கல்லூரிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எங்கள் நீண்டக் கால கோரிக்கையான இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றிய நீங்கள் இந்த குளறுபடியையும் நீக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து உங்கள் தலைமையிலான அரசு நிறைவேற்றிய சட்டத்தில் திறந்த போட்டி (ஒ.சி)க்கான தகுதியை பெறும் முஸ்லிம் போட்டியாளர்ளுக்கு ஒ.சி. ஒதுக்கீட்டில் தான் இடம் அளிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் ஓ.சி. ஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் இடம் பெறும் காரணத்தினால் 3.5 சதவிகித இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடம் பெறும் முஸ்லிம்களின் எண்ணிக்கை எந்த காரணத்தைக் கொண்டு குறைந்து விடக் கூடாது என்று முஸ்லிம்கள் இடஒதுக்கீடு தொடர்பான அவசர சட்டத்தின் விதி 5 குறிப்பிடுகின்றது. (நகல் இணைக்கப்பட்டுள்ளது)இடஒதுக்கீடு தொடர்பான இந்த அரசாணையின் விதிமுறைக்கு முரணாக தற்போது மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகின்றது. ஓ.சி. தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவ கல்லுரியில் ஒ.சி. பிரிவில் இடம் இல்லை என்று கூறப்பட்டு அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டிற்கு மாற்றிக் கொண்டால் அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லூரியில் இடம் தருகிறோம் என்று அறிவுறுத்தப்படுகின்றது. இவ்வாறு இடம் அளிக்கப்பட்டால் பிற்படுத்தபட்ட முஸ்லிம் ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்படும் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர். இது வரை இந்த குளறுபடியின் காரணமாக பி.சி.எம். ஒதுக்கீட்டில் தேர்வுச் செய்யப்பட்ட 10 மாணவர்களுக்கு இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவ பட்டப்படிப்பில் சேரும் ஒட்டுமொத்தமான முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து விடுகின்றது.
மாண்புமிகு முதல்வர் அவர்கள் இக்குளறுபடியை தீர்க்க உடனடியாக தலையிட்டு ஒ.சி. பிரிவில் தகுதிப் பெற்றுள்ள முஸ்லிம் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைக்கும் அதே வேளையில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வுச் செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லுரியில் இடம் கிடைப்பதற்கும் ஆவண செய்யுமாறும் கடந்த சில தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் ஏற்பட்ட குளறுபடியை திருத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக