சனி, 4 ஜூலை, 2009

முஸ்லிம் அடையாளங்களை அழிக்கும் முயற்சி! டெல்லியில் அடுத்தடுத்து திடுக் சம்பவங்கள்!!


-அபூசாலிஹ்




இந்தியத் திருநாட்டின் தலை நகரான டெல்லி வரலாற்றுச் சிறப்புக்கும், பண்பாட்டுச் செழுமைக்கும் பேர்போன நகரமாகும். இந்தியாவில் வேறெந்த நகரத்திற்கும் இல்லாத பெருமை இம் மாநகருக்கு உண்டு.

1100 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் இந்த அழகிய நகரில் இருந்துதான் இந்தியாவை ஆட்சி செய்தனர். அலாவுதீன் கில்ஜி, அக்பர், ஷேர்ஷாஹ் உள்ளிட்ட பேரரசர்கள் தங்களது நிர்வாகத் திறமையினாலும், பால்பனிலிருந்து அவ்ரங்கசீப்வரை பல மாமன்னர் கள் தங்களது கூர்மையான செயல்பாட்டி னால் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

முதல் இந்திய சுதந்திரப் போர் என்பதே முகலாய மாமன்னர் பகதூர்ஷா ஜாஃபர் உள்ளிட்ட ஏராளமான மாவீரர் கள் சிந்திய ரத்தக் குளத்தில்தான் வளர்ந் தது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
டெல்லியில் ஏராளமான கலையம்சம் பொருந்திய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்கள், அரண்மனைகள், மாட மாளிகைகள், பழமைவாய்ந்த பள்ளி வாசல்கள் என ஏராளமானவை உண்டு. டெல்லிக்கு மட்டுமே உரித்தான இச் சிறப்பினை கண்டுகளிக்க ஏராளமானோர் டெல்லி மாநகரில் வந்து இறங்கிய வண்ணமும், டெல்லி மாநகரமும் நிரம்பிய வண்ணமுமாக இருப்பதை அன்றாடம் காணலாம். இச்சிறப்புகளைக் குறிப்பெடுத்து ஆய்வு செய்யும் வரலாற்று அறிஞர்கள், தொல்லியல்துறை மாணவர் கள், கட்டிடக் கலை ஆய்வாளர்கள் என ஏராளமானோர் டெல்லிக்கு வந்தவண் ணம் உள்ளனர்.

டெல்லி ஜும்மா மஸ்ஜித், செங் கோட்டை, குதூப் மினார், ஃபதேபூர் சிக்ரி உள்ளிட்டவைகளை யாராலும் மறக்க முடியாதவை. ஏராளமான பள்ளிவாசல் கள் இங்கு உண்டு. இருப்பினும் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி மறுப்பது தொல்லியல்துறையின் அன்றாடக் கடமையாக ஆகிவிட்டது.

மாமன்னர் ஷாஜஹான் கட்டிய புகழ்மிக்க செங்கோட்டையின் நிலை இன்று எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்த்தால் காண்பவர் கண்களில் ரத்தம் வரும். செங்கோட்டையின் தரைதளம் பெயர்ந்த நிலையில், அதுவாக உடைந்து வீணாகட்டும் என மெத்தனமாகவே தொல்லியில் துறையினர் இருப்பதாகப்படு கிறது அதுவாகவே உடைந்து விழுமா? அல்லது விழ விட்டுவிடுவோமா? என வெகுண்டெழும் சில பார்வையாளர்கள் தங்களால் ஆன கைங்கரியத்தை செய்துவிட்டே திரும்புகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற டெல்லியின் ஜும்மா பள்ளிவாசல் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் பேர் ஒரே நேரத்தில் தொழுகை எனும் வணக்க வழிபாடு செய்யலாம். நம்நாட்டின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக டெல்லி ஜும்மா மஸ்ஜித் விளங்குகிறது.

டெல்லி ஜும்மா மஸ்ஜிதின் இன்றைய நிலையோ சொல்லும் தரமன்று. உலகளவில் மோசமான முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கும் ஒரு கட்டிடம் உண்டு என்றால் அதில் டெல்லி ஜும்மா மஸ்ஜித் முதலிடம் பெறும்.

ஜும்மா மஸ்ஜிதுக்கு வெகு அருகில் ஒரு பிரம்மாண்ட கோயில் ஒன்று கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டது. அந்த பிரம்மாண்ட கோயில் இமயமலை என்றால், டெல்லி ஜும்மா மஸ்ஜித் பரங்கிமலை போல சிறுத்து காணப்படு கிறது. உலகப் புகழ்பெற்ற ஒரு வழிபாட் டுத் தலத்திற்கு அருகில் மற்றொரு பிரிவினரின் வழிபாட்டுத்தலம் கட்டப்படு வது குறித்தும், அந்த பழமைவாய்ந்த கட்டிடத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்து குறித்தும் எவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஒரு மரக்கிளையை வெட்டினால் கூட ஆயிரத்தெட்டு கேள்வி கேட்கும் நீதிபதிகளும், கிழவி தும்மினால் கூட பொதுநல வழக்கு போடும் புண்ணிய வான்களும் எங்கே சென்று விட்டார்கள்?

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் கடந்த வாரம் டெல்லியின் 400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியா வாலி பள்ளிவாசலின் சில பகுதிகள் தகர்த்தெறியப்பட்டன.

''400 ஆண்டுகால பழமைவாய்ந்த பள்ளிவாசல்'' - இந்த வாசகங்களை எங்கோ கேட்டதைப் போல் இருக்கிறதா? ஆம் 400 ஆண்டுகால பாபரி பள்ளிவாசலை காங்கிரஸின் துணையோடு பாஜகவினர் இடித்தார்களல்லவா? அதைப் போன்று டெல்லியை அழகுபடுத்தப் போகிறோம் என்ற பெயரில் திபியாவாலி பள்ளிவாசலைத் தகர்த்து தரைமட்டமாக்கும் நோக்கத்தோடு அரசு இயந்திரங்கள் நெருங்கி வந்தன.

டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகள் அதிநவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட கனரக வாகனங்களுடன் பள்ளிவாசலை மண்மேடாக்கும் நோக்கத்தோடு வந்தனர். இந்த அரும் பணியை செய்யவந்த திருப்பணி(!) தொண்டர்களுக்கு பலத்த போலீஸ் பந்தோபஸ்து வேறு. பள்ளிவாசலை மீட்க ஏராளமான முஸ்லிம்கள் குவிந்தனர். அக்கிரமத்தைத் தடுக்க முன்னணி முஸ்லிம் பிரமுகர்களும் திரண்டனர்.

பள்ளிவாசல் கட்டிடத்திற்கு சிறு கீறல் கூட விழக்கூடாது என டெல்லி பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரிகளிடம் சிறுபான்மை சமூக பிரமுகர்கள் கேட்டுக் கொண்டும் பலனில்லை. கீறல் கூட ஏற்படக் கூடாது என்று கூறியவர்களை சீறலுடன் பார்த்த அதிகாரிகள், தங்கள் பணியை(?)த் தொடர்ந்தனர். மக்களின் போராட்டத்திற்கும் செவிசாய்க்காத அதிகார வர்க்கம் பள்ளிவாசலுக்கு உட்பட்ட பகுதிகளை நொறுக்கினர்.

கடந்தசில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறே அராஜக வெறிகொண்டு வந்த அதிகாரிகள் ஆட்டத்தை வி.பி.சிங்கின் சுட்டு விரல் அடக்கியது. தற்போதும் கூட பள்ளிவாசலுக்கும் அதனைச் சார்ந்த பகுதிக்கும் எவ்வித சேதாரமும் ஏற்படுத்தக்கூடாது என்ற நீதிமன்றத்தின் உத்தரவும் புறந்தள்ளப் பட்டது. டெல்லி வக்ஃப் வாரியத் தலைவர் சவுத்ரி மதீன் அஹ்மத், திபியாவாலி பள்ளிவாசலின் இமாம் மவ்லவி தாஹிர் காசிமி, உயர்மட்டக் குழு தலைவர் முஹம்மது தல்ஹா உள்ளிட்டோர் போராட்டக் களம் கண்டனர்.

400 ஆண்டுகால பழமைவாய்ந்த திபியாவாலி பள்ளிவாசலின் பகுதிகள் தகர்க்கப்பட்டதற்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

டெல்லியை ஆளும் ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது தவறுகளைக் களைந்து அனைத்தையும் சரிசெய்ய வேண்டும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பலநூறு ஆண்டுகால பெருமை வாய்ந்த மஸ்ஜித் ஒன்றை இந்திய ரயில்வேத்துறை தரைமட்டமாக்கியது. இதுபோன்ற நிலைகள் தொடர்ந்தால் வெடிக்கும் மக்கள் போராட்டங்களை டெல்லி பிரதேச அரசும், மத்திய அரசும் சந்திக்க வேண்டிய நிலை வரலாம்.

எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றும் கதையாக தற்போது டெல்லி மாநகரின் அழகுக்கு அழகு சேர்க்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க 12ஆம் நூற்றாண்டின் குதூப் மினாருக்கும் ஆபத்து நேர்ந்துள்ளது.

2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குதூப் மினாரின் ஆபத்து அடிகோ­டப்பட்டது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்றாவது ஓடுதளம் அமைக்கப்பட்டது. நாலரை கிலோ மீட்டர் தூரமுடைய அந்த ரன்வேயில் கனரக வாகனங்கள் தரையிறங்கவும், வின் னேறவும் எளிதாக செயல்படக் கூடிய வகையில் அமைக்கப்பட்டது. ஏர் பஸ் ஆ380, மற்றும் ஆசபஆசஞய ஆங 222 உள்ளிட்ட பெரிய்ய வானூர்திகள் இந்த மூன்றா வது ரன்வேயிலிருந்து செயல்படத் துவங்கின. ஒரு மணி நேரத்தில் 65லிருந்து 70 விமானங்கள் இங்கிருந்து பறக்கவும், இறக்கவும் அனுமதிக்கப் படுவதால் குதூப் மினார் கட்டிடத்தில் பலத்த அதிர்வுகள் ஏற்படுவதாக அபாய எச்சரிக்கை செய்கின்றனர் சமூக ஆர்வர்களும் தொல்லியல் அறிஞர்களும். 72 1/2 மீட்டர் உயரம் கொண்ட குதூப் மினார் அருகே விமானங்கள் தாழ்வாகப் பறப்பது கட்டிடத்தின் ஆயுளோடு விளையாடும் செயல்தான் என இந்தியத் தொல்லியல் துறையின் இணை இயக்குநர் பி.ஆர்.மணி கவலை தெரிவிக்கிறார்.

சுற்றுச்சூழலுக்கும் பாரம்பரிய கட்டிடக் கலைக்கும் சிறிய ஊறு நேர்ந்தால்கூட பாய்ந்து பிறாண்டும் புண்ணியவான்கள் குதூப் மினார் விவகாரத்தில் வாய்திறக்கவில்லையே என்ற வினா அனைவரின் உள்ளங்களிலும் எழுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க குதூப் மினாருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தே இந்திய விமானத்துறை டெல்லி விமான நிலையத்தின் மூன்ற வது ஓடுபாதையைத் தேர்ந்தெடுத்துள் ளதா? என டெல்லி மக்கள் ஆவேசமாகக் கேட்கிறார்கள். முஸ்லிம்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி சத்தமில்லாமல் தொடருகிறது.

கருத்துகள் இல்லை: