சனி, 13 பிப்ரவரி, 2010

ஒண்ட இடம் தேடும் பால்தாக்ரே கும்பல்!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தான் ஒரு தோண்டி

அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத் தாண்டி


தற்போது இந்திய அரசியலில் நந்தவனத்து ஆண்டி என்ற பட்டப்பெயர் பால்தாக்கரே கும்பலுக்கு கச்சிதமாகப் பொருந்தும் எனலாம்.

இரண்டு தடவையாக ஆட்சிக்கு வரும் வாய்ப்பிழந்ததோடு மக்களின் செல்வாக்கினை சுத்தமாக தொலைத் துக்கட்ட அவர்களே வலிந்து எடுத்த முயற்சிகளின் பலனாக பால்தாக்கரே, உத்தவ்தாக்கரே, ராஜ் தாக்கரே கும்பல்களின் கூச்சல்கள் எடுபடாமலேயே போய்விட்டது. அப்பாவி பீகாரிகளின் மேல் சிவ சேனா என்ற பாம்பின் குட்டியான மகராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் வெறியாட்டம் அதனைத் தொடர்ந்து அப்பாவி பீகாரிகள் வடித்த கண்ணீர் இனவெறியர்களின் செல்வாக்கினை மங்கச்செய்தது.

ஹிந்தியில் பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட அபூ ஆஸ்மியின் மீது மகராஷ்ரா நவநிர்மான் சேனா சட்டமன்ற உறுப்பினர்கள் பாய்ந்து பிறாண்டிய சம்பவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அபூ ஆஸ்மி அகில இந்திய பிரபலமானார்.

ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து மனிதனைக்கடித்த கதையாக தாக்க ரேக்களின் வெறியாட்டம் எல்லை மீறியது.

அரசியல் இனம் மொழி வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் ஒருங்கிணைப்பது விளையாட்டுக் கலை போன்றவையாகும்.

ஆனால் அதிலும் குழப்பங்களை குத்தகைக்கு எடுத்தது தாக்கரேகும்பல். பாகிஸ்தானின் அயலுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.

அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்ன செய்வார்கள்? விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்கிற ரீதியில் கருத்து கூறிய ஷாரூக்கான் மீதும் தனது குதறலை தொடங்கி வைத்தார் தாக்கரே. ஆனால் இதில் எதிர் மறையாக மிகப்பெரிய மூக்கறுப்பை எதிர் கொள்ள வேண்டியவரானார்.

சாதாரண மும்பைவாசிகள் கூட தாக்கரேயின் பைத்திய காரத்தனமான வாதத்தினைக் கண்டு பரிகசிக்க தொடங்கியுள்ளனர்.

தாக்கரேயின் வீழ்ச்சியுகம் உறுதியானது. மும்பை ஒன்றும் தர்மசத்திரம் அல்ல என தாக்கரே கூறினார். உண்மை தான் மும்பை ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல தாக்கரே கூட்டம் குத்தாட்டம் போடுவதற்கு? என்று கேள்வி கேட்க ஆளில்லை. எனினும் இந்தியர்கள் அனைவருக்கும் மும்பை சொந்தமானது என அடித்துக் கூறி தாக்கரே கும்பலின் முகத்தில் கரியையும், அடிவயிற்றில் நெருப்பையும் அள்ளிக்கொட்டினார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி.

ராகுல் காந்தியின் போர்ப்பிரகடனத்தைக் கண்டு சீற்றமடைந்த கிழட்டுச் சிங்கம் கர்ஜிக்க முயற்சித்தது. சிங்கத்தின் வாயிலிருந்து கர்ஜனைக்கு பதிலாக மியாவ் என்ற குரலே வெளிப்பட்டது.

ராகுல் காந்திக்கு மும்பை நுழைவதற்கு முன்பே கறுப்புக் கொடி காட்டப்போவதாக திரிந்து போன 'பால்'தாக்கரே அறிவித்தார்.

ஆனால் ராகுல் காந்தி தாக்கரே கும்பலின் எச்சரிக்கையை அலட்சியம் செய்தார். சிவசேனாவினர் ராகுல் காந்தியை முற்றுகையிடுவார்கள் என எதிர்பார்த்ததற்கு மாறாக மின் தொடர் வண்டியில் பணயம் செய்தார். மும்பை மாநகரையே ரவுண்டு கட்டினார்.

மாணவர்களுடன் சந்திப்பு, ஏ.டி.எம்மில் பணம் என முமைபையில் சர்வ சாதாரணமாக உலாவினார். ராகுல்காந்தி. காகிதப்புலிகளின் காட்டுக்கூச்சல் எடுபடவில்லை. அதைத் தொடர்ந்து பாண்டிச் சேரியிலும், கேரளாவிலும் உற்சாகமாக முழங்கினார் ராகுல். பிரிவினைவாதிகளை வளர விடமாட்டோம் என்று சூளுரைத்தார்.

வெறும்பேச்சோடு இல்லாமல் சூளுரைத்தப்படியே சுளுக்கெடுங்கள் ராகுல் நாடே ஆவலாக காத்திருக்கிறது.

-தமிழ்மாறன்

கருத்துகள் இல்லை: