ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் ஈரானில் துவக்கம்


தெஹ்ரான், பிப். 6: ஈரான் நாட்டில் இரு இடங்களில் ஏவுகணை உற்பத்தி நிலையங்களை அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அகமது வாஹிதி திறந்துவைத்தார்.

தரையிலிருந்து விண்ணிலுள்ள இலக்கைத் தாக்கும் "காயெம்' என்ற ஏவுகணை, ஹெலிகாப்டர்களைத் தாக்க வல்லது. இதையும், தரையிலிருந்து கிளம்பி, தரையிலக்கைத் தாக்கும் "டூஃபான்' ஏவுகணையையும்,இம்மையங்கள் உற்பத்தி செய்யும். ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சியின் 31-வது ஆண்டு நிறைவை ஒட்டி, இத்த ஏவுகணை உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த புதனன்று, உயிருள்ள ஆமைகள், எலிகள், புழுக்கள் கொண்ட ஆய்வுக்கலனுடன், "கவோஷ்கர் 3' என்ற ஆய்வு ராக்கெட்டை, பரிசோதனை முயற்சியாக ஈரான் விண்ணுக்கு செலுத்தியது. உயிருள்ள பிராணிகளுடன் ராக்கெட் அனுப்பி மூன்று நாட்களே ஆன நிலையில் இந்நிலையங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளதாக,அந்நாட்டு அரசு டி.வி. அறிவித்துள்ளது.

ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்களை, மேற்கத்திய நாடுகள் கண்டித்து வருகின்றன. இத்திட்டங்கள் அணுஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தப்படலாம் என்று அவை அஞ்சுகின்றன.

கருத்துகள் இல்லை: