
இஸ்ரேலுக்கெதிரான முதல் இன்திபாழாவின் போது வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய ஐம்பதுடைய மஹ்மூத் அப்துற்றவூஃப் 1989 முதல் சிரியாவில் வாழ்ந்து வந்தார்.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி மஹ்மூத் கொல்லப்பட்டாலும் அவரைக் கொன்ற இஸ்ரேலிய ஏஜண்டுகளை கண்டறிவதற்காக இந்தச் செய்தியை ரகசியமாக வைத்ததாக ஹமாஸ் பொலிட்பீரோ உறுப்பினர் இஸ்ஸத் அர்ரிஷ்க் டமாஸ்கஸில் வைத்து தெரிவித்தார்.
மஹ்மூதின் இரத்தசாட்சியத்திற்கு தக்கசமயத்தில் சியோனிஷ அரசுக்கு பதிலடிக் கொடுப்போம் என்றும் இஸ்ஸத் தெரிவித்தார்.
சிரியாவில் வசித்துவரும் ஹமாஸின் முக்கியத்தலைவரான காலித் மிஷ்அலுடன் நெருங்கியத் தொடர்புடையவர் மஹ்மூத். துபாயில் வந்த மறுதினமே அவர் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளும் நடத்திய புலனாய்வு விசாரணையில் ரகசிய கருவி மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக மஹ்மூதின் சகோதரர் ஃபாஇக் அல் மப்ஹூஹ் தெரிவித்துள்ளார்.
ஆறுமாதங்களுக்கு முன்பு மொசாத் செலுத்திய விஷம் மூலம் ஒன்றரை நாள் அவர் நினைவிழந்திருந்தார். காரிலிருந்த ரகசிய உபகரணத்தை சரியான நேரத்தில் கண்டுபிடித்து மாற்றியதால் 2004 ஆம் ஆண்டு இஸ்ரேலின் கொலை முயற்சியிலிருந்து மஹ்மூத் உயிர் தப்பினார்.
1989 ஆம் ஆண்டு காஸ்ஸாவில் மஹ்மூதின் வீட்டை இஸ்ரேல் ராணுவம் குண்டு வீசி தகர்த்த பொழுதிலும் அவர் அதில் உயிர் தப்பினார்.
மஹ்மூதின் உடல் ஹமாஸின் தலைவர்கள் உள்ளிட்ட பெரும் மக்கள் திரள் கலந்துக் கொண்ட ஜனாஸா ஊர்வலத்துடன் டமாஸ்கசின் அருகிலிலுள்ள ஃபலஸ்தீன் அகதிமுகாமிற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக