செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

இடஒதுக்கீடு சலுகை அல்ல உரிமை: இ.எம்.அப்துற்றஹ்மான்

"நீதி, நிர்வாகம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையிலான விகிதாச்சார பங்களிப்பு முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அதனைப் பெற முஸ்லிம்கள் போராட முன்வர வேண்டும்" எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயலர் இ.எம். அப்துல் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.கத்தாரிலுள்ள இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம்(India Fraternity Forum) என்ற அமைப்பு வெள்ளிக்கிழமையன்று இரவு 8 மணிக்குக் கத்தார் ரெட் க்ரசண்ட் கேட்போர் கூடத்தில் நடத்திய "இடஒதுக்கீடு சலுகையா? உரிமையா?" என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மக்களுக்கும் அவர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ற உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இது சமூக ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டுமேயல்லாது பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று வரையறுக்காதது குறிப்பிடத்தக்கது. 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்த உரிமைகள் கூட மறுக்கப்பட்டு, அனைத்து சமுதாயங்களை விட மிக மோசமான அளவுக்குப் பின் தங்கிய நிலையிலேயே இன்று இந்திய முஸ்லிம் சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் சம உரிமையும் சம அந்தஸ்தும் உறுதிபடுத்தும் முகமாக, மண்டல் கமிசன் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மற்றும் தலித்களுக்காக இடஒதுக்கீடு பரிந்துரைத்தது. அதனை தலித், யாதவ சமூகங்கள் மிக சரியாகப் பயன்படுத்திக் கொண்டன. முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், மாயாவதி என தலித், யாதவ சமுதாய மக்களின் பிரதிநிதிகள் சட்டமியற்றும் மையங்களில் பிரதிநிதித்துவப் படுத்த முடியும் போது, 20 கோடி முஸ்லிம்களுக்கு அந்த உரிமைகளுக்காக போராடும் அளவுக்குக் கூட விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது ஆச்சரியமானதாகும்.

இடது, வலது என மதச்சார்பற்ற வேடமிடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த 20 கோடி முஸ்லிம்களையும் பரிசோதனை கூடங்களாக பயன்படுத்துவதற்கு வழியமைத்துக் கொடுத்ததே இதற்கான காரணமாகும். 40 ஆண்டுகாலமாக கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் சுமார் 20 சதவீத முஸ்லிம்களின் நிர்வாகப் பங்களிப்பு வெறும் 5 சதவீதம் மட்டுமே. மதச்சார்பற்ற வேடமிட்டு 40 ஆண்டுகாலமாக இந்தச் சமுதாயத்தை ஏமாற்றி வரும் கம்யூனிஸ்ட்கள், அடுத்த ஆண்டு வரவிருக்கும் தேர்தலுக்காக மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கும் நோக்கில் முஸ்லிம்களைக் கவர மட்டுமே சமீபத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதை எவரும் உணர்ந்து கொள்வர். இந்தியாவிலேயே சற்று மெச்சப்பட்ட நிலையில் முஸ்லிம்கள் வாழும் கேரளத்திலும் மற்ற சமுதாயங்களை ஒப்பிட்டு நோக்கினால் மிகப் பின் தங்கிய நிலையிலேயே கேரள முஸ்லிம்களும் உள்ளனர்.

நோய்களைக் கண்டுணர மருத்துவர்களை ஆய்வாளர்களாக நியமிப்பது போன்று அவ்வபோது மண்டல், சச்சார், மிஸ்ரா என மருத்துவர்களை நியமிப்பதோடுத் தங்களின் கடமை முடிந்து விட்டது என்ற நிலையிலேயே இடது, வலது கட்சிகள் நடந்து கொள்கின்றன. கண்டறியப்பட்ட நோய்க்கு மருந்தளித்துக் குணமாக்க எவருமே முன்வர தயாரில்லை.

இதுவரையிலான கமிசன்களிலேயே நீதிபதி சச்சார் தலைமையிலான கமிசன் மட்டுமே இந்தியாவில் முஸ்லிம்களின் யதார்த்த நிலையை மிகத் தெளிவாக ஆய்வு செய்து அறிக்கைச் சமர்ப்பித்துள்ளது. ஆனால், அதுவே, முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்து விட்டது என்ற நிலைக்குச் சச்சார் கமிட்டி அறிக்கையை முஸ்லிம் அமைப்புகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றன. ஆனால், நோய் என்ன என்பதை மட்டும் தான் சச்சார் கமிசன் கண்டறிந்து கூறியுள்ளதே தவிர, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையைக் குறித்து எந்தப் பரிந்துரையும் அது செய்யவில்லை என்பதைக் கவனித்தால், நீதிபதி சச்சார் கமிசன் அறிக்கையும் தெளிவாக முஸ்லிம்களின் வயிற்றில் அடித்துள்ளது என்றே எடுத்துக் கொள்ள முடியும்.
முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலையினை முன்னேற்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான கமிசன் மட்டும் தான் 10 சதவீத இடஒதுக்கீடு அனைத்து முஸ்லிம்களுக்கும் வழங்குவது மட்டுமே சரியான தீர்வு என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது. முஸ்லிம் சமுதாயத்துக்குப் பாதுகாவலன் என அவ்வபோது கண்துடைப்பு நாடகம் நடத்தும் காங்கிரஸ், அந்தப் பரிந்துரையை வாங்கி அழகாக அட்டைப் போட்டு, குளிர்சாதன அறையில் ஒதுக்கி வைத்து விட்டது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின், பிரதமருக்கு அளிக்கப்பட்ட அந்த அறிக்கை லீக்கான விஷயம் மட்டும் நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய விஷயமாக பேசப்பட்டது. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பரிந்துரைக்கப்பட்ட அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதை விட்டுத் தடுப்பது மட்டும் தான் அதன் நோக்கம் என்பதை எவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த விஷயத்தில் மதச்சாரபற்ற வேடமிடும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக நாடாளுமன்றம் கண்ட 30 முஸ்லிம் எம்பிக்களில் ஒருவர் கூட மிஸ்ரா கமிசன் பரிந்துரையை நாடாளுமன்ற ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதைக் குறித்து வலியுறுத்தாதது மகா அயோக்கியத்தனமாகும்.

ஒருபோதும் இல்லாமல் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கு அதிக எம்பிக்கள் கிடைத்ததோடுக் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. இதற்கு எப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவுக்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அந்தோ கடந்த நாடாளுமன்ற அவையில் இருந்த 36 எம்பிக்களின் எண்ணிக்கை இந்த முறையாக 30 குறைய மட்டுமே செய்தது. இது தான் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கிடைக்கும் பரிசு. 543 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் இந்திய அரசியலைப்புச் சட்டம் வழங்கும் உரிமையின் அடிப்படையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமெனில் குறைந்தது 86 முஸ்லிம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். இதே நிலை தான் அதிகாரம், நிர்வாகம், நீதித்துறைகளிலும் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கும் மிக மிக குறைந்த அளவிலான பிரதிநிதித்துவமே முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலை மாற வேண்டும். 80 சதவீதம் முஸ்லிம்கள் மட்டுமே வாழும் மாவட்டத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினராக, உயர்ஜாதியைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியே காங்கிரஸின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குப் பிரதிநிதியாக அழைத்துச் செல்லப்படுகிறார் எனில், இடது வலது என்ற வித்தியாசம் இன்றி 20 கோடி முஸ்லிம்கள் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுக்கும் எவ்வாறு பரிசோதனை கூடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்நிலை மாற வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை - அவை வெறும் சலுகைகள் அல்ல; நமது உரிமைகள் என்பதைப் புரிந்து கொண்டு அவற்றைப் - பெறுவதில் முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொரு இளைஞனும் போராட முன்வர வேண்டும்" என்று இ.எம்.அப்துல் ரஹ்மான் அக்கலந்துரையாடலில் பேசினார். சிறப்புரைக்குப் பின், இடஒதுக்கீடு, முஸ்லிம்களின் உரிமைகளைப் பெறுவதற்கான செயல்திட்டம் போன்றவை குறித்து பார்வையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
inneram

கருத்துகள் இல்லை: