வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஸ்ரீநகர்:இளைஞரைக் கொன்றது பி.எஸ்.எஃப் படை வீரர். மூத்த அதிகாரி ஒப்புதல்

ஸ்ரீநகர்:எல்லைப் பாதுகாப்புப் படையான பி.எஸ்.எஃப் கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த 16 வயது இளைஞனைக் கொன்றது பி.எஸ்.எஃபைச்சார்ந்த வீரர்தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை 16 வயதேயான ஷாஹித் ஃபாரூக் ஷேக் கஷ்மீரின் கோடைக்கால தலைநகரான ஜம்முவில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தது கஷ்மீர் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுத்தொடர்பாக பி.எஸ்.எஃபின் ஸ்பெஷல் டைரக்டர் ஜெனரல் பி.பி.எஸ்.சந்து பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று(புதன்கிழமை) பேட்டியளிக்கையில், "கடந்த வெள்ளிக்கிழமை நிஷாத் பகுதியில் வைத்து 16 வயது ஷாஹிதை பி.எஸ்.எஃபின் 68-வது பட்டாலியன் பிரிவைச் சார்ந்த லக்விந்தர்சிங் என்ற வீரர் சுட்டுக்கொன்றார் என்பதற்கு முதல் ஆதாரம் தெரிவிக்கிறது. தொடர்விசாரணைக்காக அவரை நாங்கள் உள்ளூர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம்.

இந்தியா-பாகிஸ்தானை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அமைந்துள்ள குல்பார்க் பகுதியின் பாதுகாப்புப் பிரிவில் இடம் பெற்றிருந்த லக்விந்தர்சிங் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கமான மெடிக்கல் செக்-அப்பிற்கு செல்லும் வழியில் நிஷாத் பகுதியில் வைத்து ஏ.கே.47 துப்பாக்கியால் ஷாஹிதை சுட்டுள்ளார். இது ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது." என்று அவர் கூறினார்.

காவல்துறை ஐ.ஜி ஃபாரூக் அஹ்மத் பி.எஸ்.எஃப் லக்விந்தர்சிங்கை ஒப்படைத்ததை ஒப்புக்கொண்டார். முதல் அமைச்சர் உமர் அப்துல்லாஹ் இந்தக் குற்றத்தைச் செய்தவர்களுக்கு உரிய தண்டனை வாங்கித் தரப்படும் என உறுதியளித்திருந்தார்.
செய்தி:twocircles.net

கருத்துகள் இல்லை: