நமது நாட்டின் மக்கள் தொகையில் 14 விழுக்காடு உள்ள இஸ்லாமிய மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றில் உரிய பங்கினை அளித்து சமூக நீதியை தெளிவாக உறுதி செய்ய வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.
இதற்கு மேலும் ‘வசதி’யானக் காரணங்களைக் கூறி, அவர்களுக்கு உரிய சமூக நீதியைத் தவிர்க்க இயலாத நிலையை நேற்று(08-02-2010) நடந்த இரண்டு நிகழ்வுகள் உருவாக்கியுள்ளன.
ஒன்று, ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களில் மிகவும் பின்தங்கியுள்ள நிலையிலுள்ள சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 4 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு வெளியிட்ட உத்தரவை, ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு, தனது பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் நிராகரித்துவிட்டது.
இரண்டாவது, மேற்கு வங்கத்தில் வாழ்ந்துவரும் இஸ்லாமிய மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா வெளியிட்டுள்ள அறிவிப்பு.
ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு 5-2 நீதிபதிகளின் தீர்ப்பு என்று வழங்கியுள்ள பெரும்பான்மை தீர்ப்பின் முக்கிய அம்சம், இந்த இட ஒதுக்கீடு (இஸ்லாமிய) மதத்தை மையமாகக் கொண்டு வழங்கப்படுகிறது, எனவே அது அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றும், இப்படி மதத்தை மையப்படுத்தும் இட ஒதுக்கீடு மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின் ஜனநாயக அமைப்பில், நமது நாட்டின் சமூக கட்டுமானத்தின் அங்கமாகவுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் கல்வி, வேலை வாய்ப்பு, ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஆகியன உரிய அளவிற்குக் கிடைத்திட வேண்டும் என்று விரும்புவோர் அனைவருக்கும் ஆந்திர உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிச்சயம் ஏமாற்றத்தை அளித்திருக்கும்.
கல்வி, வேலை வாய்ப்பில் ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமியர்களில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற பரிந்துரை செய்த பி.எஸ். கிருஷ்ணா ஆய்வுக் குழுவின் அறிக்கையில் உள்ள குறைபாடுகளை - அது தரகுகளை சேகரித்த விதம் முழுமையானதல்ல - என்று கூறி, அதனடிப்படையில் வெளியிடப்பட்ட ஆந்திர அரசின் உத்தரவை நிராகரித்துள்ளது ஆந்திர உயர் நீதிமன்றம்.
அரசமைப்பு உறுதி செய்துள்ள இட ஒதுக்கீடு!
இந்தியாவின் சமூகக் கட்டமைப்பில் அங்கமாகவுள்ள எந்த ஒரு சமூகமானாலும், அது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருந்தால், அவைகளின் மேம்பாட்டிற்காக (Advancement) சிறப்பு ஏற்பாடுகளை (இட ஒதுக்கீட்டை) செய்வதற்கு தடையேதுமில்லை என்று இந்திய அரசமைப்பின் பிரிவு 15 (4) கூறுகிறது (சமூக நீதிக்காக தந்தை பெரியார் நடத்திய கிளர்ச்சியைத் தொடர்ந்து 1951ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் செய்யப்பட்ட முதல் திருத்தம் இது என்பதுக் குறிப்பிடத்தக்கது).
இதே அடிப்படையில், அதாவது சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களின் மேம்பாட்டிற்காக இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் தனியார் உள்ளிட்ட கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு செய்வதற்கும் வழி செய்கிறது கடந்த 2005ஆம் ஆண்டு அரசமைப்பில் செய்யப்பட்ட 15 (5) திருத்தமாகும்.
இது மட்டுமல்ல, நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் - அதாவது அரசுப் பணிகளில் - இப்படி கல்வி, சமூக ரீதியான இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உரிய பிரதிநிதித்தும் (Adequate Representation) பெற மத்திய, மாநில அரசுகள் இட ஒதுக்கீடு செய்யலாம் என்கிறது இந்திய அரசமைப்புப் பிரிவு 16 (4). இச்சட்டப்பிரிவின் அடிப்படையிலேயே - மண்டல் அறிக்கையின் பரிந்துரையின்படி - இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்கும் உத்தரவை 1990ஆம் ஆண்டு பிரதமர் வி.பி.சிங் பிறப்பித்தார். பின்னாளில் அதனை இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 6-5 என்ற பெரு்ம்பான்மை தீர்ப்பின் மூலம் ஆமோதித்தது.
ஆக, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பில் பின்தங்கிய நிலையிலுள்ள சமூகத்தினரை (சாதியாகவும் இருக்கலாம், மதப் பிரிவினராகவும் இருக்கலாம்) கல்வி, சமூக ரீதியாக அடையாளம் கண்டு, அவர்களை மேம்படுத்த கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிக்க அரசமைப்பில் வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு நமது நாட்டிலுள்ள இந்து மதத்தின் உட்பிரிவுகளாகக் கருதப்படும் தாழ்த்தப்பட்ட (பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிகள்), பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்குத்தான் உறுதி செய்யப்பட்டுள்ளதே தவிர, அதற்குத் தகுதிபெற்ற இஸ்லாமிய, கிறித்தவ மதங்களைச் சேர்ந்த, அதன் உட்பிரிவு மக்களுக்கு கிடைக்காத நிலை தொடருகிறது.
மதப் பிரிவாக இருப்பது சமூக நீதிக்குத் தடையா?
இது சமூக நீதிக்கும், இந்திய ஜனநாயகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட நெறிமுறைகளுக்கும் முரணானதாக உள்ளது. இந்து மதம் மட்டுமின்றி, நமது நாட்டிலுள்ள எந்த மதமானாலும் அதில் பல்வேறுபட்ட உட்பிரிவுகள் உள்ளதும், அவர்களின் கல்வி, சமூக வாழ்நிலைகளில் பெருத்த வேறுபாடு நிலவி வருவதும் யாரும் அறியாதது அல்ல.
அப்படிப்பட்ட மத உட்பிரிவுகளை - அவைகள் கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனவா என்பதை மட்டும் உறுதி செய்து, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு - குறிப்பாக அரசுப் பணிகளில் உரிய இட ஒதுக்கீடு செய்ய முடியும் என்பதை மேற்கண்ட அரசமைப்புப் பிரிவுகளை ஊன்றி படிக்கையில் எவருக்கும் புரியும். ஆனால், அப்படிப்பட்ட அடிப்படையில் மத உட்பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படும்போது, அது சமூக ரீதியானது அல்ல, மத ரீதியானதாகவே உள்ளது என்று பலமுறை நீதிமன்றங்களால் நிராகரிக்கப்படுகிறது. ஆந்திர உயர் நீதிமன்றம் ஏற்கனவே அப்படிப்பட்ட ஒரு அரசு உத்தரவை செல்லாது என்று அறிவித்துள்ளது. இது சமூக நீதி மறுப்பிற்கும், ஜனநாயக ரீதியான ஆட்சி அதிகார பிரதிநிதித்துவ உரிமைக்கும் எதிரானதாகவே ஆகிறது.
இது நியாயமல்ல. இப்போது ஆந்திர உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூட, இது மத ரீதியாக மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் வாழும் இஸ்லாமிய மக்களில் பல்வேறு பிரிவினர்களை, அவர்களின் கல்வி, சமூக நிலைகளின் அடிப்படையில் பகுத்து, மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சில பிரிவுகளுக்கு (ஈ பிரிவு) மட்டுமே பி.எஸ். கிருஷ்ணா குழு இட ஒதுக்கீட்டிற்கு பரிந்துரைத்துள்ளது! ஆனால் அதையும் நீதிமன்றம், மத ரீதியாக மையப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு என்று எப்படி புரிந்துகொண்டுள்ளது என்பது புரியவில்லை.
அது மட்டுமல்ல, இப்படிப்பட்ட இட ஒதுக்கீடு மதமாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். இது ஆச்சரியமான ஒரு நிலையாகும். இட ஒதுக்கீடு பெறுவதற்காக ஒருவர் மதம் மாறுவார் என்பதை வாதத்திற்கு ஏற்றாலும், அந்த மதப்பிரிவி்ன் - இட ஒதுக்கீட்டிற்குத் தகுதி பெறும் அந்தக் குறிப்பிட்ட பின்தங்கிய பிரிவிற்கு எப்படி மாற முடியும்? எனவே நீதிபதிகளின் கருத்து பிழையுடையதாகும்.
ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவு, அந்த மாநில அரசின் மதிப்பீட்டின்படி, கல்வி, சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளதா என்பதை, தனக்கு அளிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்வது மட்டுமே நீதிமன்றத்தின் நியாயப் பணியாக இருக்க வேண்டுமே தவிர, அதன் விளைவு என்னவாகும் என்பதைப் பற்றியெல்லாம் அது வினவுவதும், அதனடிப்படையில் அரசின் நிலையை நிராகரிப்பதும் அப்பட்டமான நீதி மறுப்பே ஆகும்.
இஸ்லாமியர்களின் நிலை என்ன?
நமது நாட்டின் மக்கள் தொகையில் 13.4 விழுக்காடாக உள்ள இஸ்லாமிய சமூகத்தின் கல்வி, பொருளாதார, சமூக நிலை எப்படியுள்ளது என்பது குறித்து விரிவாக ஆராய்ந்து அறிக்கை அளித்த நீதிபதி இராஜேந்திர சச்சார் குழு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட 15 பரிந்துரைகளை மத்திய அரசிற்கு செய்துள்ளது.
அந்த அறிக்கையில் நீதிபதி இராஜேந்திர சச்சார் அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ள முக்கிய புள்ளி விவரங்களாவன:
1) இந்திய மக்கள் தொகையில் 13.4 விழுக்காடு இருந்தும், இஸ்லாமியர்களில் 4.9 விழுக்காட்டினர் மட்டுமே வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
2) அவர்களில் பெரும்பான்மையினர் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
3) இவர்கள் பெற்றுள்ள வேலை வாய்ப்புகளிலும் 98.7 விழுக்காட்டினர் மிகவும் கீழ்மட்ட வேலைகளிலேயே உள்ளனர்.
4) உயர் மட்ட வேலைகளில் அவர்களின் பங்கு வெறும் 3.2 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது இந்திய அளவிலான நிலையாகும்.
5) மாநிலங்களில் எடுத்துக் கொண்டால், மேற்கு வங்க மாநிலத்தின் மக்கட் தொகையில் 25.2 விழுக்காடு இஸ்லாமியர்கள். ஆனால் பணி வாய்ப்பு பெற்றவர்கள் 4.7 விழுக்காடு (இப்போது முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா அறிவித்துள்ள வேலை ஒதுக்கீடு கூட 10 விழுக்காடுதான்).
6) பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 18.5 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள், வேலை வாய்ப்பு 7.5 விழுக்காடு.
7) அஸ்ஸாமில் இவர்களின் மக்கள் தொகை 30.9விழுக்காடு. வேலை வாய்ப்பு பெற்றோர் 10.96%
8) கல்வியைப் பொறுத்தவரை எழுத்தறிவு பெற்றவர்கள் 5.91 விழுக்காடு, பட்டம் பெற்றவர்கள் 3.4 விழுக்காடு
9) வறுமை எனும் அளவுகோலை எடுத்துக் கொண்டால், இவர்களில் 31 விழுக்காட்டினர் ஏழ்மையில் உழல்கின்றனர்.
10) இதில் அடித்தட்டு மக்களில் 10 விழுக்காடு கடுமையான வறுமை சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
11) மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மதிப்பிடப்படும் கேரளத்தில் மொத்தமுள்ள இஸ்லாமிய மக்களில் 9 விழுக்காட்டினரின் மாத வருவாய் ரூ.300க்கும் கீழ்தான்.
இப்படிப்பட்ட நிலையிலுள்ள ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்காக, அவர்களுக்கு உரிய அதிகாரப் பங்கு அளிப்பதற்காக, மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் சட்ட ரீதியான தடைகளை தாண்ட இயலாமல் அடிபட்டுப் போய்விடுகிறது. இந்த நிலை நீடித்தால், அவர்களுக்கு நியாயப்படி வழங்க வேண்டிய சமூக நீதி - திட்டமிட்டு மறுக்கப்படுவதாக ஆகாதா?
கிறித்தவர்களுக்கும் இதே அநீதிதான்
இஸ்லாமியர்களுக்கு மறுக்கப்படும் அதே உரிமை மறுப்பு, தாழ்த்தப்பட்டோராக இருந்து மதமாறிய கிறித்தவர்களுக்கும் மறுக்கப்படுகிறது. இந்து மதத்தின் சாதிய தாக்கம் எல்லா மதங்களிலும் உள்ளதை நமது நாட்டின் சமூக ஆய்வாளர்கள் அனைவரும் ஏற்கின்றனர். இந்த நிசத்தை உணராதவர்களாகவோ அல்லது மறுப்பவர்களாகவோ தான் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்திலுள்ளவர்கள் உள்ளனர்.
மதம் மாறியதால் அவர்களின் நிலை மாறியதா? என்ற கேள்விக்கு இதுநாள்வரை இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. ஆனால் அவர்களுக்கு உரிய கல்வி, வேலை வாய்ப்பு கிடைத்திட வகைசெய்யும் சட்ட ரீதியான வழிமுறைகளுக்குத் தொடர்ந்து தடையாக இருந்து வருகிறார்கள்.
ஒரு குடும்பம் இந்து மதத்தின்படி தாழ்த்தப்பட்டதாக உள்ளது, அது கிறித்தவ மதத்திற்கு மாறுவதால், இதுகாறுமிருந்த அதன் சமூக, கல்வி நிலை (அந்தஸ்து) எவ்வாறு மாறுவிடும்? கும்பிடும் தெய்வமும், சென்றிடும் வழிபாட்டுத் தலமும்தான் மாறுகிறதே தவிர, சமூக, கல்வி நிலை அப்படியேதானே உள்ளது.
அதுமட்டுமா? அவர்களைப் பற்றிய சமூக (உயர் சாதியப்) பார்வை மாறுகிறதா? அவர்கள் ஏற்கனவே இருந்த சாதியின் பெயருக்கு முன் மதத்தை சேர்த்து அர்ச்சிப்பதை இன்றளவும் காண்கிறோமே! இதுதானே இந்தியாவின் சமூக சிந்தை நிலை! இது ஏன் நீதிபதிகளுக்குப் புரியாமல் போகிறது என்பது தெரியவில்லை.
சமூக எதார்த்தம் இவ்வாறிருக்கையில், மதம் மாறிய தாழ்த்தப்பட்ட கிறித்தவருக்கு பட்டியல் சாதிக்குறிய இட ஒதுக்கீடு உரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கு மாற்றப்படுகிறார்கள். இதற்கும் மத மாற்றக் காரணமே கற்பிக்கப்படுகிறது.
நமது நாட்டுச் சமூகத்தின் அடிதட்டு மக்களை மேம்படுத்த வகுக்கப்பட்ட அரசமைப்பு ரீதியான உரிமைகள், மத கலப்புடன் கூடிய சமூகப் பார்வையால் மறுக்கப்படுவதை எத்தனை காலத்திற்கு அனுமதிப்பது?
இந்த நிலை நீடிப்பது நமது நாட்டின் சமூக கட்டமைப்பிற்குள் பலவீனத்தையும், எதிர்வினையாற்றலையும் உருவாக்காதா?
மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். சமூக நீதியை நிலைநிறுத்த, அரசமைப்புச் சட்டமளிக்கும் உரிமைகள் அனைத்தும் தங்கு தடையின்றி அம்மக்களுக்கு சென்று சேரும் வகையில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். இன்று இதனை செய்யாவிடில், நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பு பலவீனப்பட இந்த அநீதியே காரணமாகிவிடும்.
நன்றி : வெப்துனியா.
இறை நம்பிக்கை கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் பயபக்தயுடையோர் ஆகலாம். திருக்குர்ஆன் 2:183)
புதன், 10 பிப்ரவரி, 2010
இஸ்லாமியர்களுக்கு சமூக நீதி: நிசமாவது எப்போது?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக