செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

குண்டுவெடிப்புகளை தடுப்பது எப்படி?

குண்டுவெடிப்புகள் மீண்டும் இந்திய துணைக் கண்டத்தை பிடித்து உலுக்குகிறது. அயல்நாடான பாகிஸ்தானில் சூரியன் உதிப்பதே குண்டுவெடிப்பு சப்தங்களோடுதான். ஆனால் இந்தியாவின் சூழல் சற்று வித்தியாசமானது.
சமீப காலங்களில் இந்தியாவில் குண்டுவெடிப்புகள் தொடர்கதையாகியிருந்தது. ஆனால் மலேகான், நந்தத், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மக்கா மஸ்ஜித் ஆகிய இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில் உண்மைகள் கண்டறியப்பட்ட பின்னர் பிரக்யாசிங் தாக்கூர், ஸ்ரீகாந்த் புரோகித் ஆகிய சங்க்பரிவாரத்தைச் சார்ந்தவர்கள் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டவுடன் குண்டு வெடிப்புகளும் குறைந்திருந்தது.

ஆனால் புனே சம்பவம் மீண்டும் பீதியை கிளப்புகிறது. இந்நாட்டின் ஸ்திரத்தன்மையை தகர்க்கும் தீய சக்திகள் தூங்கவில்லை என்றும் அவர்கள் தூங்குவதுபோல் நடித்து அவசரத்தை எதிர்பார்த்து இருக்கின்றார்கள் என்பதும் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவம் உணர்த்துகிறது.

ஊடகங்கள் மீண்டும் ஊகங்களுடன் களமிறங்கிவிட்டன. வழக்கம் போல் முஸ்லிம் பெயருடனான ஒரு அமைப்புதான் குற்றஞ் சாட்டப்படுவதில் முதல் இடத்தில் உள்ளது. சிலர் லஷ்கரை நோக்கி விரல் நீட்டுகிறார்கள். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுவது போல், ஊகங்கள் உண்மையான குற்றவாளிகள் தப்பிப்பதற்கு தடுப்பாக பயன்படுகிறது.

பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லஷ்கர் சந்தேக பட்டியலில் முதலிடத்தில் வருவது இயல்பு. பாகிஸ்தானில் நடைபெறும் தொடர் குண்டுவெடிப்புகள் அனைத்தும் இந்தியா ஸ்பான்சர் செய்தது என்று பாகிஸ்தான் அரசும், ஊடகங்களும் நிரந்தரமாக கூறிக்கொண்டிருக்கவே லஷ்கரின் பழிவாங்கும் முயற்சிகளை மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது. எந்தவொரு பிரிவினரையும் புறந்தள்ளிட இயலாது என்பதுதான் தற்போதைய நிலை.

பல்லில்லாத வயதான சிங்கமான பால்தாக்கரேயை அவருடைய கோட்டையிலேயே சர்வசாதாரணமாக சென்று வந்த ராகுல் காந்தியும் தொடர்ந்து ஷாருக்கானும் சிறுமைப்படுத்தியதற்கு பழிவாங்க சிவசேனாக்காரர்களை தூண்டியிருக்கலாம். தமக்கு ஏற்பட்ட அவமானத்திலிருந்து தப்பிப்பதற்கு எந்த வஜ்ராயுதத்தையும் பயன்படுத்த தயங்காதவர்கள் தான் தாக்கரேயும், பரிவாரங்களும். தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தடுப்பதில் இந்திய அரசு ஜாக்கிரதையோடு செயல்படுகிறது என்பது மறுக்க முடியாததுதான். ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் உதைத்து விளையாடும் கஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முடிவை எட்ட பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காணாமல் இந்திய துணைக் கண்டத்தில் வாழும் மக்களுக்கு நிம்மதியாக உறங்குவது சாத்தியமில்லை என்பது உண்மை. அதனால் பேச்சுவார்த்தையின் மூலம் பரிகாரம் காணும் முயற்சிகளை தடுப்பதற்கு நடக்கும் முயற்சியாக ஏன் இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கக்கூடாது என்பதையும் அலசி ஆராயவேண்டும். இந்தக்குண்டு வெடிப்புகளால் யாருக்கு ஆதாயம் என்ற கேள்வியுடனே விசாரணை துவங்கப்பட வேண்டும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: