திங்கள், 15 பிப்ரவரி, 2010

வேலூர் ஹோட்டல்களில் எலி புழுக்கை... நெளியும் புழுக்கள்... கெட்டுப்போன சிக்கன்..!


எலி புழுக்கை... நெளியும் புழுக்கள்... கெட்டுப்போன சிக்கன்..!

''ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் வந்துசெல்லும் வேலூர் நகருக்குள் இருக்கும் பல ஹோட்டல்களின் அந்தரங்கங்கள் எல்லாம் படுநரகம்...!'' என்ற ஷாக் செய்தியை சொல்லியிருக்கிறது, வேலூர் மாநகராட்சி நிர்வாகம்!

கடந்த வாரம், வேலூர் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் பிரியம்வதா தலைமை யிலான மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் அடங்கிய டீம், பல ஹோட்டல் களிலும் அதிரடியாக ஆய்வு செய்தது. அந்த டீம் முதலில் சென்றது, வேலூர் முழுக்க பல நடுத்தர மற்றும் உயர்தர ஹோட்டல்கள் நடத்துபவருக்கு சொந்தமான ஓர் உயர்தர ஹோட்டலுக்கு. பேருந்து நிலையம், கோயில்கள் அருகில், மாவட்ட கலெக்டர் வளாகம் அருகில் என நகரில் பல ஹோட்டல்கள் இவருடையது. இங்கெல்லாம் அனைத்து உணவுப் பண்டங்களின் ரேட் ஹை! அந்த ஹோட்டலில் உள்ள ஸ்டோர் ரூமுக்குள் அடியெடுத்து வைத்த அதிகாரிகள், அங்கு அடித்த கெட்ட வீச்சத்திலேயே திணறிவிட்டனர்.டீமில் இருந்த ஒருவர் நம்மிடம், ''அங்கு பாத்திரங் களில் கொட்டி வைக்கப்பட்டிருந்த பருப்பு வகையறாக்களில் கறுப்புக் கலராக தென் பட்டதை கையிலெடுத்து வெளிச்சத்தில் பார்த்தபோதுதான், அது எலிப் புழுக்கை என்பதைக் கண்டு அதிர்ந்தோம். சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்ளும் கல்கண்டு உள்பட அங்கிருந்த அனைத்துப் பொருட்களிலும் எலிப் புழுக்கை நீக்கமற நிறைந்திருந்தது. கோதுமை மாவு, மைதா மாவு ஆகியவற்றில் சிறிய வகை வண்டுகள் ஓடியாடி விளையாடின!

'எதை மொதல்ல சரி செய்யறீங்களோ இல்லையோ... ஸ்டோர் ரூமுக்கு வெள்ளை யடிச்சி சுத்தமா வெச்சிக்கோங்க. சிலந்தி வலை பின்னி, கரப்பான் பூச்சியும், எட்டுக்கால் பூச்சி ஓடற மாதிரியா வெச்சிருப்பீங்க?' என்று சத்தம் போட்டோம். அடுத்தது, புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் இன்னொரு ஆடம்பர ஹோட்டல். காலை டிஃபனுக்குப் பிறகு மீந்த - கெட்டுப்போன தேங்காய் சட்னியை 'வேஸ்ட்' பண்ண விரும்பாமல், மதிய உணவுக்கான சாம்பாரில் கலந்து அதை சப்ளை செய்வதைக் கண்டுபிடித்தோம்! வேக வைத்த பீன்ஸ் பொரியலை ஃபிரிஜ்ஜுக்குள் வைத்து அடுத்தடுத்த வேளைக்கு பயன்படுத்துவதையும் கண்டோம். அங்கிருந்த தோசை மாவை கையிலெடுத்துப் பார்க்க... அதில் புழுக்கள் ஜோராக நெளிவதைக் கண்டு கேட்டால், 'மாவு கரைக்க யூஸ் பண்ற தண்ணியில இந்தப் புழுக்கள் இருந்துச்சோ என்னவோ' என்று ஹோட்டலில் வேலை செய்பவர்கள் அலட்டிக்காம சொன்னதைக் கேட்டு ஆய்வுக் குழுவினரே நொந்துபோயிட்டோம்..!'' என்றவர், மற்ற ஹோட்டலில் நடந்த விஷயங்களையும் புட்டுப்புட்டு வைத்தார்.

''ஒரு பஞ்சாபி தாபா ஹோட்டலின் கிச்சனுக்குள் சென்றபோது, நான்கு நாட்களுக்கு முன்பு வேகவைத்து அழுகிய நிலையில் இருந்த காளான் துண்டுகளை, காளான் கிரேவி கேட்டு சாப்பிடக் காத்திருந்தவருக்காக வாணலியில் போட்டு வதக்கும்போது கையும் களவுமாகப் பிடித்தோம்.

இன்னொரு ஹோட்டல் விசிட்டில், மசாலா தடவப்பட்ட நிலையில் இருந்த கோழி இறைச்சியை ஆட்கள் நடமாடும் பகுதியில் கீழே கொட்டி வைத்திருந்தார்கள்! கிச்சனுக்கு வெளியே குடும்பம் குடும்பமாக குழந்தைகளோடு சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்க்கவே பாவமாக இருந்தது...'' என்றார்கள்!

இது இப்படி என்றால், நடுத்தர வகை ஹோட்டல்களில் கிச்சனுக்குள் நுழையவே முடியாத அளவுக்கு கழிவு நீர் குட்டை போல நின்றதாம். கிச்சனில் வேலை செய்பவர்கள் எல்லாம் 'தமிழ்ல எங்களுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை சுத்தம்தான்!' என்கிற ரீதியில் காட்சியளித்தனராம். பலருக்கு தொடர்ந்து தண்ணீரில் கைகளை நனைத்துக்கொண்டே வேலை செய்து வந்ததில், கைவிரல்கள் எல்லாம் வெள்ளையாகி, தோல் உரிந்த நிலையிலும், கையுறைகள் எதுவும் அணியாமல் வேலை செய்து கொண்டிருந்தார்களாம். எல்லாவற்றுக்கும் மேலாக பல ஹோட்டல் களில், அதை நடத்துவதற்குண்டான தகுதிச் சான்றிதழே இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, ஆய்வுக்குச் சென்ற அனைத்து ஹோட்டல்களுக்குமே நோட்டீஸ் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

நகர்நல அலுவலர் பிரியம்வதாவிடம் பேசி னோம். ''அதிரடி ஆய்வில் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், வேலூரில் உள்ள ஹோட்டல்கள் சாப்பிடுவதற்கே லாயக்கற்றவையாக இருக்கின்றன. சுகாதாரக் கேடு ஒரு பக்கம், அஜினமோட்டோ போன்ற பொருட்களை அளவுக்கு அதிகமாக உணவுப் பொருட்களில் கலந்து விற்பது ஒருபக்கம்... என பல வகைகளிலும் மோசமாக இருக்கின்றன ஹோட்டல்கள். அங்கிருந்த கெட்டுப்போன பொருட்களை எடுத்துவந்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். சம்பந்தப்பட்ட எல்லா ஹோட்டல்களுக்கும் நோட்டீஸ் முறையாக அனுப்பப்பட்டிருக்கிறது. பரிசோதனை முடிவு வந்தபிறகு, அந்த ஹோட்டல்களுக்கு சீல் வைப்பதற்குண்டான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்! மேலும், அனைத்து ஹோட்டல்களுக்கும் சுகாதாரமான வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று மாநகராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறோம்!'' என்றார்.

இந்த விசிட்டில் இன்னொரு விஷயமும் சொல்வதற்கு இருக்கிறது! வேலூர் மாநகராட்சி மேயரான ப.கார்த்திகேயனுக்கும் சொந்தமாக 'பேபி ரெசிடென்சி' என்ற உயர்தர ஹோட்டல், வேலூரின் பிரதான பகுதியில் இருக்கிறது. அதிரடி சோதனை செய்த சுகாதார குழு, மேயரின் ஹோட்டல் பக்கம் எட்டிப் பார்க்குமா என்ன!

இந்த நிலைமை வேலூரில் மட்டும்தானா இருக்கும்? நேர்மையான, அதிரடியான சோதனையை மாநிலமெங்கும் சி.பி.ஐ. ரெய்டு ரேஞ்சுக்கு ஒரேநாளில் திடீரென நடத்தினால் எல்லா குட்டும் அம்பலமாகாதா என்ன? அரசு அதைச் செய்யுமா... அல்லது, பாராட்டு விழா கொண்டாட்டங்களுக்கு ஹோட்டல் அதிபர்களிடம் நிதி வாங்கியே திருப்தி அடைந்துவிடுமா?

ஹோட்டலுக்குப் போகிற ஒவ்வொரு மனிதனும், காசைக் கொடுத்து தன் ஒட்டுமொத்த உயிரையும் அங்கே நம்பி ஒப்படைக்கிறான் என்பதை மறந்துவிடக்கூடாது!
நன்றி: ஜூவி.
- டி.தணிகைவேல்
படங்கள்: எம்.ஆர்.பாபு

கருத்துகள் இல்லை: