சென்னை: தமிழ் நாட்டில் முதல் நடமாடும் ஏ.டி.எம். சேவையை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தொடங்கியது. துணை முதல்வர் முக ஸ்டாலின் இதனைத் தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சேவையை இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பட் தலைமை தாங்கினார். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து ஏ.டி.எம். சேவையை தொடங்கி வைத்தார்.
விழாவில் அமைச்சர் பொன்முடி, பெரிய கருப்பன் பொது மேலாளர் தேனப்பன், உதவி பொது மேலாளர் பார்த்தசாரதி, ஐ.ஓ.பி. தொழிற்சங்கம் சார்பில் பாலு, ஸ்ரீதர், வாசு, குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து ஐ.ஓ.பி. தலைவர் பட் மற்றும் பொது மேலாளர் தேனப்பன் கூறுகையில், இந்தியன் ஓவர்சிஸ் வங்கி சார்பில் சென்னையில் 70 இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இப்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ஐ.ஓ.பி. நடமாடும் ஏ.டி.எம். மையத்தை தொடங்கி இருக்கிறது.
இந்த நடமாடும் ஏ.டி.எம். மையம் ராயபுரம் (செயிண்ட் தெரசா பள்ளி அருகில்) வண்ணாரப்பேட்டை (என்.பி.எல். அகஸ்தியா அபார்ட்மெண்ட் அருகில்), பாரிமுனை (ஐகோர்ட்டு அருகில்) வியாசர்பாடி (கண்ணதாசன் நகர் மின் அலுவலகம்) வால்டாக்ஸ் ரோடு (ரெட்டையார் பிள்ளை கோவில் தெரு, அரசு அச்சகம் பின்புறம்) ஆகிய இடங்களில் நின்று செல்லும்.
ஒவ்வொரு இடத்திலும் 2 மணி நேரம் இந்த நடமாடும் ஏ.டி.எம். நின்று செல்லும். இது செயற்கை கோள் மூலம் செயல்படும். இந்த திட்டத்திற்கு வரவேற்பு இருந்தால் மேலும் பல நடமாடும் ஏ.டி.எம். சேவை தொடங்கப்படும். இதற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஐ.ஓ.பி. சார்பில் மார்ச் மாதத்திற்குள் 1000 ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்படும்..., என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக