சனி, 6 பிப்ரவரி, 2010

முஸ்லிம் மாணவர் தாடி வைக்கத் தடை

கடலூரில் உள்ள செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்துவருகிறார். அதே ஊரைச் சேர்ந்த மாலிக் முஹம்மது என்பவர். வழக்கம் போல 15.1.2010 அன்றும் கல்லூரி சென்றவரை கல்லூரி நிர்வாகம் அவரை தடுத்து நிறுத்தி தாடி வைத்து கல்லூரி வர அனுமதியில்லை என்று கூறியது. மாணவர் மாலிக், தாடி வைப்பது தமது மத உணர்வு என எவ்வளவோ எடுத்துரைத்தும் கல்லூரியில் நுழைய மறுக்கப்பட்டு, பெற்றோருடன் வந்து மாறுதல் சான்றிதழ் பெற்றுச் செல்லும்படி பணிக்கப்பட்டார்.அதிர்ச்சி அடைந்த மாணவர் தரப்பு, தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் மன்சூரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க, அவர் மாவட்டச் செயலாளர் ஷேக் தாவூதை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார்.


மாவட்டச் செயலாளர் ஷேக் தாவூத் தலைமையிலான குழு மாணவ னிடம் கடிதமாகப் பெற்றுக் கொண்டு, கல்லூரி முதல்வர் திரு. ரட்சகனை தொடர்பு கொண்டு மாணவனை அனுமதிக்கும்படி கோரிக்கை வைத்தனர். ஆனால், கல்லூரியின் சட்டப்படி (?) தாடி வைக்க அனுமதி கிடையாது என மறுத்துவிட்டார். இதனிடையில், கடந்த 16.1.2010 அன்று லால்பேட்டைக்கு வருகைதந்த தமுமுக மாநில பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களை சந்தித்து நடந்ததை எடுத்துரைத்தனர். 18.1.2010 அன்று எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவு உதயசங்கரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.

இறுதியாக மாணவனை அழைத்து தாடி எடுத்து விடும்படி அறிவுறுத்திய கல்லூரி நிர்வாகத்திடம், தாடியை எடுக்க முடியாது என மாணவன் மாலிக் தெரிவித்தார். இதனிடையில் கடந்த 20.1.2010 அன்று மாணவனுக்கு சஸ்பென்ட் ஆர்டர் கொடுக்கப்பட்டது. தமுமுக மாவட்டச் செயலாளர் ஷேக் தாவூத் தலைமையிலான குழு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லாத நிலையில், நிர்வாகத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர்களைக் கூட்டி போராட்ட அறிவிப்பு செய்யப்பட்டது. இதையடுத்து பதறிபோன கல்லூரி நிர்வாகம் மாணவனை மீண்டும் சேர்த்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

நமக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது போராடுவதை தவிர வேறு வழி ஏது.

கருத்துகள் இல்லை: