டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்த லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகள் என்று கூறி போலி எண்கெளண்டரில் அப்பாவி தம்பதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2005ம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே சொராபுதீன் ஷேக் என்பவரை குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதி என்றும் முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல வந்ததாகவும் போலீசார் நாடகமாடினர்.
அதே நேரத்தில் அவரது மனைவி கசூர் பீவியும் காணாமல் போனார். ஆனால், சொராபுதீனை மட்டும்தான் தாங்கள் கொன்றதாகவும் கசூர் பீவி என்ன ஆனார் என்று தங்களுக்குத் தெரியாது என்றும் குஜராத் போலீசார் கூறினர்.
ஆனால், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கசூர் பீவியையும் போலீசார் சுட்டுக் கொன்று அவரது பிணத்தை ரகசியமாக எரித்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் கடும் நெருக்கடியால் இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை குஜராத் அரசு அமைத்தது.
அதை தொடர்ந்து போலி எண்கெளன்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளான வன்சரா ஐபிஎஸ், ராஜ்குமார் பாண்டியன் ஐபிஎஸ் உள்பபட 13 அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இதில் டிபிஜியாக இருந்த வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் (இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்), எம்.என். தினேஷ் ஐபிஎஸ் ஆகியோரே முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். கடும் நெருக்கடியால் இந்த மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆனால், அவர்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையை குஜராத் அரசு எடு்க்கவில்லை. மேலும் வழக்கு விசாரணையையும் அப்படியே அமுக்க முயன்று வருகிறது.
இந் நிலையில் ரூபாபுதீன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், இந்த வழக்கை குஜராத் அரசு முறையாக விசாரிக்கவில்லை. யார் மீதும் உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை நரேந்திர மோடி அரசு விசாரிக்கவும் போவதில்லை. எனவே இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி தருண் சட்டர்ஜி, நீதிபதி ஆப்தாப் ஆலம் ஆகியோர் வழக்கை சிபிஐ விசாரிக்க உததரவிட்டனர்.
ஆந்திராவைச் சேர்ந்தவரான சொராபுதீனும் அவரது மனைவி கசூர் பீவியும் ஒரு பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர்களை குஜராத் போலீசார் இடைமறித்து இழுத்துச் சென்றனர். பின்னர் இவர்களை தீவிரவாதிகள் என்று பட்டம் சூட்டி சுட்டுக் கொன்றனர்.
இதில் கசூர் பீவியின் உடலை எரித்துக் கொன்றுவிட்டு அவரது கொலையை மறைக்கவும் குஜராத் தீவிரவாதத் தடுப்பு போலீசார் முயன்றனர்.
மேலும் இவர்களுடன் இருந்த துல்சிராம் பிரஜாபதி என்பவர் இந்தக் கொலைகளை நேரில் பார்த்துவிட்டதால் சாட்சியத்தை அழிப்பதற்காக அவரையும் தீர்த்துக் கட்டிவிட்டனர்.
இப்போது இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக