ஞாயிறு, 3 ஜனவரி, 2010

துபாயில் இஸ்லாமிய வங்கியல் அகாடமி

துபாய்:இஸ்லாமிய வங்கிகளின் பயன்பாடுகள் வளர்ந்துவரும் சூழலில் இஸ்லாமிய ஷரீஅத்தின் படியான கொள்முதல்- விற்பனை வங்கிமுறைகள் குறித்த அகாடமி படிப்பு மற்றும் ஆய்விற்காகவும் வளைகுடா நாடுகளில் முதன் முதலாக இஸ்லாமிய வங்கியல் அகாடமி துபாயில் செயல்பட ஆரம்பிக்கும்.

அதிகாரப்பூர்வ ரீதியிலான படிப்பிற்கும், ஆய்விற்கும் உரிய ஸ்தாபனங்கள் இல்லாதது அதிகமான நபர்கள் இத்துறையில் வருவதற்கு தடையாக உள்ளன. இஸ்லாமிய வங்கியலில் தேர்ச்சிப் பெற்றவர்களின் பற்றாக்குறையால் ஏராளமான நிறுவனங்களை நெருக்கடிக்குள்ளாக்கியிருக்கிறது.

பிரபல மார்க்க அறிஞரும், ஃபத்வா ஷரீஅத் போர்டுகளின் தலைவருமான டாக்டர்.ஹுசைன் ஹமீத் ஹஸன் துபாய் இஸ்லாமிய வங்கியல் அகாடமிப்பற்றிய தகவலை தெரிவித்தார்.

உலகிலேயே இஸ்லாமிய வங்கியல் குறித்த படிப்பிற்கும், ஆய்விற்குமுரிய இரண்டாவது நிறுவனமாக இது செயல்படும். இன்னும் சில மாதங்களில் இதன் முக்கிய செயல்பாடு ஆரம்பிக்கும். 2011 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பட துவங்கும். தற்போது பிரான்சில் மட்டுமே இஸ்லாமிய வங்கியல் குறித்து பயில்வதற்கான அகாடமி உள்ளதாக டாக்டர் ஹுசைன் தெரிவிக்கிறார். அது சமீபத்தில்தான் துவங்கப்பட்டது. துபாயில் இஸ்லாமிய வங்கியலுக்கான அகாடமி துவங்குவதோடு வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய வங்கியல் அறிஞர்களின் கூட்டமைப்பும் உருவாகும்.இந்த அகாடமியில் இஸ்லாமிய நிதியியல் இளங்கலைப்பட்டம், முதுகலைப்பட்டம் மற்றும் ஆய்வின் அடிப்படையிலான முனவர் பட்டம் ஆகியன வழங்கப்படும்.உலகில் இத்துறையில் அதிகரித்துவரும் தேவையை கருதியே இந்த அகாடமி துவக்கப்படுகிறது.இந்த அகாடமி இஸ்லாமிய அறிஞர்கள், நிறுவனங்களின் மேற்பார்வையில் கொண்டுவரப்படும் என்றும் டாக்டர் ஹுசைன் தெரிவித்தார்.

சில வருடங்களுக்கு முன்பாக வளைகுடா பகுதிகளில் உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வங்கிகளிலும், இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பணி புரிவதற்கு இதர வங்கியல்துறையில் பணியாற்றியவர்களை நியமித்தனர். ஆனால் இஸ்லாமிய நிதியியல் நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு குறைந்த அளவே அறிவுள்ளது. அகாடமியில் சர்வதேச அளவில் செயல்படும் அறிஞர்கள்தான் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் எல்லா இஸ்லாமிய வங்கிகளின் பிரதிநிதிகளையும் உட்படுத்திய போர்டு ஒன்று செயல்படத்துவங்கியுள்ளது.

டாக்டர் ஹுசைன் இதன் தலைவராக செயல்படுகிறார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் இஸ்லாமிய வங்கிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதே இதன் நோக்கம். இது வங்கிகளின் தரத்தை மேம்படுத்த உதவும் என டாக்டர்.ஹுசைன் கூறுகிறார்.

துபாயில் மட்டும் தற்ப்போது 4 இஸ்லாமிய வங்கிகள் செயல்படுகின்றன. துபாய் இஸ்லாமிய வங்கி, நூர் இஸ்லாமிய வங்கி, எமிரேட்ஸ் இஸ்லாமிய வங்கி, துபாய் வங்கிய ஆகியன. அத்தோடு அமீரகத்தில் அஜ்மான் வங்கி, ஷார்ஜா இஸ்லாமிய வங்கி, அபுதாபி இஸ்லாமிய வங்கி, அல்ஹிலால் வங்கி(அபுதாபி) ஆகியனவும் உள்ளன. மற்ற பாரம்பரிய வங்கிகளும் இஸ்லாமிய வங்கிகளின் தேவை அதிகரித்துவரும் சூழலை முன்னிட்டும், வாடிக்கையாளர்கள் தங்களை விட்டுச்செல்லாமலிருக்கவும் இஸ்லாமிய வங்கிப்பிரிவுகளை தனியாக ஆரம்பித்துள்ளன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: