செவ்வாய், 26 ஜனவரி, 2010

அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்


குடியரசு தின சிந்தனைகள்

ஆங்கில ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலைப் பெற்ற இந்திய திருநாட்டிற்கு ஒரு அரசியல் சாசனம் தேவைப்பட்டது. இதற்காக டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்தக்குழு பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்ந்து ஒரு அரசியல் சாசன சட்டத்தை உருவாக்கியது. அந்த அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்தான் ஜனவரி 26, 1950. அந்த தினம்தான் இந்தியதேசம் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனை நினைவுக்கூறூம் விதமாகத்தான் ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தினமாக இந்திய நாட்டு குடிமக்கள் அனைவரும் வேறுபாடின்றி கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவின் அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை குடியரசு தினமாக பாகுபாடின்றி கொண்டாடும் நமது இந்திய குடிமக்கள் அந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையான சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற பாகுபாடற்ற தன்மையுடன் நடத்தப்படுகிறார்களா? என்றால் அதன் பதில் இல்லை என்று கூற எந்த தயக்கமும் இல்லை.

இந்திய தேசத்தைப் பொறுத்தவரை அடிப்படையில் சோசியலிச ஜனநாயக மதசார்பற்ற நாடு. இந்திய தேசத்தின் அடிப்படைக் கொள்கையான ஜனநாயகத்துடன் நாற்பத்திரெண்டாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 1976 இன் மூலம், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தம்தான் இந்தியாவை ‘இறையாண்மை சோசலிச மதச் சார்பற்ற ஜனநாயகக் குடியரசு' என்கிறது.

சாதி, சமய, இன, மொழி, பாலின வேறுபாடுகளையெல்லாம் கடந்து, இந்திய குடிமக்கள் அனைவரையும் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்களாக்கி, சமப்படுத்துகிறது அது. நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் போன்றவை குடிமக்கள் அனைவருக்கும் வாய்க்க உறுதியளிக்கிறது. மேற்கண்ட மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் கொண்ட இந்திய அரசமைப்பு, இந்திய மக்களுக்கு வழங்கியிருக்கும் வழிமுறைதான் மக்களாட்சியாகும். அத்தகைய மக்களாட்சி அரசியல் அமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களை நிறைவேற்றுவதில் நம்பிக்கையளிக்கும் வகையில் செயல்பட்டுவருகிறதா? என்பதே நம் முன் எழும் கேள்வி!

ஹிந்து பார்ப்பணர்களால் உருவாக்கப்பட்ட சாதீயத்தையும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் மாற்றியமைக்கக் கூடியதாக மக்களாட்சி இல்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும், அதன் அடிப்படைக் கட்டமைப்புகள் இன்னும் சரிந்து விடவில்லை என்பது நம்பிக்கையளிக்கும் ஒன்றாகும்.அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு 1975-77 ஆம் ஆண்டுக் காலக்கட்டங்களில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசிடமிருந்து தாக்குதல்கள் நிகழ்ந்தபோதும் அதன் அடிப்படைக்கட்டமைப்பு பாதிக்கப்படவில்லை.

இந்திய தேசம் ஒரு சோசியலிச நாடாகும். சோசியலிசம் என்றால் வருமானத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் ஏற்றத்தாழ்வுகளை களைவதாகும். ஆனால் இன்றைய நிலைமை என்ன? இந்திய தேசத்தை அப்பட்டமான முதலாளித்துவ சார்புள்ள நாடாக ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டார்கள். மூலதனங்களும் பகிர்மானங்களும் மக்களின் வசமிருக்க வேண்டும் என்ற சோசியலிச நிலைப்பாட்டிற்கெதிராக இந்தியாவின் பூர்வீக குடிமக்களான மலைவாசி, ஆதிவாசிகளை விரட்டிவிட்டு அங்கிருக்கும் கனிம வளங்களை கைப்பற்றி முதலாளித்துவ சக்திகளுக்கு தாரை வார்க்கத்தான் இந்திய ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டுகிறார்கள்.

இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம் என்ற அடிப்படை சித்தாந்தத்திற்கெதிராக பணக்காரனுக்கு ஒரு நீதி ஏழைக்கு ஒரு நீதி என்று நீதி பங்கு வைக்கப்படுகிறது. நீதிக்காக குரல் கொடுப்பவர்களை நக்ஸல்கள் என்றும் தீவிரவாதிகள் என்றும் முத்திரைக் குத்தி வழக்கு பதிவுச் செய்யப்படுகிறது.

நீதியை நிலைநாட்டும் நீதிமன்றங்கள் கூட அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கும் உரிமைகளுக்கெதிரான நிலைப்பாட்டினை மேற்க்கொள்வதை காண்கிறோம். இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்போம் என்று சத்தியப்பிரமாணம் எடுத்துவிட்டு ஆட்சிக்கட்டிலில் உட்காரும் அரசியல்வாதிகள் குடிமக்களை சுரண்டியே தனது வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்கின்றனர்.

தேர்தலில் ஜனநாயகத்திற்கு இனி அகராதியில் பணநாயகம் என்று மாற்றவேண்டுமோ என்ற அளவிற்கு பண தண்ணீராக வாரியிறைக்கப்படுகிறது. வாக்காளர்களும் பணம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்திய அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கெதிராக பெரும்பான்மை பயங்கரவாதம் கட்டவிழ்த்துப்படுகிறது.பாப்ரி மஸ்ஜிது அதன் ஒரு உதாரணமே. சிறுபான்மை மக்களின் உயிர்களும், உடமைகளும் மலிவானப் பொருளாக மாற்றப்பட்டுள்ளன. கமிஷன்கள் போடப்பட்டு அவை பின்னர் கவனிப்பாரற்று குப்பைக் கூடையை எதிர் நோக்கியுள்ள சூழல்.

இறையாண்மை மிக்க தேசம் என்ற இந்திய சித்தாந்தம் காற்றில் பறக்கவிடப்பட்டு ஏகாதிபத்திய தேசங்களுக்கு அடிமை சேவகம் புரியும் நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். இந்திய குடியரசு தினத்தை சடங்கிற்காக ஆண்டுதோறும் கொண்டாடும் மக்கள் இந்திய தேசத்தின் தற்போதைய சூழலையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் விழிப்புணர்வு பெறாவிட்டால் ஆட்சியாளர்கள் மீண்டும் நம்மை அந்நியனுக்கு அடகு வைத்துவிடுவார்கள் எச்சரிக்கை.

கருத்துகள் இல்லை: