செவ்வாய், 12 ஜனவரி, 2010

சென்னை புத்தக கண்காட்சி 2010


- இனியவன்

வருடந்தோறும் சென்னையில் புத்தக பிரியர்களின் ஆவலுக்குத் தீனி போடும் வகையில் புத்தகக் கண்காட்சி பிரம்மாண்டமாய் நடந்து வருகிறது. நூற்றுக் கணக்கான பதிப்பகங்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட 600 க்கும் மேற்பட்ட புத்தகக்கடைகளை கண்காட்சியில் காண முடிந்தது. வருடா வருடம் புத்தக ஸ்டால் களின் எண்ணிக்கை கூடி வருகிறதே தவிர குறையவில்லை. டிசம்பர் 31 ம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்ட கண்காட்சி ஜனவரி 10 ம் தேதி வரை நடக்கிறது. புத்தகக் கண்காட்சி மட்டுமல்லாமல் இலக்கிய கூட்டங்களும், புத்தக வெளியீடும் தனி அரங்கில் நடத்தப்படுகிறது.


வருத்தப்பட்ட முதல்வர்


வருடா வருடம் கண்காட்சியை முதல்வர் கருணாநிதியை வைத்து தொடங்கி ஏதாவது ஒரு சலுகையைப் பெறுவது தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் வழக்கம். கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்த போது ஒரு கோடி ரூபாய் அமைப்புக்கு நிதி வழங்கினார் கருணாநிதி. அதில் வரும் வட்டியை வைத்து ஆண்டு தோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒரு லட்சம் பொற்கிழி பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் கடந்த ஆண்டு தனது பெயரை எழுத மறந்த புத்தக ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று கொதித்தார். முத்தையா என்பவர் எழுதிய சென்னை மறுகண்டுபிடிப்பு என்ற புத்தகம் தான் அது. அதில் சென்னையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களைப் பற்றி வரிசைக்கிரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 1967லில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந் தது. என்று குறிப்பிட்டு அண்ணாவின் பெயர் குறிப்பிடவில்லை. 1969லில் நான் முதல்வரானது, 1971லில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததுபற்றி குறிப்பிடவில்லை. ஆனால் ௧௯௭௭ லில் எம்.ஜி.ஆர் முதல்வரானதையும் ௧௯௯௧ ம் ஆண்டு 1 மாதம் மட்டுமே முதல்வராக இருந்த ஜானகி அம்மை யாரையும் குறிப்பிட்டுள்ளது என்று கொதித்த முதல்வர். என்ன தவறு செய்து விட்டான் இந்த கருணாநிதி, தமிழனாக பிறந்ததை தவிர: அதுவும் தமிழச் சமுதாயத்திலே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்ததை தவிர என்று வறுத்தெடுக்க, அதிர்ந்து போனார்கள் புத்தக கண்காட்சி அமைப்பாளர்கள்.


விழாவில் பேசிய முதல்வர் கண் காட்சியை பார்வையிடாமல் சென்று விட்டார்.


அப்படி என்ன புத்தகம் தான் அது என்று நானும் வலைப்பதிவு காப்பாளர் ராஃபியும் சென்று புத்தகத்தை கண்டுபிடித்து புரட்டினோம். கருணாநிதியை மட்டுமல்ல முஸ்லிம் களையும் புறக்கணித்துள்ளது அந்த புத்தகம்.

சென்னையை முஸ்லிம் நவாப்கள் ஆண்டதைப்பற்றியோ, சென்னையின் உருவாக்கத்தில் முஸ்லிம்களின் பங்கு பற்றியோ அதில் ஒரு செய்தியுமில்லை.

சென்னையின் புகழ்பெற்ற இடங்களில் திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் புகைப்படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.கோடே பாக் (உர்து மொழியில் குதிரை லாயம் )என்பதுதான் இன்றைய கோடம்பாக்கம் என்பதும் சயீதா பேட்டை என்பது சைதா பேட்டை ஆகவும் ச்சேபாக் (உருது மொழியில் ஆறு தோட்டம் ) சேப்பாக்கம் ஆனதும் இன்னும் நிறைய முஸ்லிம் அடையாளங்கள் சென்னையில் இருப்பதும் சென்னையை திரும்ப கண்டுபிடித்தவருக்கு தெரியவில்லை போலும்.

முஸ்லிம்களுடைய வரலாறுகள் தொடர்ந்து மறைக்கப்படும் அநீதி எப்போது முடிவுக்கு வரும்.

கருத்துகள் இல்லை: