வியாழன், 7 ஜனவரி, 2010

ஆளுநர் உரை ஏமாற்றத்தை அளிக்கின்றது

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை

இன்று தமிழக சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரை ஏமாற்றத்தை அளிக்கின்றது
உயர் தொழில்கல்வி (புரபெசனல்) பயிலும் முதல் தலைமுறை மாணவர்களது கல்வி கட்டணம் முழுவதையும் அரசே செலுத்தும், நெல் கொள்முதல் விலை ரூ50 உயர்த்தப்படும் பட்டா வழங்குவதற்கான காலக்கட்டத்தை ஐந்தாண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளாக குறைக்கப்படும் என மூன்று வரவேற்க்கத்தக்க அம்சங்களைத் தவிர வேறு அடித்தட்டு மக்களுக்கு பயன் தரும் அறிவிப்புகள் எதுவும் ஆளுநரின் உரையில் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகின்றது.

சிறுபான்மை மக்களுக்கு பலன் அளிக்கும் புதிய அறிவிப்புகள் எதுவும் ஆளுநரின் உரையில் இடம் பெறாதது பெரும் அதிருப்தி அளிக்கின்றது. சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளித்தது மட்டும் முஸ்லிம்களின் சமூக முன்னேற்றத்திற்கு போதுமானது இல்லை. ஆனால் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு அரசின் கொள்கை ஒன்றுமில்லை என்பதை தான் ஆளுநரின் உரையில் சிறுபான்மை மக்கள் குறித்து ஒன்றும் சொல்லப்படாது உணர்த்துகின்றது.

நெல் கொள்முதல் விலையை ரூ50ஐ அதிகரிப்பதாக கூறும் ஆளுநர் அறிக்கை மரபணு விதைகள் மூலம் வேளான்மையும் விவசாயிகளின் வாழ்வுரிமையும் பாதிக்கப்படுவது குறித்து எதுவும் ஆளுநர் உரையில் குறிப்பிடப்படாது அரசின் கொள்கை தடுமாற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசு மருத்துவமனை சீரமைப்பதற்காக ரூ792 கோடி செலவுச் செய்திருப்பதாக ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு ரூ13,000 கோடி ரூபாய் மது விற்பனை மூலம் அரசுக்கு வருகின்றது. அரசுக்கு வருவாயை தரும் மதுவை அருந்தி தமது உடலை சீரழித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அரசு மருத்துவமனைகளோ வசதியில்லாமல் தள்ளாடும் நிலையில் உள்ளன. அரசு மருத்துவமனைளை மேம்படுத்த மதுவிற்பனை வருவாயில் 10 சதவிகிதம் கூட ஆண்டுதோறும் செலவுச் செய்யப்படாதது வருத்தத்திற்குரியதாகும்.

ஓய்வு பெறும் அரசு ஊழியர்களை மீண்டும் நியமனம் செய்யும் அரசின் உத்தரவை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் நகைப்பிற்குரியதாக இருக்கின்றன. அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுச் செய்வதற்கு கால அவகாசம் ஏற்படுவதால் தான் ஒய்வு பெறும் அரசு ஊழியர்கள் மீண்டும் தற்காலிகமாக நியமிக்கப்படுவதாக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் எப்போது ஒய்வு பெறுவார்கள் என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும் நிலையில் ஒய்வு பெறும் ஊழியர்களின் இடத்தில் புதியவர்களை நியமிக்க முன்கூட்டியே ஏற்பாடுகளை அரசு செய்வதற்கு என்ன தடையுள்ளது? தற்காலிகமாக ஒய்வு பெற்றவர்களை மீண்டும் அரசு பணியில் நியமனம் செய்வது வேலையில்லாமல் காத்திருக்கும் அரை கோடிக்கும் மேலான இளைஞர்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். இதனை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் உரையில் அமைந்துள்ளது கண்டிக்கத்தக்கது.

கருத்துகள் இல்லை: