ஞாயிறு, 3 ஜனவரி, 2010

ப.சிதம்பரம் முஸ்லிம்களிடம் மன்னிப்புக்கோர சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை

போபால்:ஜிஹாதும் தீவிரவாதமும் ஒன்றுதான் என்றுபேசி முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உடனடியாக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரவேண்டுமென சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் எ.சயீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் ப.சிதம்பரம் ஜிஹாதையும் தீவிரவாதத்தையும் ஒன்றிணைத்து பேசி இஸ்லாத்தின் மீது களங்கமேற்படுத்தும் உரைக்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ப.சிதம்பரம், முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும்விதமாக இஸ்லாத்தை அவமதிக்கத்தக்க வகையில் ஒப்பீடுச்செய்து பேசியுள்ளது அவரது இரட்டைநிலையை காண்பிக்கிறது. ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு அவருக்கு இஸ்லாத்தைப்பற்றியோ அதன் கொள்கைகளைப்பற்றியோ போதிய அறிவு இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. படித்த மேதாவியான ப.சிதம்பரம் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து யாரையோ திருப்தி படுத்தும்வண்ணம் உரையாற்றியிருப்பதைப்பற்றி எஸ்.டி.பி.ஐ க்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

சில மாதங்களுக்கு முன்புதான் தேவ்பந்தில் நடைபெற்ற ஜம்மியத்துல் உலமா மாநாட்டில் இஸ்லாம் அமைதியைப்போதிக்கின்றது என்றும் தீவிரவாதத்தை அத்தோடு தேவையில்லாமல் இணைத்துவிட்டார்கள் என்றும் இஸ்லாத்தை பற்றிய உயர்வான கருத்தை வெளியிட்டார். ஆனால் தற்போது போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் ஜிஹாதும் தீவிரவாதமும் ஒன்று என்று பேசியுள்ளார்.

கடந்த மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரியணை ஏற உதவிய முஸ்லிம்கள் ப.சிதம்பரத்தின் இச்செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எந்த சமூகத்திலும் இல்லாத அளவுக்கு பயத்திலும் பசியிலும் உழலும் ஒரு சமூகமாக தலித்துகளை விட மோசமான நிலையிலிருப்பதாக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட சச்சார் கமிசன் அறிக்கையே கூறியுள்ள நிலையில் அதன் பரிந்துரைகளை அமுல்படுத்தி முஸ்லிம் சமூகத்தை விடுவிக்கும் என்ற முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கையில் மண்ணை அள்ளும் போடுவிதமாகவே காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் உள்ளன.

நீண்டநெடுங்காலமாக ஜிஹாத் தீவிரவாதம் என்று கூறி முஸ்லிம் சமூகம் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லிம் இளைஞர்கள்தான் காரணம் என பொய்க் குற்றஞ்சாட்டப்பட்டு மும்முரமாக குறிவைக்கப்படும் சூழலிருந்து தங்களை காப்பாற்ற வழித்தெரியாமல் தத்தளித்துக் கொண்டுள்ளார்கள். ஆனாலும் சில நேர்மையான அதிகாரிகளின் புலனாய்வில் இக்குண்டுவெடிப்புகள் முஸ்லிம்களால் நடத்தப்பட்டது அல்ல இவற்றின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டு சற்று ஆசுவாசம் அடைந்த நிலையிலுள்ளனர்.

தற்ப்போது குண்டுவெடிப்புகள் நடைபெறுவதுமில்லை.ப.சிதம்பரத்தின் இந்த உரையால் முஸ்லிம்கள் மீதே புலனாய்வுகள் திரும்பும். புலனாய்வு திசை திருப்பப்படும். ஜிஹாதைப்பொறுத்தவரை அது மார்க்க ரீதியான கடமையாகவே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஜிஹாத் என்பது தீமைகளுக்கும், தீயவ சக்திகளுக்குமெதிரான போர். இது எப்பொழுதுமே போர் என்ற பொருளை மட்டும் கொடுப்பது அல்ல. இது குறிப்பிட்ட நாளிலிருந்து துவக்கப்பட்டதும் அல்ல.இது இஸ்லாத்தின் போதனைகளில் ஒன்று. இஸ்லாம் தன்னை பின்பற்றுவோருக்கு அவர்களின் எதிரிகளை மன்னிக்கவும் கூறுகிறது அதே வேளையில் தேவையேற்பட்டால் அவர்களோடு போர் புரியவும் கூறுகிறது. முஹம்மது நபி அவர்கள் எதிரிகளை மன்னிக்கவும் செய்தார்கள் அவர்கள் இரத்தம் தாகம் கொண்டு அலைந்தபோது அவர்களுக்கெதிராக போர்புரியவும் செய்தார்கள்.

ப.சிதம்பரம் கூறும்பொழுது 1989ஆம் ஆண்டிற்கு பிறகே ஜிஹாத் துவக்கப்பட்டதாக கூறுகிறார். இது அவருடைய அறியாமையை காட்டுகிறது. ஜிஹாது இஸ்லாத்தில் ஏற்கனவே கூறப்பட்டுள்ள ஒன்று. முஹம்மது நபியும் அவர்களுடைய தோழர்களும் இதனை செய்துள்ளார்கள். ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும், சிலுவைப்போர் மரபுரீதியானது என்றும் ப.சிதம்பரம் கூறியதிலிருந்து அவருக்கு ஜிஹாத் பற்றிய சட்டதிட்டங்களோ, கொள்கைகளோ, வரம்புகளோ,பொருளோ தெரியவில்லை என்றே புரிந்துக்கொள்ள முடிகிறது.

இந்த உலகில் அநியாயமாக ஒரு உயிரைக்கொல்வது இந்த உலகத்தில் அனைத்து மனிதர்களையும் கொன்றதற்கு சமம் என்று இஸ்லாம் போதிக்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் எ.சயீத் கூறியுள்ளார்.
செய்தி:twocircles.net

கருத்துகள் இல்லை: