செவ்வாய், 12 ஜனவரி, 2010

பாராளுமன்றத்தில் மெளனம் சாதித்த முஸ்லிம் எம்.பிக்கள்!

புதுடெல்லி:சமீபத்தில் நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் முஸ்லிம் எம்.பிக்களில் பெரும்பாலோர் தமது தொகுதிகளைப் பற்றியோ அல்லது சமுதாயத்தைப் பற்றியோ எந்த வித கேள்வியையும் கேட்காமல் உதடுகளை இறுக்க மூடியிருந்துள்ளனர்.

பாராளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு நவம்பர் 11 முதல் டிசம்பர் 21 வரை 34 நாள்களில் 21 நாள்கள் நடைபெற்றது. 2010 ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரப்படி கடந்த குளிர்காலக் கூட்டத் தொடரில் 29 முஸ்லிம் எம்.பிக்களில் 18 பேர் எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமல் மெளனம் சாதித்துள்ளனர்.
முஸ்லிம் எம்.பிக்களில் அதிக கேள்விகளைக் கேட்டு பாராட்டைப் பெறுகிறார் ஹைதராபாத் பாராளுமன்றத் தொகுதி ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி எம்.பி யான அஸாஸுதீன் உவைசி. இவர் 41 கேள்விகளை எழுப்பியுள்ளார். மற்ற எம்.பிக்களில் கேள்வியெழுப்பிய குறிப்பிடத்தக்கவர்கள் பின்வருமாறு:
செய்யத் ஷாநவாஸ் ஹுசைன்(பா.ஜ.க)-27 கேள்விகள்
ஜெ.எம்.ஹாரூன் ரஷீத்(இ.காங்கிரஸ்)-19 கேள்விகள்
எம்.ஐ.ஷாநவாஸ்(காங்கிரஸ்)-16 கேள்விகள்
மொநாஸிர் ஹஸன்(ஐக்கிய ஜனதா தளம்)-11 கேள்விகள்
பத்ருத்தீன் அஜ்மல் (அஸ்ஸாம் ஒருங்கிணைந்த முன்னேற்ற முன்னணி)-10 கேள்விகள்
தமிழகத்தைச் சார்ந்த வேலூர் பாராளுமன்றத் தொகுதி முஸ்லிம் லீக் எம்.பி (பாராளுமன்றத்தில் தி.மு.க எம்.பியாக கணிக்கப்படுகிறார்) அப்துற்றஹ்மான் 6 கேள்விகளைக் கேட்டுள்ளார்.
21 நாள்கள் கூட்டத்தொடரில் 4 முஸ்லிம் எம்.பிக்களே அனைத்து நாள்களிலும் பங்கேற்றுள்ளனர். அதில் 2 பேர் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. கேள்விக்கேட்காதோர் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முஹம்மது அஸாருதீன், பீகார் மாநிலத்தைச் சார்ந்த மெளலவி அஸ்ராருல் ஹக் காஸிமி ஆகியோரும் அடங்குவர். இவர்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு வென்றவர்கள்.
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் மிகவும் குறைந்த நாட்கள் அவையில் பங்கேற்றவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மெளஸம் நூர். இவர் வெறும் 4 நாட்களே பங்கேற்றுள்ளார். பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளைச் சார்ந்த எம்.பிக்கள் எந்தவொரு கேள்விகளையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
source:twocircles.net

கருத்துகள் இல்லை: