சனி, 23 ஜனவரி, 2010

மத வெறியர்கள்- போலி முற்போக்குவாதிகள் - ஹிஜாப்




சமீப காலமாகவே இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் எந்த வகையிலாவது களங்கப்படுத்திட வேண்டும் என வெறி பிடித்த சில கூட்டங்கள் இணைய தளத்தில் காழ்ப்புணர்ச்சியுடன் அலைந்து கொண்டிருப்பதை பல இணையதளங்களையும் பார்வையிடுவோர் மிக எளிதில் உணரலாம். இப்படி இஸ்லாத்தை விமர்சிக்க கிளம்பிய பல அறிவுஜீவிகள் (தங்களைத் தாங்களே அவ்வாறு தான் நினைத்துக் கொள்கின்றனர்) ஆக்கப்பூர்வமான விமர்சனத்தை முன்வைத்தால் அவர்களுக்கு பதில் சொல்லிவிடலாம். ஆனால் வெறுமனே தங்கள் மனதினில் ஊடுருவியிருக்கும் இஸ்லாமிய எதிர்ப்பு என்ற ஒற்றைத் தனத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து கருத்துகளை முன்வைக்கின்றனர். எந்த கருத்தை முன்வைக்கின்றனரோ அதில் இஸ்லாமிய நிலைப்பாடு என்ன என்பதைக் கூட அறியாத பல அறிவிலிகள் தான் இத்தகைய அறிவுஜீவி வேடம் தரித்து இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய அறிவிலிகளை இரண்டு வகையினராக மிக எளிதில் பிரித்து விடலாம். முதல் கூட்டம் மதக் காழ்ப்புணர்ச்சியுடன் திரிந்து கொண்டிருப்பவர்களை அடிப்படையாக வைத்து உருவானது. தாங்கள் பின்பற்றும் மதத்தினில் இருக்கும் பல பிற்போக்குத்தனங்களை மறைக்க வேண்டியோ அல்லது அதை நியாயப்படுத்த வேண்டியோ இஸ்லாத்தின் மீது அவதூறு சேற்றை அள்ளி இறைக்கின்ற வகையினர் இவர்கள். இரண்டாவது கூட்டம் மதங்களை புறக்கணித்து ஏதோ ஒரு மனித மூளையினில் உருவான சித்தாந்தத்தை வாழ்வின் வெற்றிக்கான உத்தியாக நினைத்துக் கொள்பவர்கள். இவர்கள் தங்களுடைய சித்தாந்தம் தான் சிறந்தது என நிரூபிக்க வேண்டி மற்ற மதங்களை போலவே இஸ்லாத்திலும் பிற்போக்குத்தனம் இருக்கின்றது என்ற ரீதியில் பொய்ப்பரப்புரைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

இவர்களுடைய மதங்களும் சித்தாந்தங்களும் இவர்கள் கண்ணெதிரிலேயே பரிதாபகரமான தோல்வியை தழுவி நிற்பதை காண சகிக்காமல், அத்தகைய தோல்விக்கு காரணமாய் இருக்கின்ற இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் கறைப்படுத்தி விட வேண்டும் என இவர்களின் ஆழ்மனதில் படிந்து விட்ட இஸ்லாமிய காழ்ப்புணர்ச்சியே அவ்வப்போது இணையத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சந்தர்ப்பம் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு சகோதரி சுமஜ்லாவின் பதிவுகள் வரப்பிரசாதமாக அமைந்து விட்டன. என்னைப் பொறுத்தவரை சுமஜ்லா மிகவும் தைரியமான ஒரு மங்கை. அவர் மேல் வைக்கப்படும் அனைத்துக் கருத்துக்களுக்கும் அவர் தனி ஆளாக நின்றே பதில் கொடுக்கும் திறமை வாய்ந்தவர். என்னுடைய இந்த கட்டுரை தன்னுடைய பேசுபொருளாக முன்வைப்பது "ஹிஜாப்" என்ற பெண்களின் உடையைப் பற்றியது. ஹிஜாப் என்பது பெண்கள் தங்களுடைய முழுமுகம் மற்றும் முன்கைகள் இரண்டை தவிர மற்றதை மறைத்துக் கொள்ளும் வகையில் உடையனிதலாகும். வெறுமனே கருப்பு அங்கி மட்டும் ஹிஜாபல்ல. முகம் மற்றும் முன்கைகளை தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் உடல் அங்கங்கள் வெளியே தெரியாத வண்ணம் இறுக்கமாக இல்லாமல் எந்த உடை அணிந்தாலும் அவை ஹிஜாப் என்றே அழைக்கப்படும். இந்த ஹிஜாபை தான் ஆணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் காட்டுக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இஸ்லாம் என்பது மதமன்று. பல மதங்கள், சித்தாந்தங்கள் போன்று ஒரு சிலவற்றை சொல்லிவிட்டு பலவற்றை சொல்ல தெரியாத, அப்படியே சொல்லியிருந்தாலும் இன்றைய வாழ்வியலுக்கு ஒத்துவராத கோட்பாடுகளை கொண்டவையுமல்ல. மாறாக வாழ்வியலின் அனைத்து நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழ்வியலுக்கான வழிகாட்டியாக விளங்கும் மார்க்கமாகும். ஒரு பெண் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டுமேயானால் அவளுடைய கண்ணியம் காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் ஹிஜாப் என்னும் உடையின் மூலம் பெண்களை கண்ணியப்படுத்தி சமூகத்தில் வாழ செய்கின்றது இஸ்லாம். இல்லை நான் அரைகுறை ஆடை தான் அணிவேன் என ஒரு பெண் சொன்னால் தாரளாமாக அவற்றை அணிந்து கொள்ளலாம். ஏனெனில் இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை. "மார்க்கத்தில் நிர்பந்தம் என்பது இல்லை ...(குர்ஆன் 2:256 )".

தம்முடைய கண்ணியத்தையும் அடுத்தவர்களின் காமக் கண் கொடூர பார்வையையும் தவிர்க்க வேண்டும் என்று விரும்பும் எந்த பெண்ணாக இருப்பினும் அவர் ஹிஜாபை தெரிவு செய்து கொள்ளலாம். அதற்கு இஸ்லாமியராக தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த உடை அணிவதினால் பெண்களுக்கு கண்ணியம் ஏற்படுகின்றது என்பதை ஹிஜாபை எதிர்க்கும் மத வெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் மறுப்பார்களா? இந்தியாவின் உயர்ந்த பீடத்தினில் இருக்கின்ற இன்றைய குடியரசுத்தலைவர் அவர்களே மிக அழகாக பெரும்பாலான நேரங்களில் ஹிஜாபை பேனுபவராகவே இருக்கின்றார். இஸ்லாம் பெண்களின் உடை விடயத்தினில் ஒரு அளவை மிகத் தெளிவாக சொல்லிவிட்டது. இதற்கு மாற்றுக் கருத்து சொல்லுபவர்கள் பெண்களின் உடை விடயத்தினில் எந்த ஒரு கருத்தையும் தெளிவாக சொல்லவில்லை. உடையணிதல் தனிப்பட்ட பெண்களின் உரிமையை சார்ந்த விடயம் என்று வாதிடும் இவர்கள் திரைப்படத்தினில் நடிகைகளின் அரைகுறை ஆடைகளை ஆபாசம் அருவெறுப்பு என்றும் எழுதுகின்றனர் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம். அப்படி அரைகுறை ஆடை அணிவது அந்த நடிகையின் தனிப்பட்ட உரிமை என்ற வாதத்தை அப்பொழுது வசதியாக மறந்து விடுகின்றனர். ஏன் இந்த இரட்டை நிலை மதவெறி மற்றும் போலி முற்போக்காளர்களே?

வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வருவது கூட பெண்கள் சுதந்திரத்தின் அங்கமாகவே நினைக்கின்ற சில பெண்கள் இன்று உருவாகி விட்டனர். பெண் சுதந்திரம் என்ற அடிப்படையில் இவர்களை ஏற்றுக் கொண்டு இந்த மாதிரி பெண்களை திருமணம் செய்ய ஹிஜாபை எதிர்க்கும் மதவெறியர்களும் போலி முற்போக்குவாதிகளும் தயாரா? தவறுகள் சர்வசாதரணமாக சமூகத்தில் உலா வரும் போது அவை தவறு என்ற எண்ணமே மறைக்கப்பட்டு விடும். இதற்கு சரியான உதாரணம் புகைப்பிடித்தலை சொல்லலாம். இதே மாதிரி தான் அரைகுறை ஆபாச உடை விடயத்தையும் கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு தடையாக இருப்பது ஹிஜாபே ஆகும். எனவே தான் இதற்கு எதிராக இவ்வளவு ஆக்ரோஷமாக கிளர்த்தெழுகின்றனர். இதில் போலி முற்போக்குவாதிகள் மத வெறியர்கள் என்ற வித்தியாசமெல்லாமில்லை.

அன்பின் சகோதரி சுமஜ்லா நீங்கள் கண்ணியம் வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள். ஆகவே ஹிஜாபை பேணுகின்றீர்கள். ஆனால் வாரம் ஒரு வாலிபனுடன் வலம் வந்த அல்லது வலம் வருவதை ஆதரிக்கின்ற அல்லது தங்கள் வீட்டு பெண்களை இத்தகைய கேடு கேட்ட நிலையினில் தள்ளப் போகின்றவர்கள் "கலகல" என ஏதாவது ஒன்றை கவிதை வரியினில் எழுதியதால் மனம் தளர வேண்டாம். நடிகைகள் தங்களுடைய அரைகுறை உடையினை ஆபாசம் என்று என்றைக்குமே ஏற்றுக் கொள்வதில்லை. அதைப் போன்றே இவர்களும் என விட்டுத் தள்ளுங்கள். ஹிஜாபின் கண்ணியத்தை உங்களைப் போன்ற பெண்கள் சொல்லுவதுதான் அதற்கு இன்னும் கண்ணியத்தைக் கொடுக்கின்றது. எழுத்தாளர் சகுந்தலா நரசிம்ஹன் கூட சமீபத்தில் ஹிஜாபின் கண்ணியத்தைப் பற்றி தன்னுடைய அனுபவத்தை மிகத் தெளிவாக எழுதியிருந்தார். மறைந்த மாபெரும் எழுத்தாளர் கமலா சுரையா கூட ஹிஜாபினால் தனக்கு எவ்வளவு தூரம் பாதுகாப்பு கிடைத்தது என்பதை பல தருணங்களில் நினைவு கூர்ந்திருக்கின்றார்.

ஹிஜாபை பேணுகின்ற சுமஜ்லா போன்ற பெண்களை மதவெறிப் பிடித்தவர்கள் என பொய்ப்பரப்புரை செய்ய உண்மையில் மதவெறி பிடித்து போய் திரிகின்றவர்களும், பிற்போக்குத்தனத்திலும் ஆணடிமைத்தனத்திலும் ஊறியவர்கள் இஸ்லாமியப் பெண்கள் என நிலைநாட்ட போலி முற்போக்கு கும்பல்களும் (ம.க.இ.க உட்பட) முயலுகின்றன. அதன் வெளிப்பாடு தான் கவிதை கட்டுரை பின்னூட்டமென சமீப காலத்தில் இவர்கள் எடுக்கும் அவதாரங்கள். இறுதியாக, நான் சமீபத்தில் படித்த ஒரு கவிதையை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகின்றேன். அந்த கவிதை எழுதியவருக்கு என்னுடைய நன்றிகள்.

பொன்னையும் பொருளையும்
பெட்டியில் பத்திரமாய்
பூட்டி வைத்து பாதுகாக்கும்
தன் எஜமானனிடம்
வேலியோரத்தில் சுதந்திரமாய்
விட்டெறியப்பட்ட
விளக்குமாறு ஒன்று
வீறுகொண்டு தன் கடுங்குரலில் அகவியதாம்,
"என்னைப்போல் அவற்றுக்கும் கொடு-விடுதலை"-என..!

பெட்டிக்குள்ளே
உள்ள'நற்குடிகளுக்கு'
தெரியாதா
'எது கண்ணியமான பாதுகாப்பு'-என்று..!

பாவம்...பரிதாபப்படுவோம்...
'விளக்குமார்கள் என்றாவதொருநாள்
விளங்குவார்கள் உண்மையை'
என நம்பிவைப்போம்
இப்போதைக்கு...!


பி.ஏ.ஷேக் தாவூத்

கருத்துகள் இல்லை: