வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டு மடிந்த மருதநாயகத்தின் வாரிசான நான் தியாகி பென்ஷனுக்காக 20 வருஷமா மனு போடுகிறேன். இன்னும் பென்ஷன் கிடைத்தபாடில்லை. இனி அலைவதற்கு உடம்பில் திராணி இல்லை. ஆகவே, நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிட்டோம்!' - மதுரையை ஆண்ட கான்சாஹிபு என்ற மருதநாயகத்தின் வாரிசுகளில் ஒருவரான பாபா சாஹிபுவிடமிருந்துதான் நமக்கு இப்படியரு கண்ணீர்க் கடிதம்!
மருதநாயகம் என்கிற வித்தியாசமான மனிதரின் வீர வரலாற்றை நடிகர் கமல்ஹாசன் படமாக எடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளை நாடறியும். ஆனால், அந்த வீரருடைய வாரிசுகளின் பஞ்சடைந்த பரிதாப வாழ்க்கை யாருக்குத் தெரியும்?
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவிலில் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வசிக்கும் பாபா சாஹிபுவை சந்திக்கச் சென்றோம். மண்ணால் கட்டப்பட்ட அந்த வீட்டுக்குக் கொஞ்சம் ஓலையும் கொஞ்சம் தகரமும் சேர்ந்து மேல் கூரையாக இருந்தது. வீட்டுக்குக் கதவுகள் இல்லை; கரன்ட் வசதியும்இல்லை.
'ஜூ.வி-யிலிருந்து வந்திருக்கிறோம்...'' என்றதும் தட்டுத்தடுமாறி எழுந்து வணக்கம் சொன்ன பாபா சாஹிபு, தனது மனக்குறையை மளமளவெனக் கொட்ட ஆரம்பித்தார். 'மொகலாயர்களின் ஆட்சி தென்னிந்தியாவில் ஏற்பட்டபோது, வரி வசூலிப்பதற்காக மதுரைக்கு அனுப்பப்பட்டவர் கான்சாஹிபு துரை. பிற்பாடு, 1759 முதல் 1764 வரை மதுரையை ஆண்டதால் அவருக்கு மதுரைநாயகம் என்ற பட்டப் பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மருதநாயகம் என்றாகிவிட்டது. வரி வசூலில் ஒரு பகுதியை ஆங்கிலேயர்களுக்குக் கப்பமாகச் செலுத்தும் முறை அப்போது இருந்தது. கான்சாஹிப் துரை அதை எதிர்த்து வெள்ளையர்களோடு போரிட்டார். கடைசியில், அவர்களாலேயே தூக்கிலிடப்பட்டார்.
தங்களை எதிர்த்த கான்சாஹிபு போன்றவர்களைக் கொன்று சொத்துகள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டது வெள்ளையர் அரசாங்கம். கான்சாஹிப் துரையின் வாரிசுகளில் எஞ்சியிருப்பது நான் மட்டுமே. எனக்கு 71 வயதாகிறது. என் மனைவி மஹபூர் பியாரி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறாள். நசீராபேகம், சுபேதாரனி என்ற மகள்களும், சிக்கந்தர் பாட்ஷா, ஹீரால்சேட் பாட்ஷா, திவான் பாட்ஷா ஆகிய மகன்களும் இருக்கிறார்கள். வறுமை காரணமாக இவர்களில் யாருக்குமே என்னால் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. 42 வயதாகும் என் மூத்த மகள் நசீராபேகம் இப்போது மனநோயாளியாகி விட்டாள். மூத்தவன் சிக்கந்தர் பாட்ஷா வீட்டை விட்டே ஓடிவிட்டான். நுட (எலும்பு) வைத்தியம் பார்த்துப் பிழைப்பு நடத்திய எனக்கும் இப்போது வலது கை விளங்காமல் போய்விட்டது. ஏதோ என் பிள்ளைகளின் சொற்ப சம்பாத்தியத்தில் என் வாழ்க்கை ஓடுகிறது...' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார் பாபா சாஹிபு.
அவர் மகன் திவான் பாட்ஷா நம்மிடம், 'யாரையும் குறைத்து மதிப்பிட்டு நான் இதைச் சொல்லவில்லை. ஒரு ஒப்பீட்டுக்காகச் சொல்கிறேன். கட்டபொம்மன், மருது சகோதரர்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆண்டு வெள்ளையரை எதிர்த்தவர்கள். கான்சாஹிப் துரையோ மதுரை மண்டலத்தையும் நெல்லை மண்டலத்தையும் சேர்த்து ஆண்டவர். அப்படிப்பட்டவரின் வாரிசை இந்த அரசு ஏன் இப்படி கேவலப்படுத்துகிறது என்றே புரியவில்லை. பென்ஷனுக்காக 1988-ம் ஆண்டிலிருந்து இது வரை கலெக்டர், முதல்வர், ஜனாதிபதி என அதிகாரம் படைத்த அத்தனை பேருக்கும் என் தந்தை மனுப் போட்டு ஓய்ந்து போய்விட்டார். அவற்றுக்கு வந்த பதில்கள் மட்டுமே ஒரு தகரப் பெட்டி நிறைய இருக்கிறது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள என் அக்கா சுபேதாரனி ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 வருடமாக தினக்கூலியாக இருக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகியின் வாரிசு என்ற அடிப்படையில் அவரை நிரந்தரம் செய்யக்கோரி ரெண்டு வருஷமா போராடுறேன். இதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய்த்தான் கடைசியாக ஒரு கடிதத்தை ஜூ.வி-க்கு எழுதச் சொன்னார் அப்பா...'' என்றவர், ''இனிமேலும் எங்கள் கோரிக்கைகள் கவனிக்கப்படாவிட்டால், நாங்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வோம். அதற்கு முன் தமிழக முதல்வரும், விருதுநகர் கலெக்டரும் எங்கள் பக்கம் பார்வையை திருப்புவார்களா?'' என்றபோது பாட்ஷாவின் குரல் உடைந்து போனது!
பென்ஷன் வழங்கும் பணிக்கு பொறுப்பான விருதுநகர் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் வசந்தாவிடம் இது பற்றிக் கேட்டோம். சம்பந்தப்பட்ட செக்ஷன் கிளார்க்கை அழைத்து விவரங்களைத் தெரிந்துகொண்டு நம்மிடம் பேசியவர், 'நேரடியான தியாகிகள் பென்ஷன் என்றால், உரிய விசாரணைகள் மூலம் மாவட்ட நிர்வாகமே வழங்கலாம். சுதந்திரப் போராட்ட காலத்துக்கு முந்தைய வீரர்களின் வாரிசுகளுக்கு என்றால், தமிழக அரசு ஆணை பிறப்பித்தால்தான் ஓய்வூதியம் வழங்க முடியும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மருது பாண்டியர்களின் வாரிசுகளுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உரிய கல்வித் தகுதியும், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவும் இருப்பதாகச் சொல்வதால் சுபேதாரனிக்கு அரசு வேலை வழங்க உடனடியாகப் பரிந்துரை செய்யத் தயாராக இருக்கிறோம்...'' என்றார்.
நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட பிறகும், இது போன்ற தியாகிகளின் வாரிசுகள் பென்ஷனுக்காக அலைக்கழிக்கப்படுவது யாருக்கு அசிங்கம்?
- கே.கே.மகேஷ்
படங்கள்: கே.குணசீலன்
நன்றி ஜூவி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக