புதன், 27 ஜனவரி, 2010

மக்கள் வெள்ளத்தில் திணறியது திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கு 2016!


மக்கள் வெள்ளத்தில் திணறியது திருவாரூர்: மனிதநேய மக்கள் கட்சியின் இலக்கு 2016!
திருவாரூர் மாநாட்டில் பிரகடனம்!
இடியும், மின்னலும் இல்லாமல் மழை இல்லை. உழைப்பும், போராட்டமும் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற எழுச்சி முழக்கத்தோடு உற்சாகமாய் நடந்து முடிந்தது, திருவாரூர் மாவட்ட மாநாடு.

கடந்த ஆண்டு பிப் -7 அன்று மனித நேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு தாம்பரத்தில் லட்சக்கணக்கான மக்களோடு நடந்தேறியது.

ஒரே வருடத்தில், முதல் மாவட்ட மாநாட்டினை திருவாரூரில் நடத்தி அம்மாவட்ட மக்கள் மற்றொரு எழுச்சியை உருவாக்கியிருக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக மாவட்ட மெங்கும் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களும், பிரம்மாண்ட டிஜிட்டல் தட்டிகளும் மாநாட்டின் பிரச்சாரங்களாய் பரபரப்பூட்டிக் கொண்டிருந்தன.

முஸ்லிம்களை மட்டுமே குறி வைக்காமல், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் செய் யப்பட்டிருந்த பிரச்சாரங்கள் தான் மமகவின் அரசியல் முதிர்ச்சியை வெளி காட்டுவதாக அமைந்தது.

அதன் பலனை மாநாட்டில் திரண் டிருந்த கூட்டத்தில் காண முடிந்தது. பல்வேறு சமுதாய மக்களும் தங்களது நிகழ்ச்சியாக கருதி மாநாட்டில் பங்கேற்றது தான் மமகவின் ஜனரஞ்சக வளர்ச்சியை அடையாளம் காட்டுவதாக இருந்தது.

மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே திருவாரூர் நகரமெங்கும் மமக கொடிகள் கம்பீரமாய் பறக்க விடப்பட்டிருந்தன. இளைஞர் அணியின் சார்பில் செயல்பட்ட சகோதரர்கள் போர்கால அடிப்படையில் வேலைகளை செய்து கொண்டிருந்தார்கள்.

ஜனவரி 24 அன்று பழைய தஞ்சைப் பகுதிக்கே உரிய ஒலைகளால் வேயப்பட்ட நுழைவாயில்கள் ஆங் காங்கே மாநாட்டுக் குழுவின் சார்பில் பிரம்மாண்டமாய் எழுப்பப்பட்டிருந்தது.

மாலை 5 மணியிலிருந்தே மக்கள் கூட்டம் வரத்தொடங்கியது. போலிஸார் சில இடங்களில் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதாக செய்தி வந்தது. உயர்அதிகாரிகளிடம் பேசிய பிறகு, அவை தடங்களின்றி நகருக்குள் நுழைந்தன.
நாலாயிரத்திற்கும் மேற்பட்ட கொடி களும், ஆயிரக்கணக்கான ட்யூப் லைட்களும், கம்பங்களில் கட்டப் பட்டிருந்த விளம்பர பலகைகளும் மாநாட்டுக்கு வருகை தந்த மக்களை உற்சாகப்படுத்த, மாநாடு களை கட்ட தொடங்கியது.

தேரோடும் பிரம்மாண்டமானஅந்த அகல வீதி, சுமார் 1/2 கிலோ மீட்டர் நீளமிருக்கும் பல்லாயிரக் கணக்கில் நாற்காலிகளை வரிசைப்படுத்திக் கொண்டே வந்த இளைஞர் அணி யினர் ஒரு கட்டத்தில் களைப்பு காரணமாக சோர்ந்து விட்டனர். இந்த பெரிய வீதியை யார் மாநாட்டிற்கு தேர்ந்தெடுத்தது? என்று சலித்துக் கொண்டனர். ஆனால், அலை அலையாய் வந்த பல்லா யிரக்கணக்கான மக்களால் அந்த நாற்காலிகள் நிரம்பியதும், இளைஞர் அணியினரின் முகத்தில் ஏற்பட்ட உற்சாகத்தை நம்மால் உணர முடிந்தது.

ஒருபுறம் புத்தக கடைகளில் மக்கள் கூட்டம், மறுபுறம் சிடி கடைகளில் கூட்டம், இதற்கிடையே பி.டி கத்தரிக்காய்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் வேறு நடத்தப் பட்டுக்கொண்டிருந்தது.

அந்த பரபரப்புகளுடன் 5.30 மணிக்கு கொள்கை விளக்கப் பாடல்களுடன் மாநாட்டின் நிகழ்ச்சிகள் தொடங்கின.

அப்போது மாநாட்டு வளாகம் நிரம்பத் தொடங்கியது.

6 மணி அளவில் மஹ்ரிப் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. பக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண மண்டபத்தில் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த நேரத்தில் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த சகோரத சமுதாய மக்கள் அமைதிகாத்து, அவரவர் இடங்களில் அமர்ந்திருந்தது அவர்களின் புரிந்துணர்வை வெளிக்காட்டுவதாக இருந்தது.

பிறகு நிகழ்ச்சிகள் மீண்டும் உற்சாகத்தோடு தொடங்கின. இரவு சூழ, பனி விழ அந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான ஹாலோஜன் விளக்குகளின் ஒளியில் மாநாட்டு பகுதிகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன.

மாநாட்டின் இடதுபுறம் எதிர் பார்ப்புகளை தாண்டி பெண்கள் கூட்டம் நிறைந்ததும், மாநாட்டு மேடையில் அமர்ந்திருந்த தலைவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

பெண்கள் பகுதியில் அவர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு, இளைஞர் அணியின் சார்பில் குழுக்கள் அவர்களுக்காக நிறுத்தப்பட்டிருந்தன.

இவ்வளவு உற்சாகத்திற்கும் மத்தியில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தது.

நிகழ்ச்சிகளுக்கு இடையில் மமகவின் 2010 ஆம் ஆண்டுக்கான மாதந்திர காலண்டரை பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது வெளியிட மமகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் மௌலா. நாஸர் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து மீனவர்களின் சார்பாக நாகை சந்திசேகரன், விவசாயிகளின் சார்பாக தாளாண்மை உழவர் இயக்க தலைவர் கோ.திருநாவுக்கரசு ஆகியோர் மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.

இலங்கை தமிழர்களின் விவகாரம் குறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு செயலாளர் புதுவை. கோ.சுகுமாறன் அவர்கள் தெளிவாக விளக்கிப் பேசினார்.

இடையிடையே தீர்மானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்க, நிகழ்ச்சிகள் உற்சாக மாய் போய்க் கொண்டிருந்தது.

பேரா. ஜெ. ஹாஜாகனி, தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ஜின்னா, உயர்நிலைக்குழு உறுப்பினர் ஜே.எஸ்.ரிபாயி, அமைப்புச் செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபிதீன், துணைப் பொதுச் செயலாளர் எம்.தமிமூன் அன்சாரி, பொருளாளர் ஹாரூன் ரஷீது, பொதுச்செயலாளர் பி.அப்துல் சமது, ஒருங்கிணைப்பாளர் பேரா.ஜவாஹிருல்லாஹ் ஆகியோர் அடுத்தடுத்து உரையாற்ற இரவு 12 மணியை நெருங்கும் போது மாநாட்டு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

ஒரு மாவட்ட மாநாட்டை மாபெரும் எழுச்சியோடு நடத்தி முடித்த திருப்தியில் புறப்பட்டது அந்த பெரும்படை!

தேர்தல் தோல்விகளுக்கு பின் னாலும், பன்மடங்கு எழுச்சியோடு மமக செயல்படுகிறது என்பதை அதிகார வர்க்கம் உணர்ந்தது.

முதல்வர். கலைஞர் கருணாநிதியின் அரசியல் பிறப்பிடத்தில், தனது பலத்தை வெளிக்காட்டிய மமக வின் துணிச்சல் புதிய அரசியல் பாதைகளை திறக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள் இல்லை: