ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பிரான்ஸில் இறையில்லம் கட்டுமானம் இடைநிறுத்தம்

பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரமான மார்சில்லியில் ஜும்ஆ மஸ்ஜிதொன்றை நிறுவுவதற்கான திட்டங்கள், அந்நாட்டிலும் ஐரோப்பா முழுவதிலும் ஏற்பட்டுள்ள முஸ்லிம் விரோதப் போக்கின் விளைவாகவும் அதற்கெதிரான அச்சுறுத்தல்கள் காரணமாகவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெயர் குறிப்பிடாத பிரான்சியர் ஒருவர், "நான் அம்மஸ்ஜிதை குண்டு வைத்துத் தகர்க்கப் போகின்றேன்" என்று நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்."இங்கே அவர்கள் (முஸ்லிம்கள்) ஏராளமாக உள்ளனர். ஏராளமான மஸ்ஜிதுகளும் உள்ளன. இந்நிலையில், மீண்டும் ஒரு மஸ்ஜித் கட்டப்படுவது அவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். அவர்களது எண்ணிக்கை அதிகரிப்பது பல பிரச்சினைகளை எழுப்பும்" எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

33 மில்லியன் டாலர் செலவில், பிரான்சின் துறைமுக நகரில் நிர்மாணிக்கப்படவிருந்த இம்மமஸ்ஜித் கட்டுமாணப் பணிகள், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது, பிரான்சின் இனச்சுத்திகரிப்புக்கு நல்லதொரு அடையாளம் என, மார்சில்லி மஸ்ஜித் சங்கத் தலைவர் நூர்தீன் ஷெய்க் கூறுகின்றார்.

புதிய வணக்கஸ்தலத்தில், மினாரா ஒன்றைக் கட்டுவதெனவும், தொழுகைக்கான குறித்த நேரத்தில் கருஞ்சிவப்பு நிற விளக்கொன்றை ஒளிர விடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நகரின் மொத்த மக்கள் தொகையில் நான்கிலொரு பகுதியினராக 1.5 மில்லியன் அளவிலுள்ள முஸ்லிம்கள் தமது வணக்கஸ்தலத்திற்காக ஒரு மஸ்ஜிதை நிறுவும் சமய உரிமையை இதன் மூலம் இழந்துள்ளனர்.

ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் அண்மைக்கால முயற்சிகளும் செயற்பாடுகளும் கசப்பான எதிர்காலத்தை உலகுக்கிற்க்கு காட்டி வருகின்றன.

உலகிலுள்ள நடுநிலை வகிக்கும் எல்லா சமய அறிஞர்களும் இத்தகைய செயற்பாடுகளைக் கண்டிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான உரிமை உள்ளதெனவும், அதனைத் தடுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இஸ்லாம் தொடர்பாக ஐரோப்பாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்மைக்குப் புறம்பான பிரசாரங்கள், இத்தகைய குழப்பங்களுக்கும் வன்முறைகளுக்கும் காரணமாக அமைகின்றன. எனவே, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரசாரம் செய்ய வேண்டியதும் அதன் மீதுள்ள குற்றச்சாட்டுகளைக் களைவதும் முஸ்லிம் அறிஞர்கள் அனைவர் மீதுமுள்ள முக்கிய கடமையாகும்.

ஐரோப்பாவில், பொருளாதாரக் குற்றங்கள், உலகமயமாக்கலின் அச்சம், குடியேற்றம் மற்றும் பிறப்பு வீதத்தின் அதிகரிப்பு என்பவை தோற்றுவிக்கும் கவலையானது, இஸ்லாத்தைப் பற்றிய தவறான அபிப்பிராயத்தை எழுப்பி, 'இஸ்லாம் எல்லோரும் அச்சமடையக் கூடிய ஒரு மூடிய பெட்டி' எனும் நிலைக்குக் கொண்டு வந்துள்ளது என முஸ்லிம் அறிஞர் ஒருவர் குறிப்பிடுகின்றார்.
source:iqna

கருத்துகள் இல்லை: