பேஸ் புக் இணையத்தளம் மூலம் நபிகளாரை அவமதிக்கும் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பேஸ் புக்கிற்கு மாற்றீடாக பாகிஸ்தான் இளைஞர்கள் `மில்லத் பேஸ் புக்' எனும் புதிய சமூக வலைப்பின்னல் இணையத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
உலகெங்கும் வாழும் சுமார் 1.6 பில்லியன் முஸ்லிம்களுக்குமான ஓர் உறவுப் பாலமாகவும் முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்கும் தளமாகவும் இந்த இணைய வழி சமூக வலைப்பின்னல் திகழும் என மில்லத் பேஸ் புக்கின் தயாரிப்பாளர்களான பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் ஸஹீர் தலைமையிலான கணினி மென்பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் மட்டும் 2.5 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேஸ் புக்கிற்கு அந்நாட்டில் தடைவிதிக்கப்பட்டதையடுத்தே இளைஞர்கள் அதிரடியாக இந்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி சகல சமூகங்களின் உணர்வுகளையும் மதித்து நடக்கும் அனைவரும் மில்லத் பேஸ் புக்கில் இணைந்து கொள்ள முடியும் எனவும் இந்த இணையதளத்தின் முகப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தளம் அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களுக்குள் சுமார் 20,000 இற்கும் அதிகமானோர் இதில் அங்கத்தவர்களாக இணைந்துள்ளனர்.
பேஸ் புக்கிற்கு நிகரான சகல வசதிகளும் இத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நாம் அதிகம் நேசிக்கும் நபிகளாரை அவமதிப்பவர்களுக்கு எதிராகப் போட்டி போடுவதும் அவர்களை தோற்கடிப்பதும் நமது கடமை என உஸ்மான் ஸஹீர் ஏ.எப்.பி.க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் மட்டுமின்றி பிரிட்டன்,பல்கேரியா, கனடா, சீனா ரஷ்யா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் மில்லத் பேஸ் புக்கில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக