செவ்வாய், 29 ஜூன், 2010

கஷ்மீர்:மத்திய போலீஸ் சுட்டதில் குண்டு பாய்ந்து 2 இளைஞர்கள் பலி

கஷ்மீர் மாநிலம் சோபோர் நகரில் போலீஸாரை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சோபோர் நகரில் ஊரடங்கு உத்தரவு நீடித்தப்படி உள்ளது. இதனால் ஆத்திரத்தில் உள்ள சோபோர் நகர இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு கூறி முக்கிய இடங்களில் திரள்கிறார்கள். இதனால் அவர்களுக்கும் மத்திய போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கமாகி விட்டது.

நேற்று மாலையும் சோபோர் நகர இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் ஒரு இடத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் கலைந்து போகுமாறு எச்சரித்தனர். இதை ஏற்க மறுத்த இளைஞர்களுக்கும் மத்திய போலீஸ் படையினருக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மத்திய போலீஸ் படையினர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். இதையடுத்து வன்முறை வெடித்தது.

இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மத்திய போலீஸ் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் பிலால் அகமது என்ற 21 வயது இளைஞர் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 6 இளைஞர்கள் குண்டு காயம் அடைந்தனர். அதில் ஒரு இளைஞர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 வாலிபர்கள் இறந்த தகவல் சோபோர் நகரம் முழுக்க காட்டுத்தீ போல பரவியது. மக்கள் கோபத்தில் தெருக்களில் திரண்டு போலீசாரை கண்டித்து கோஷமிட்டனர். சில இடங்களில் மத்திய அரசையும், கஷ்மீர் அரசையும் எதிர்த்து போஷமிட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையும் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வாலிபர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த மாதத்தில் மட்டும் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது சோபோர் நகர மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சோபோர் நகர கலவரம்- துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்கதையாகி வருவது கஷ்மீர் மாநில அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. மாநில முதல்-மந்திரி உமர் அப்துல்லா, துப்பாக்கி சூடு குறித்து உயர் மட்டக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

கஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: