திங்கள், 28 ஜூன், 2010

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு பின்னணியில் ஹிந்து தீவிரவாதிகள்

புதுடெல்லி:2007-ல் நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பை விசாரிக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த ஆதாரங்கள் மூலம், ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்ட ஹிந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்தின் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. பிப்ரவரி 18, 2007 அன்று ஹரியானா மாநிலம் பானிபட் அருகே நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் 68 பயணிகள், பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் நாடு திரும்பி கொண்டிருக்கையில், கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு செயல்படுத்தப்பட்ட முறை, வெடிபொருட்களின் இயல்பு ஆகியவை, 2007 ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் மற்றும் மாலேகோன் குண்டுவெடிப்புகளுடன் ஒத்திருப்பதாகவும், அதுவும் அபினவ் பாரத், சன்ஸ்தான் அமைப்பாலேயே அரங்கேற்றப்பட்டது என்று சந்தேகிக்கப்படுவதாக உயர்மட்ட உள்துறை வட்டார செய்திகள் கூறுகிறது.

இந்த வழக்கில் ஆரம்பத்தில் குருட்டுத்தனமாக விசாரணை சென்றபோதிலும், குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட சூட்கேசின் மூடியை கண்டுபிடித்த பிறகு, விசாரணையாளர்கள் மூன்று குண்டுவெடிப்புகளிலும் பயன்படுத்தப்பட்ட வயர், மருந்து பொருட்கள், வெடிக்கவைக்கும் கருவி மற்றும் பேட்டரி ஆகியவைகள் ஒத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சிபிஐ மக்கா மஸ்ஜித் வழக்கில் துப்பு தருவோருக்கு 10 லட்சம் சன்மானம் என்று துரிதப்படுத்தியுள்ளது. மாலேகோன், மக்கா மஸ்ஜித், கோவா, மோடஸா மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய குண்டுவெடிப்புகளில் ஹிந்து தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதை வட்டார செய்திகள் குறிப்பிடுகின்றன.

எல்லா வழக்குகளையும் ஒரே ஏஜென்சியிடமே ஒப்படைக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றது.

கருத்துகள் இல்லை: