சனி, 12 ஜூன், 2010

முஸ்லிம்கள் முன்னேற்றம் குறித்த பத்திரிகை விளம்பரம்: மோடியின் மோசடி அம்பலம்

அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் வளர்ச்சியடைந்துள்ளார்கள், நிம்மதியாக வாழ்கிறார்கள் என்று குஜராத் அரசு பத்திரிகைகளுக்கு அளித்த விளம்பரத்தில் உள்ள புகைப்படம் உ.பி.மாநிலம் ஆஸம்கரில் எடுத்த புகைப்படமாகும்.

பாட்னாவில் நேற்று முன்தினம் வெளியான பத்திரிகைகளில் பல வர்ணங்களிலும் நரேந்திரமோடியின் ஆட்சியில் முஸ்லிம்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேற்றமடைந்துள்ளார்கள் என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் பா.ஜ.கவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வரும் நரேந்திரமோடியின் வருகையை முன்னிட்டுதான் இவ்விளம்பரம் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.

குஜராத் அரசால் அளிக்கப்பட்ட இவ்விளம்பரத்தில் 3 புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஒன்று தொப்பி அணிந்த மோடியிடம் கைக்குலுக்க முஸ்லிம்கள் முண்டியடிக்கி்றார்கள். இரண்டாவது படத்தில் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் கம்ப்யூட்டர் பயிலும் காட்சி. மூன்றாவது புகைப்படத்தில் முஸ்லிம் மாணவர்கள் மதரஸாவில் கல்வி கற்கும் காட்சி.

இரண்டாவது புகைப்படத்தில் முஸ்லிம் மாணவிகள் கம்ப்யூட்டர் கல்வி கற்கும் புகைப்படம் உ.பி மாநிலம் ஆஸம்கரிலிருந்து எடுத்த புகைப்படமாகும். இப்புகைப்படம் 2008 ஆம் ஆண்டு twocircles.net என்ற இணையதள பத்திரிகையில் வெளியானது.

இதைத்தான் மோசடிச் செய்து குஜராத்தில் முஸ்லிம் மாணவிகள் கல்வி கற்பதாக மோடிக்கும்பல் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளது.

தற்பொழுது இந்த மோசடி வெளியாகியுள்ளது. மோடி அரசு பத்திரிகைகளில் விளம்பரம் செய்ததில் பாரபட்சம் காட்டியுள்ளது. பாட்னாவில் ஆங்கில, ஹிந்தி, உருது பத்திரிகைகளில் விளம்பரச் செய்தி வெளியாகியிருந்தது.

ஆங்கில, ஹிந்தி பத்திரிகைகளில் அந்த மொழிகளிலேயே விளம்பரம் வெளியாகியிருந்தது. ஆனால் உருது பத்திரிகைகளுக்கு அளித்த விளம்பரம் ஹிந்தியிலாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: