சனி, 20 ஜூன், 2009

குஜராத் கலவரம்: மோடிக்கு வந்த, பேசிய போன் கால்கள் விவரம் ஒப்படைப்பு!





அகமதாபாத்: குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வரலாறு காணாத கலவரத்தின்போது, முதல்வர் நரேந்திர மோடிக்கு வந்த, அவர் பிறருக்கு பேசிய தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரங்கள் சிறப்பு புலனாய்வுப் படையிடம் (எஸ்.ஐ.டி.) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதை ஜன் சங்கர்ஷ் மன்ச் என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம், எஸ்ஐடியிடம் ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் கலவரம் உச்சகட்டத்தில் இருந்தபோது நரேந்திர மோடிக்கு, முன்னாள் அமைச்சர்கள் மாயா பென் கோத்னானி, கோர்தன் ஜடாபியா, வி.எச்.பி. தலைவர் டாக்டர் ஜெய்தீப் படேல் மற்றும் பலர் போன் செய்து விரிவாக பேசியுள்ளனர் என்று அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பலமுறை அவர்கள் மோடியுடன் போனில் பேசியுள்ளதாகவும் அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவர்களில் மாயா பென் கோத்னானி மற்றும் ஜெய்தீப் படேல் ஆகிய இருவரும் நரோடி படியா மற்றும் நரோடா கிராமத்தில் நடந்த ஒட்டுமொத்த படுகொலைகளைத் தூண்டி விட்டும், நேரில் சென்று கலவரக்காரர்களை ஊக்கப்படுத்தியதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்கள் ஆவர்.

பெண் அமைச்சரான மாயா பென் கோத்னானி, இந்த வழக்கில் ஜாமீனில் இருந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து உடனடியாக அவரை டிஸ்மிஸ் செய்ய மோடிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர் டிஸ்மிஸ் செய்யவில்லை.

பின்னர் மாயாவே தனது பதவியை ராஜினாமா செய்து சரணடைந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது அவரும் படேலும் மீண்டும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர்.

ஜன் சங்கர்ஷ் மன்ச் அமைப்பின் வழக்கறிஞர் முகுல் சின்ஹா கூறுகையில், எங்களது ஆய்வுப்படி 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை மோடிக்கு வந்த, அவர் பேசிய தொலைபேசி உரையாடல்கள் குறித்த விவரத்தை கொடுபத்துள்ளோம்.

இதில் ஜெய்தீப் படேல் முதல்வர் அலுவலகத்துடன் 9 முறை பேசியுள்ளார். மாயா பென் கோத்னானி 4 முறையும், ஜடாபியா 13 முறையும், அகமதாபாத் கூடுதல் கமிஷனர் நான்கு முறையும், துணை ஆணையர் சவானி 2 முறையும் பேசியுள்ளனர்.

இந்த தொலைபேசித் தொடர்புகள் குறித்த விவரங்களை ஐபிஎஸ் அதிகாரி ராகுல் சர்மா கொடுத்த விவரங்களின் அடிப்படையில் நாங்கள் தொகுத்துள்ளோம் என்றார்.

குஜராத் கலவரம் தொடர்பாக நரேந்திர மோடியின் தொடர்புகள் குறித்து எஸ்ஐடி விசாரிக்க வேண்டும் என சமீபத்தில்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது என்பது நினைவிருக்கலாம். இந்த பின்னணியில் அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் குறித்த விவரத்தை ஜன் சங்கர்ஷ் மன்ச் எஸ்ஐடியிடம் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: