புதன், 24 ஜூன், 2009

முஸ்லிம்களின் ஆதரவின்றி மலராது தாமரை!

'இரும்பு மனிதர்' இவர்தான் இந்தியாவின் அடுத்தபிரதமர் என்று அத்வானியை முன்னிலைப்படுத்தி, அமர்க்களமாக தேர்தலை சந்தித்து இறுதியில் அடங்கிபோய் மூலையில் எதிர்கட்சியாய் அமர்ந்து விட்ட பா.ஜ.க. தேர்தல் முடிவு பற்றி பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்த நேரத்தில், தேர்தலில் பா.ஜ .க வின் தோல்விக்கு தலைவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்ற குரலுடன் ராஜினாமா செய்தார் மூத்ததலைவர் யஸ்வந்த் சின்கா.அவரை தொடர்ந்து மேலும் சில தலைவர்கள் ராஜினாமா செய்ய வேறு வழியின்றி, தேர்தல் தோல்வி பற்றி ஆராய இரு நாட்கள் தேசிய செயற்குழுவை கூட்டியது பா.ஜ.க தலைமை .

பலத்த எதிர்பார்ப்புடன் கூடிய செயற்குழுவில் கட்சியின் தோல்விக்கு பிரதானமான காரணம் முஸ்லிம்களின் ஆதரவின்மைதான் என்ற கருத்து பரவலாக எழுப்பப்பட்டுள்ளது. ஆச்சர்யப்படும் வகையில், காவியில் கரைந்து விட்ட முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் ஷாநவாஸ் ஹுசைன் ஆகியோர்தேர்தல் நேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக 'கசாப்பு கடைக்காரன்' ரேஞ்சுக்கு பேசிய வருணின் பேச்சை சுட்டிக்காட்டி, வருணின் இப்பேச்சு முஸ்லிம்களின் வாக்கு வங்கிமுழுவதுமாக காங்கிரஸ் பக்கம் திருப்பிவிட்டது என்று கூறியுள்ளனர். அப்போது வருன் பேசியது சரிதான் என்று எந்த தலைவரும் வக்காலத்து வாங்க தயாரில்லை வருணின் தாயார் மேனகாவை தவிர. தன் பிள்ளையின் மானம் காக்க சீறி எழுந்த மேனகா காந்தி, முஸ்லிம்கள் எப்போதும் பி.ஜே.பியின் வாங்கு வங்கியாக இருந்ததில்லை எனவே உ.பி.யில் கட்சியின் தோல்விக்கு வருனின் பேச்சு காரணமல்ல, பிரச்சார வியூகம் சரியில்லாததுதான் காரணம் என்று கூறி தன் மகனை காப்பாற்றியுள்ளார். தன் மீதான திடீர் தாக்குதலையும் , தனக்கு ஆதரவான குரல் இல்லாத நிலையையும் கண்ட வருன் செயற்குழுவின் இரண்டாம் நாள் 'ஆப்சென்ட்' ஆகிவிட்டார்.

மேலும், முஸ்லிம் தலைவர்கள் மட்டுமன்றி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், பீகார் துணை முதல்வர் சுசீல்குமார் மோடி, மகாராஸ்டிரா பி.ஜே.பி. தலைவர் கோபிநாத் முண்டே ஆகியோர், முஸ்லிம்கள் பா.ஜ.கவுக்கு வாக்களிப்பதில்லை எனவே அவர்களின் ஆதரவு நமக்கு தேவையில்லை அவர்களுக்கு எதிராக பேசலாம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கலாம் என்றெல்லாம் செயல்படாமல் முஸ்லிம்களையும் அரவணைத்து அவர்களிடத்திலும் கட்சிக்கு ஆதரவை பெருக்கவேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளனர்.

ஆக தேர்தல் தோல்வி மூலம் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு விஷயத்தில் பா.ஜ.க பாடம் படித்துள்ளதைத்தான் செயற்குழு உணர்த்துகிறது. வருங்காலங்களில் முஸ்லிம்களின் ஆதரவை பெறுவது பா.ஜ.க.வின் நோக்கமாக இருக்கலாம். ஆனால், பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைப்பது, குஜராத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்துத்துவாக்களால் கருவறுக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு உரிய நியாயம் கிடைக்க செய்வது, இனிவரும் காலங்களில் இந்துத்துவா கொள்கையை விட்டு விட்டு வெகு ஜன இயக்கமாக நடந்து கொள்வது இவைதான் பா.ஜ.க. எதிர்பார்க்கும் ஆதரவை முஸ்லிம்களிடம் இருந்து பெற்றுத்தரும். இல்லையேல், முஸ்லிம்களுக்கும்- பா.ஜ.க.விற்கும் உள்ள உறவு 'தாமரை இலை தண்ணீர்' ஆகத்தான் இருக்கும். அத்வானியின் பிரதமர் கனவு கனவாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை: