செவ்வாய், 23 ஜூன், 2009

தாழ்வாக பறக்கும் விமானங்களால் குதுப் மினாருக்கு ஆபத்து


டெல்லி: இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான குதுப் மினாருக்கு டெல்லி விமான நிலையத்தில் இருந்து தாழ்வாக பறந்து செல்லும் விமானங்களால் ஆபத்து ஏற்படலாம் என தொல்பொருள் ஆராய்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

பல நூற்றாண்டுகளை கடந்து டெல்லியி்ன் பெருமையை பறைசாற்றும் விதமாக கம்பீரமாக நிற்கும் குதுப்மினாரின் வரலாறு கிபி 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. குப்துதீன் அய்பெக் என்ற முகலாய மன்னரால் கிபி 1173ல் இதுகட்டப்பட்டது.

முழுவதும் செங்கற்களால் ஆன இந்த கட்டிடம் சுமார் 72.5 மீட்டர் உயரம் கொண்டது. டெல்லியின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக திகழ்கிறது.

இந்த ஆண்டு துவக்கத்தில் பழம்பெருமை வாய்ந்த குதுப் மினார் கட்டிடம் நீர் கசிவு காரணமாக தென்மேற்காக சுமார் 25 அங்குலம் சாய்த்திருப்பது நகண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுறுசுறுப்பாக செயல்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அப்பகுதி முழுவதையும் சிமெண்ட்டால் பூசி, 10 அடி வரைக்கும் தண்ணீர் புகாத வண்ணம் பார்த்து கொண்டனர்.

காலத்தை வென்று நிற்கும் இந்த கட்டிடத்துக்கு தற்போது டெல்லி விமானங்கள் மூலம் புதிய சோதனை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் இணை பொது இயக்குனர் பி.ஆர். மணி கூறுகையில்,

இப்பகுதியில் தாழ்வாக பறக்கும் விமானங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் விமானங்கள் செல்லும் பாதையை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் விமான நிலையத்தில் புதிய ஓடுதளம் ஒன்று அமைக்கப்படும் வரை எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது என்றார் அவர்.

இது குறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,

சுமார் 4.4 கிமீ., தூரம் கொண்ட இந்த ஓடுதளம் நாட்டின் மிகப்பெரிய ஓடுதளமாகும். இதில் தான் ஏர்பஸ் ஏ 380, ஆன்டனப் அன் 225 உள்ளிட்ட சொகுசு விமானங்கள் பறக்கின்றன. இது துவக்கப்பட்ட பின் டெல்லி விமான நிலையம் ஒரு மணி நேரத்துக்குள் சுமார் 65 முதல் 70 விமானங்களை இயக்கும் திறன் பெற்றுள்ளது.

இதன் பின்னர் அனைத்து விமானங்களும் சுமார் 2.5 கிமீ., தூரம் கூடுதலாக குதுப் மினாரை விட்டு விலகி செல்கின்றன என்றார்.

இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் விமான போக்குவரத்துக்கான நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், இது குறித்து எனக்கு எந்த தகவலும் இல்லை. அப்படி எதுவும் பாதிப்பு ஏற்படும் என்றால் தேவையான ஆய்வு செய்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

கருத்துகள் இல்லை: