டெல்லி: ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த ஆண்டு ரூ.6.70 கோடி மின்சாரம் செலவாகியுள்ளது.
டெல்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் அனல் காற்று வீசி வரும் நிலையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடும், மின் தட்டுப்பாடும் நிலவுகிறது.
பஞ்சாபில் கடும் மின் தட்டுப்பாடு காரணமாக அரசு அலுவலகங்களில் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
நிலைமை இப்படியிருக்க டெல்லியில் ஜனாதிபதி மாளிகைக்கு கடந்த ஆண்டு மட்டும் ரூ.6.70 கோடி மின்சாரம் செலவாகியுள்ளதாம்.
அதற்கு அடுத்தப்படியாக நாடாளுமன்றத்துக்கு ரூ.6.25 கோடியும், பிரதமரின் இல்லத்துக்கு ரூ.50.35 லட்சமும் மின் கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மும்பையைச் சேர்ந்த சேத்தன் கோத்தாரி என்பவர் இந்த விவரங்களைப் பெற்றுள்ளார்.
கருணை கொலை கோரும் விவசாயிகள்..
இந் நிலையில் பருவமழை பெய்யாததால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநிலம் பழமா மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் பகுதி விவசாயிகள் எங்களை கருணை கொலை செய்யுங்கள் என்று ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
கடந்த 2006ம் ஆண்டு முதல் மழையையே பார்த்திராத இந்தப் பூமியில் விவசாயிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அப் பகுதி விவசாயிகள் அனுப்பியுள்ள கடிதத்தில்,
நாங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருகிறோம். உணவு, குடிநீர் இல்லாமல் உழவு மாடுகள், வண்டிகளை விற்றுவிட்டோம். நிலத்தையும் நகைகளையும் விற்றுவிட்டோம். இனி விற்க எங்களிடம் ஏதுமில்லை.
இதனால் கெளரவத்துடன் சாக அனுமதிக்க வேண்டும். வறட்சியால் போராடும் எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். அதில் 2,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக