திங்கள், 8 ஜூன், 2009

முஸ்லீம் இனப்படுகொலையை சரிவுக்கு காரணம்-அத்வானியின் ஆலோசகர்

Kulkarni
டெல்லி: குஜராத் கலவரம் காரணமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து முக்கிய கட்சிகள் விலகின. முக்கிய கட்சிகள் விலகியதால் பாஜகவுக்கு பெரும் சரிவு ஏற்பட்டது என்று பாஜகவின் முக்கிய ஆலோசகரும், அத்வானிக்கு நெருக்கமானவருமான சுதீந்திரா குல்கர்னி கூறியுள்ளார்.



குஜராத் முஸ்லீம் இனப்படுகொலையை காரணமாக முஸ்லீம்களின் கணிசமான வாக்குகளை பாஜக இழந்திருப்பதாகவும் குல்கர்னி கூறியுள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்தவரான குல்கர்னி, அத்வானிக்கு மிகவும் நெருக்கமானவர், பாஜகவின் முக்கிய ஆலோசகர்களி்ல் ஒருவரும் ஆவார்.

டெஹல்கா இதழுக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் குல்கர்னி பாஜகவின் தோல்விக்கான காரணங்களை அலசியுள்ளார்.

அதில் குல்கர்னி கூறியிருப்பதாவது.. 2004 தேர்தல் தோல்விக்குப் பின்னர் பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிப் போய் விட்டன.

அவர்கள் விலகுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தோல்வி அடைந்தது முக்கிய காரணம் இல்லை. ஆனால், 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த பெரும் கலவரத்தை தொடர்ந்தே அவை பாஜகவை விட்டு விலகின.

பாஜகவுடன் தொடர்ந்து நீடித்தால் முஸ்லீம்களின் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற பயத்தில் அவை தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகிச் சென்றன.

இந்த பிரச்சினையை 2004 முதல் இன்று வரை பாஜக தீர்க்க முயற்சிக்கவில்லை. இதன் விளைவாக மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழகத்தில் கூட்டணிக்கு கூட யாரும் பாஜகவிடம் வராத நிலை ஏற்பட்டு விட்டது.

அதேபோல கேரளாவிலும் கூட்டணிக்கு யாரும் கிடைக்கவில்லை. இதை விட முக்கியமாக ஒரிசாவில் முக்கியமான கூட்டணிக் கட்சி ஒன்று அதிரடியாக விலகியது.

1998 மற்றும் 99 ஆகிய ஆண்டுகளில் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் பாஜகவால் ஆட்சி அமைக்க முடிந்ததற்கு முக்கிய காரணமே, திறமையான கூட்டணியை அமைத்ததால்தான்.

குறிப்பாக மேற்கு வங்கத்தில் திரினமூல் காங்கிரஸ், தமிழகத்தில் முதலில் அதிமுக, பின்னர் திமுக, ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆகிய முக்கிய கட்சிகளை தனது கூட்டணியில் சேர்க்க முடிந்தது பாஜகவால்.

அதேபோல ஒரிசாவில் பிஜூ ஜனதாதளத்துடன் அமைந்த கூட்டணியால் பெரும் பலன் கிடைத்தது.

இந்திய அரசியலில் காங்கிரஸை விட பாஜகவின் நிலை மோசமாக உள்ளதை மறுக்க முடியாது. காங்கிரஸ் பல மாநிலங்களிலும் வியாபித்துள்ளது. ஆனால் பாஜகவின் இருப்பு குறைந்து விட்டது.

143 எம்.பிக்களை கொண்டுள்ள மேற்கு வங்கம், ஆந்திரா, தமிழகம், கேரளாவில் பாஜகவுக்கு ஒரு சீட் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் காங்கிரஸோ 60 சீட்களை வென்றுள்ளது.

எனவே முதலில் இந்த பலவீனத்திலிருந்து வெளியே வர பாஜக முயல வேண்டும். தேர்தல் பலத்தை அதிகரிக்க முயல வேண்டும். குறிப்பாக மேற்கண்ட நான்கு மாநிலங்களிலும் அதிக இடங்களை வெல்வதற்கான வழிகளை பாஜக யோசிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், காங்கிரஸுக்கு சமமாக தன்னை பாஜக கருத முடியாது.

இதற்கு மேல் எதுவும் சொல்ல நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குல்கர்னி.

கருத்துகள் இல்லை: