வியாழன், 25 ஜூன், 2009

முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு தர மார்க்சிஸ்ட் தயார் : இழந்த ஓட்டுக்களை மீட்க முயற்சி


கோல்கட்டா : முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு அளிக்க மேற்கு வங்கத்தில் உள்ள புத்ததேவ் தலைமையிலான மார்க்சிஸ்ட் அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், படுதோல்வி அடைந்ததற்கு, மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்கள் ஓட்டுக்களை இழந்தது தான் காரணம். அதனால், இனியாவது முஸ்லிம்கள் ஓட்டுக்களை மீட்டாக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி மேலிடம் உணர்ந்துள்ளது.

முப்பதாண்டு மார்க்சிஸ்ட் கோட்டை தகர்ந்து போவதை தடுக்க பல வழிகளில் நடவடிக்கை எடுத்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி, முதல் கட்டமாக முஸ்லிம்களை ஈர்க்க அவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளது. பணக்காரர்களை தவிர்த்து, ஏழை முஸ்லிம்கள் எல்லாருக்கும் ஒதுக்கீடு தருவது என்றும், அவர்களை உட்பிரிவு அடிப்படையில், இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என்றும் திட்டமிட்டுள்ளது மேற்கு வங்க அரசு. தென் மாநிலங்களில் தான், முதன் முதலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன. கர்நாடகாவில், முஸ்லிம்களுக்கு உட்பிரிவின் அடிப்படையில் ஒதுக்கீடு உள்ளது. தமிழகத்தில் தான் முதன் முதலில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது பிரச்னையின்றி செயல்படுத்தப்பட்டது. மத அடிப்படையில் தந்தால் பிரச்னை வரும் என்பதை அறிந்து, அவர்களில் உட்பிரிவுகளை கணக்கிட்டு, இதர பிற்படுத்தப்பட் டோரில் சேர்த்து ஒதுக்கீடு தர முடிவு செய்தது.

ஆந்திர அரசு நேரடியாக ஒதுக்கீடு தர முடிவு செய்த போது, அதை சுப்ரீம் கோர்ட் நிராகரித்தது. தமிழ்நாடு பாணியில் முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு தருவது பற்றி இப்போது ஆந்திரா பரிசீலித்துவருகிறது. இந்த வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள முஸ்லிம்களை கணக்கெடுத்து, அவர்களில் பெரும்பாலோரை வறுமைக்கோட்டின் கீழ் கொண்டு வந்து, இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து ஒதுக்கீடு அளிக்கலாம் என்று தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் உட்பட மொத்த ஒதுக்கீடும் 50 சதவீதத்துக்கு மேல் போகக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், 27 சதவீதத்துக்குள் முஸ்லிம்களுக்கும் ஒதுக்கீடு அளிப்பது சாத்தியமல்ல. அதனால், மொத்த ஒதுக்கீட்டை 50 சதவீத்துக்கு மேல் உயர்த்துவது என்றும் மார்க்சிஸ்ட் அரசு பரிசீலித்து வருகிறது. அப்படி செய்தால், கோர்ட் தலையீட்டுக்கு வழி வகுத்து விடும் என்றும் தெரிந்தும், தைரியமாக மார்க்சிஸ்ட் அரசு செயல்படுத்த உள்ளது.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை: