திங்கள், 15 ஜூன், 2009

சாதியை ஒழிக்குமா சமத்துவபுரம்...?

தமிழகத்தில் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்யும்போது ஜன்னல்வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தால், ஊருக்கு ஒதுக்குப்புறமாக தீப்பட்டி அடுக்கிவைத்து போன்று காட்சி தருபவைகள்தான் தொகுப்புவீடுகள் என்று அழைக்கப்படும் சமத்துவ புரங்கள். இந்த சமத்துவபுரங்கள் சாதியை ஒழிக்கவந்த பெரியாரின் பெயரால், பெரியார் வழிவந்த முதல்வர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டவை . சாதியை ஒழிக்க சமத்துவபுரம் என்று சொன்ன அரசு அந்த சமத்துவபுரத்தில் யாருக்கு இடமளிக்கவேண்டுமேனில், சாதி இல்லை என்று சொல்லக்கூடிய சாதியை மறுக்கக்கூடிய மக்களுக்கு தான் இடமளிக்கவேண்டும். அப்போதுதான் இந்த சமத்துவ புரங்கள் தோற்றுவிதத்தில் அர்த்தம் இருக்கும். ஆனால் அரசு செய்தது என்ன? சாதியை ஒழிக்க உருவாக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை சாதி அடிப்படையில் ஒதுக்கீடு செய்தது.

ஒவ்வொரு சமத்துவபுரத்திலும் ஆதிதிராவிடர்களுக்கு 40 வீடுகள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 வீடுகள், பிராமணர்கள் உள்பட இதர சாதியினருக்கு 10 வீடுகள் என 100 வீடுகள் வீதம், மொத்தம் 145 சமத்துவபுரங்களிலும் 14 ஆயிரத்து 500 வீடுகள் அனைத்து அடிப்படை வசதிகளுடனும் கட்டப்பட்டு, அந்தந்த சாதியினர்க்கு ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன.[இது முதல்வர் கூறியதாக பத்திரிக்கையில் வந்த பட்டியல்தான்] இதில்லிருந்தே விளங்கிக்கொள்ளலாம் சமத்துவ புரங்கள் சாதியை ஒழிக்கவில்லை. மாறாக சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒரு அபார்ட்மென்டில் பலதரப்பட்ட சாதியினர் வசிப்பார்களே அதே போன்று தான் சமத்துவபுரங்களும் என்பதுதான் உண்மை. இதற்காக அரசின் பலகோடி ரூபாய்கள் விழலுக்கு இறைத்த நீரானதுதான் மிச்சம்.

மேலும், பெரியார் வாழ்ந்த 95 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் பெரியார் பெயரால் மேலும் 95 சமத்துவபுரங்களை அமைத்து, அங்கே பெரியாரின் சிலைகளையும் நிருவப்போகிறாராம் முதல்வர். ஏற்கனவே கட்டப்பட் சமத்துவ புரங்கள் சில இடங்களில் மக்கள் குடியேறாமல் சிதிலமடைந்து காட்சி தருகிறது. மக்கள் குடியேறிய சமத்துவ புறங்களில் 99 சதவிகிதம் தலித் மக்கள்தான் வாழ்கின்றனர். வேறு எந்த சாதியினரும் அங்கு குடியேற விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. பிராமணர்கள் உள்பட இதர சாதியினருக்கு 10 வீடுகள் என்றார்! நாமறிந்தவரை எந்த சமத்துவபுரத்திலாவது பிராமணர்கள் வசிப்பதுண்டா?

மேலும்,ஏற்கனவே வீடு இருக்கும் நிலையில் சமத்துவ புறங்களில் வீடு பெற்றுக்கொண்ட சிலர் அதை உள் வாடைகைக்கு விடுவதாகவும் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். எனவே சாதிகளை சமத்துவ புரங்கள் ஒருபோதும் ஒழித்துவிடாது. சாதி ஒழிய வேண்டுமெனில் இடமாற்றம் தேவையில்லை .தேவை மனமாற்றமே! பெரியார் சொன்னாரே! 'இன[சாதி]இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்று. அந்த இஸ்லாத்தால் மட்டுமே இனவெறியையும், மதவெறியையும், சாதிவெறியையும் ஒழித்து சமத்துவத்தை உருவாக்கமுடியும். அதைவிட்டு அரசு பள்ளியில் பாலகனை சேர்க்கப்போனால் படிவத்தில் என்ன சாதி? என்று கேட்டுக்கொண்டு, மறுபுறம் சாதியை ஒழிக்க சமத்துவ புரங்கள்! என்றால் கேலிக்கூத்தன்றி வேறென்ன!

சமத்துவ புரங்கள் அரசியலுக்கு உதவும்! ஆனால் சாதியை ஒழிக்க உதவாது என்பதை புரிந்துகொண்டு இந்த திட்டத்திற்கு ஒதுக்கும் தொகைகளை வேறு பயனுள்ள திட்டங்களுக்கு ஒதுக்க அரசு முன் வரவேண்டும் என்பதே மக்களின் அவா!

கருத்துகள் இல்லை: