சனி, 9 அக்டோபர், 2010

இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது-தில்லி இமாம் புகாரி உறுதி!

புதுதில்லி,அக்.7: அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதி கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று தில்லி ஜாமா மஸ்ஜித் தலைமை இமாம் மெüலானா சையத் அகமது புகாரி திட்டவட்டமாக அறிவித்தார்.
தில்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மத அறிஞர்கள் தில்லியில் வியாழக்கிழமை கூடி அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தார்கள்.

அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மசூதி கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்குத் தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

"அலாகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர்பாக தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மசூதிக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபர் மசூதி பிரச்னை தொடங்கியது முதல் அலாகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத்துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவைதான்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக்கொண்டு, வகுப்புவாத சக்திகளுக்குத்தான் காங்கிரஸ் துணைபோய்க்கொண்டிருக்கிறது.இன்றைய கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. முஸ்லிம்கள் தனிச்சட்ட வாரிய உறுப்பினர்கள் சிலர் தாங்களாகவே சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு புறக்கடை வழியாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரியான சமரசத் தீர்வை அவர்கள் காணப் போகிறார்கள்? இடிக்கப்பட்ட இடத்திலேயே மசூதியை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது.இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். இன்றைக்கு தில்லியில் கூடிய நாங்கள் எங்களுடைய அமைப்பு வாயிலாக, அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம்' என்றார் சையத் அகமது புகாரி.

நன்றி;தினமணி.

கருத்துகள் இல்லை: