சனி, 2 அக்டோபர், 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு விவகாரம்: அவசரமாக கூடியது தலைமை நிர்வாக குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிர்வாக குழு அவரசகூட்டம் அக்டோபர் 1-ம் தேதி மாலை 4:30 மணிக்கு இன்று சென்னையில் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யு. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் ஜே. எஸ். ரிஃபாயி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் குணங்குடி ஹனிபா மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, துணை பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. பாபரி மஸ்ஜித் இடம் யாருக்குச் சொந்தமானது என்ற வழக்கில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்ட நடைமுறைகளை ஏளனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கருதுகின்றது விடுதலைப்பெற்ற இந்தியாவில் வழங்கப்பட்ட மிக மோசமான கட்டப்பஞ்சாயத் தீர்ப்பாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது ஒரு தரப்பு மக்களின் மத நம்பிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு 450 ஆண்டு காலம் முஸ்லிம்கள் வழிப்பாடு நடத்திய இடம் பள்ளிவாசல் இல்லை என்றும் அது ராமர் பிறந்த இடம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பது நடைமுறைச் சட்டங்களுக்கு முரணாக புராணங்களின் அடிப்படையில் அளிக்கப்பட்ட தீர்ப்பாகும். லக்னோ பெஞ்சின் இந்த நடைமுறையைப் பின்பற்றி; இனி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினால் இனி நாட்டில் எவரும் தமது உரிமைகளை தக்க வைக்க இயலாது. எனவே உத்திரப்பிரதேச மாநில சன்னி வக்ஃப் வாரியம் அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய எடுத்துள்ள முடிவை தலைமை நிர்வாக குழு வரவேற்கிறது.

2. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது டிசம்பர் 6, 1992ல் அப்பள்ளிவாசல் மீண்டும் அதே இடத்தில் கட்டித் தரப்படுமென அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் வாக்குறுதி அளித்தார். அன்று நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை இன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி நிறைவேற்ற வேண்டுமென இந்நிர்வாக குழு கேட்டுக் கொள்கிறது.

3. அத்வானி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு உத்திரபிரதேச ராய்பரேலி நீதிமன்றத்தில் 18 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த வழக்கில் விசாரணை துரிதமாக நடைபெற்று குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட மத்திய அரசு ஆவனச் செய்ய வேண்டுமென இந்நிர்வாக குழு கோருகின்றது.

4. பாபரி மஸ்ஜித் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதி பரிபாலண முறைக்கு விரோதமாக அமைந்த போதினும் அது இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க சட்டவழியாக கடும் முயற்சி மேற்கொள்ளவோம். அதுவரை சட்டம் ஒழுங்கை மதிக்கும் இந்தியர்கள் என்ற அடிப்படையில் அமைதியும் நல்லிணக்கமும் நாட்டில் தழைத்தோங்கும் வகையில் செயல்பட அனைவரையும் இந்நிர்வாக குழு கோருகின்றது.

கருத்துகள் இல்லை: