சனி, 9 அக்டோபர், 2010

ஃபலஸ்தீன் பெண்மணியை இஸ்ரேலிய ராணுவம் அவமானப்படுத்தும் காட்சி யூ ட்யூபில்

மேற்குக்கரை,அக்.8:கைதுச் செய்யப்பட்ட ஃபலஸ்தீன் பெண்மணி ஒருவரை சிறையில் வைத்து இஸ்ரேலிய ராணுவம் அவமானப்படுத்தும் காட்சியை வீடியோ காட்சிகள் பகிர்ந்துக் கொள்ளும் இணையதளமான யூ ட்யூபில் வெளியாகியுள்ளன.

கண்ணைக்கட்டி நிறுத்தப்பட்ட பெண்மணியை சுற்றிலும் நின்றுக்கொண்டு இஸ்ரேலிய ராணுவத்தினர் நடமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.

தன்னை சுற்றிலும் நின்றுக் கொண்டு அரபி பாடல்களை பாடி நடனமாடி சிரித்து கேலிச்செய்த வீடியோ மிகவும் அவமானகரமானது என 35 வயது ஃபலஸ்தீன் பெண்மணியான இஹ்ஸான் அல் தபாப்ஸி தெரிவிக்கிறார்.

தெற்கு மேற்குகரையில் நுபா என்ற கிராமத்தைச் சார்ந்தவர் இவர். அரசு சாரா வழக்கறிஞர் அமைப்பான ஃபலஸ்தீன் சிறைக்கதிகள் கிளப்புடன் தான் தொடர்புக் கொண்டுள்ளதாகவும், இஸ்ரேலிய ராணுவத்தினருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தபாப்ஸி தெரிவித்தார்.

போராளி இயக்கமான இஸ்லாமிக் ஜிஹாதில் உறுப்பினர் எனக் குற்றஞ்சாட்டி கடந்த 2007 ஆம் ஆண்டு தபாப்ஸி கைதுச் செய்யப்பட்டார். தொடர்ந்து 22 மாதம் சிறைத்தண்டனை அனுபவித்தார். பெத்லஹிமிற்கு அடுத்துள்ள எட்சியோன் சிறையில் வைத்து கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, கண்களை கட்டியவாறு சுவரோடு சேர்த்து நிறுத்தியவாறு, குடிபோதையிலிருந்து இஸ்ரேலிய ராணுவத்தினர் பாட்டுப்பாடி நடனமாடி கேலிச்செய்தனர். "இதனை வீடியோவில் பதிவுச் செய்தபொழுது நான் அதனை வெளியிடக்கூடாது என வேண்டுகோள் விடுத்தேன்" என தபாப்ஸி தெரிவிக்கிறார்.

இச்சம்பவம் நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பெண்களின் கண்ணியத்தின் மீது நடத்தப்பட்ட அத்துமீறல் என ஃபலஸ்தீன் அதாரிட்டியின்(மேற்குகரை) பிரதமர் ஸலாம் ஃபய்யாத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இனவெறிதான் இச்சம்பவத்திலிருந்து வெளிப்படுவதாக ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் ஸமி அபு ஸுஹ்ரி தெரிவிக்கிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துகள் இல்லை: